இனிது இனிது வாழ்தல் இனிது!



‘தற்பெருமை என்பது அதைப் பேசுகிறவரின் சிறுமையை உணர்த்துகிற விஷயம்’ என்றொரு வாசகம் உண்டு. தன்னைப் பற்றித் தானே பெருமை பேசுகிற பல மனிதர்களும் உண்மையில் சிறுமை நிறைந்தவர்களாகவே இருப்பார்கள்.

எந்த இடத்தில் தற்பெருமை பேசுவதும் தவறுதான்.  திருமண உறவுகளைச் சிதைக்கிற பல விஷயங்களில் முக்கியமானது தற்பெருமை மனோபாவம். சில மனிதர்களுக்கு திருமண உறவை விடவும் தற்பெருமை பெரிதாகத் தோன்றும். அப்படிப்பட்ட கணவன்-மனைவியால் திருமண பந்தத்தில் அடக்கத்துடன் இருக்க முடியாது.

தற்பெருமை பேர்வழிகள், தன் துணையை தன் வாழ்க்கையின் தேவையற்ற ஒரு விஷயமாகவே பார்ப்பார்கள்... நடத்துவார்கள். திருமணத்தின் புனிதத்தை அறிந்திருக்க மாட்டார்கள். வாழ்க்கைத்துணையும் வீட்டு வேலையாட்களைப் போன்ற ஒருவர் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்கும். இணையாக நடத்தப்படாத இந்த வெறுப்பின் காரணமாக பெரும்பாலான திருமணங்கள் பிரிவை நோக்கி நகர்கின்றன. தற்பெருமை பேசுகிற நபர்கள் வாழ்க்கையில் ஒரு போதும் வளர்வதே இல்லை!

* தற்பெருமை பேசும் நபர்களிடம் சில குணங்களை வெளிப்படையாகப் பார்க்கலாம்.

*முதல் விஷயம் தனது தற்பெருமை சுபாவம் இயல்பான ஒன்று என்றே அவர்கள் நினைப்பார்கள்.

*தம்மைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளையும் கதைகளையும் வைத்திருப்பார்கள்.

*துணையைக் காயப்படுத்தத் தயங்க மாட்டார்கள். அப்படிக் காயப்படுத்துவது தன் துணைக்குத் தான் செய்கிற மிகப்பெரிய நன்மை என்று வியாக்கியானம் செய்வார்கள்.

*தற்பெருமை பேசுகிற தன் குணத்தை தன் துணை உள்பட, எல்லோரும் விரும்ப வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

*தன்னை தன் துணையும் மற்றவர்களும் எப்போதும் பாராட்ட வேண்டும் என்றும் தனக்குப் போதுமான அளவு பாராட்டு கிடைக்கவில்லை என்றும் நினைப்பார்கள். அதிகபட்சமாக பாராட்டப்பட வேண்டிய அளவுக்குத் தான் தகுதியானவர் என்றும் நினைப்பார்கள்.

*வானத்திலிருந்து இறங்கி வந்தவர் போல தன்னை ஸ்பெஷலான நபராகக் கற்பனை செய்து கொள்வார்கள்.

*தன் துணையைப் பற்றி இவர்களுக்கு எதிர்மறையான எண்ணமே மேலோங்கி இருக்கும். துணையின் நிறைகளைப் பார்க்காமல் குறைகளை மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

சமூகத்தில் பெரிய பதவிகளிலும் அந்தஸ்திலும் இருக்கிற சிலரிடம் இந்தத் தற்பெருமை மனோபாவத்தை சகஜமாகப் பார்க்கலாம். தமது பாசிட்டிவ் விஷயமே அந்தத் தற்பெருமை குணம்தான் என்றும் அவர்கள் நம்புவார்கள்.

அவர்களால் யாருடனும் இயைந்து வாழ முடியாது. ஒருவித அகந்தையுடனேயே வாழ்வார்கள். தற்பெருமை பேசும் தமது குணத்துக்கு ஏதேனும் பங்கம் வந்தால், அந்த விஷயத்தையோ, நபரையோ தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள். இந்த அகந்தை மனநிலையின் ஆரம்பக் கட்டத்தை குடும்பங்களில் கணவன் அல்லது மனைவியிடம் பார்க்கலாம்.

ஊதின பலூன் மாதிரி இருக்கும் இவர்கள், தற்பெருமையால் பிரச்னைகளை சந்திக்கிற போது, காற்று போன பலூன் மாதிரி தொய்வடைந்து போவார்கள். உலகமே தமக்காகத்தான் இயங்குகிறது என்கிற மாதிரியான பொய்யான பெருமையையும் பேராசையையும் சுமந்து கொண்டிருப்பார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்களது தோற்றம் கம்பீரத் தோரணையைத் தந்தாலும், உண்மையில்
உள்ளுக்குள் அப்படி இருக்க மாட்டார்கள்.

தற்பெருமை அதிகமுள்ளவருடன் வாழ்வது என்பது துணைக்கு மிகப்பெரிய சவால்தான். வாய்ச்சவடால் பேர்வழிகளான இவர்களால், தான் பேசுகிற பெருமையில் ஒன்றைக்கூட நிரூபிக்க முடியாது என்பது துணைக்கும் தெரிந்திருக்கும். தன்னைச் சுற்றி புகழும் ஹீரோ இமேஜும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே வளர்ந்திருப்பார்கள். அதனால் சுயநலவாதிகளாகவும் இருப்பார்கள்.தமது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வாழ்க்கைத்துணை அமையவில்லை என்கிற மாபெரும் வருத்தம் இவர்களுக்கு மேலோங்கி இருக்கும்.

