டிப்ஸ் டிப்ஸ்



என் சமையலறையில்

பனீர் சமைத்த பிறகு, கட் பண்ணிய பனீர் மீந்து விட்டதா? அதை வெந்நீரில் நனைத்து,ஃப்ரிட்ஜில் வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். கேரட்டை நன்கு வேக வைத்து, வெண்ணெய் போல மசித்து, அதில் தேன் சேர்த்துக் கலக்கி பிரெட்டில் தடவி சாப்பிடலாம். புது ஜாம் ரெடி! தோசைக்கு மாவு அரைக்கும் போது சிறிது சோயா பீன்ஸ் அல்லது சோயா பனீரையும் ஊற வைத்து அரைக்கவும். தோசை ருசியாக, மென்மையாக வரும். உடலுக்கும் நல்லது.
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

கோவைக்காய் பழுத்துப் போய்விட்டால் அதை வில்லைகளாக அரிந்து கொள்ளவும். அதை உப்பு கலந்த தயிரில் ஊற வைத்து, உலர வைத்து எடுத்து வைக்கவும். இதை வற்றல் குழம்பில் சேர்த்தால், குழம்பு ருசியாக இருக்கும். இரண்டு டம்ளர் கரும்புச் சாறில் வாழைப்பழத்தை மசித்துக் கலக்கவும். அதில் சிறிது உப்பு, 100 கிராம் வெல்லம் சேர்த்து, கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது நெய்யில் கடுகு, மிளகாய் வற்றல் தாளித்துக் கொட்டினால் கரும்புப் பச்சடி ரெடி.

காராமணி போன்ற பயறு வகைகளை வேக வைக்கும் போது, தண்ணீருடன் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால், சீக்கிரம் வெந்துவிடும்.
காய் சேர்க்காத தக்காளி அல்லது புளிக்குழம்பு செய்யும் போது சிறிது இஞ்சி, கசகசா, மராட்டி மொக்கு சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை குழம்பில் போட்டுக் கொதிக்க வைத்தால் வாசனையாக இருக்கும்.
- மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி-9.

ஃபில்டர் காபியோ, காபி மேக்கரில் போடும் காபியோ... தூளைப் போடும் போது ஒரு சிட்டிகை சுக்குத் தூள் சேர்த்துப் போடவும். சுவையும்மணமும் சூப்பரோ சூப்பர்.
- கே.ராணி, சென்னை-91.

பிடி சாதத்தை எடுத்து நன்றாக மசித்து, மாவில் கலந்து வடை சுட்டால் மிருதுவாக, எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

தோசைக்கல்லில் ஒரு சிறிய துண்டு பெருங்காயத்தை நறுக்கிப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு வதக்கியெடுக்கவும். பிறகு தோசை வார்த்தால், தோசை சுலபமாக வார்க்க வரும்... மணமாகவும் இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

கூட்டுக்கோ, குழம்பு வகைகளுக்கோ தேங்காய் அரைக்கும்போது, 1/2 டீஸ்பூன் கசகசாவையும் 8 முந்திரிப் பருப்புகளையும் சேர்த்து அரைக்கவும். சுவை அள்ளும்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.

உருளைக்கிழங்கை அரை வேக்காடாக வேக வைத்து, நன்கு வடித்தெடுக்கவும். பிறகு ரோஸ்ட் செய்தால் பாதியளவு எண்ணெய் கூட செலவாகாது.  கட்லெட் செய்யும் போது உருளைக்கிழங்குக்கு பதிலாக சேனைக்கிழங்கு அல்லது பிடிகருணையை வேக வைத்து, பிசைந்துசெய்யலாம். புது ருசி!
- ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை.

பச்சைக் காய்கறிகள் போட்டு சாலட் செய்யும் போது, அதில் இரண்டு டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றிக் கலக்கவும். கூடுதல் சுவை! வெல்லம் சேர்த்து செய்யும் வேப்பம்பூ பச்சடியை இறக்கிய பின், 2 டீஸ்பூன் தேன் சேர்த்தால் அதீத ருசி.

வெள்ளரிக்காயைத் துருவி, கோதுமை மாவுடன் உப்புச் சேர்த்து, தண்ணீர் விடாமல் சிறிது நல்லெண்ணெய் மட்டும் விட்டு, கொஞ்சம் சீரகமும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்யலாம். அருமையாக இருக்கும்.
- என்.ஜரினாபானு, திருப்பட்டினம்.