திருமண வாழ்க்கையும் தமக்கு அமைந்த துணையும் போதுமான அளவு தம் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் நினைப்பார்கள்.  அதனால் இத்தகைய மனநிலை கொண்ட ஆண்களும் பெண்களும் மிகச் சுலபமாக திருமணத்தைத் தாண்டிய தகாத உறவில் ஈடுபடுவார்கள்.

அந்த உறவு தவறு என்று நினைக்காமல், அது தமது உரிமை, அதற்குத் தாம் தகுதியானவர் என்றே அதை நியாயப்படுத்துவார்கள். துணையை ஏமாற்றத் தமக்கு முழு உரிமை இருப்பதாக நினைப்பார்கள். அவர்களது செயல் ஏதேனும் கஷடத்தைக் கொடுத்தால் அப்போது அதற்கு விதியைக் காரணம் காட்டித் தப்பிப்பார்கள்.

தற்பெருமை பார்ட்டிகள் எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் அடுத்தவருடன் இணைந்து குழுவாகச் செயல்பட விரும்ப மாட்டார்கள். ‘கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாக இரு... சாவு வீட்டில் பிணமாக இரு...’ என வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்வார்கள். அதற்கு மிகப்பொருத்தமான நபர்கள் இந்தத் தற்பெருமை மனிதர்கள். கணவன் அல்லது மனைவி என்பவர் தனக்கு இணையானவர்,
தன்னில் சரி பாதி என நினைக்காமல், எல்லா இடங்களிலும் தாமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என நினைப்பார்கள். தகுதியைவிட அதிகம் எதிர்பார்க்கிற, அதிக
உரிமைகளைக் கேட்கிற இந்த மனநிலை வாழ்க்கைத்துணையிடமும் தொடரும். தாம்பத்தியத்தில் பிளவை ஏற்படுத்தும்.

* உங்கள் துணை தற்பெருமை பார்ட்டியா என எப்படிக் கண்டுபிடிப்பது?

*உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் எப்போதும் மோசமாகப் பேசவும் நடத்தவும் செய்கிறாரா? அவர் அப்படிச் செய்வது சரி என்று வாதாடுகிறாரா?

*தனக்கு வருகிற பிரச்னைகளுக்குத் தன் நடத்தை காரணம் என்பதை அறியாமல், யாரோ வேண்டுமென்றே தனக்குக் கெடுதல் செய்துவிட்டதாகப் புலம்புகிறாரா?

*வாழ்க்கைத்துணைக்கு நடக்கிற சின்னச் சின்ன நல்ல விஷயங்களைக் கூட சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் பொறாமையில் புழுங்குகிறாரா?

*தனது மனநிலை மோசமானது என்பதை உணராமல், அதைத் தனது அதீத லட்சிய வெறியின் வெளிப்பாடாகப் பார்க்கிறாரா?

*தான் செய்கிற வரை லஞ்சம், திருட்டு போன்ற சமூக விரோதச் செயல்கள் கூட தவறானவை அல்ல என வாதிடுகிறாரா?

*குழந்தைகளையும் மனைவியையும் அடிப்பது கூட அவர்களுக்குத் தான் செய்கிற நல்லது என நம்புகிறவரா?

*தனது சுயநலப் போக்கை தன்னம்பிக்கையின் வெளிப்பாடு எனப் பேசுகிறவரா?

*தான் சொல்லும் அறிவுரைகளை, அவை நன்மை பயக்காது எனத் தெரிந்தாலுமே, தன் துணை நன்றியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பவரா?

*‘என்னிடம் அதிகமாக இருந்தால் நான் சந்தோஷமாக இருப்பேன்’ என்பவரா? அந்த எதிர்பார்ப்புக்குத் தான் தகுதியானவர் என்று அடித்துப் பேசுபவரா?

*தப்பித் தவறி எங்கேயாவது வெற்றியைச் சந்திக்க நேர்ந்தால், அதற்குத் தனது தற்பெருமை நடவடிக்கைதான் காரணம் என நினைப்பவரா?

எப்போதும் தற்பெருமை பேசுகிற உங்கள் வாழ்க்கைத்துணை, திடீரென ‘எனக்குப் புரியலை... உங்க அளவுக்கு நான் புத்திசாலியில்லை’ என இறங்கி வந்து பேசுகிறாரா? அவர் மாறிவிட்டதாக நம்பி விடாதீர்கள். உங்களைத் தாக்க அவர் பிரயோகிக்கிற ஆயுதம் அது என உஷாராகுங்கள்!

*கடைசியாக தற்பெருமை பார்ட்டிகளுக்கு ஒரே ஒரு அட்வைஸ்...

*இடம், பொருள், ஏவல் அறிந்து நடந்து கொள்ளுங்கள். வீட்டில் உங்கள் துணைக்கு இணையாக, குழந்தைக்குப் பெற்றோராக, வேலையிடத்தில் ஊழியராக... இப்படி அந்தந்த இடமறிந்து நடந்து கொள்ளுங்கள்.

*எல்லோரிடமும் நன்றி உணர்வுடன் இருங்கள். *உறவுகளைக் கொண்டாடக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஊதின பலூன் மாதிரி இருக்கும் இவர்கள் தற்பெருமையால் பிரச்னைகளை சந்திக்கிற போது, காற்று போன பலூன் மாதிரி தொய்வடைந்து போவார்கள்.

தற்பெருமை பேசுகிற நபர்கள் வாழ்க்கையில் ஒரு போதும் வளர்வதே இல்லை!

(வாழ்வோம்!)
எழுத்து வடிவம்: மனஸ்வினி
படங்கள் நன்றி: மது இந்தியா போட்டோகிராபி
www.facebook.com/mariposachicophotography