எல்லாத்தையும் கடந்து வந்து ஜெயிச்சிட்டோம்ல!



ரிங் ரோடு சுபா’ டீம்

ஒருவரோ, இருவரோ அல்லர்... 18 பேர்... அத்தனை பேரும் பெண்கள்... ரிலீசுக்கு முன்பே பரபரப்பைக் கிளப்பி யிருக்கும் ‘ரிங் ரோடு சுபா’ என்கிற கன்னடப் படத்தில் பணியாற்றியிருக்கிற அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுமே பெண்கள்!

இயக்குநர் (ப்ரியா பெல்லியப்பா), தயாரிப்பாளர் (ரஞ்சனி ரவீந்திர தாஸ்), வசனகர்த்தா (ரேகா ராணி), ஒளிப்பதிவாளர் (ரேஷ்மி சர்க்கார்), இசையமைப்பாளர் (வாணி ஹரிகிருஷ்ணா), மேக்கப் (பூனம் பிரசாத்), காஸ்ட்யூம் டிசைனர் (ஷில்பா கிருஷ்ணா), ஆர்ட் டைரக்டர் (சித்ரலேகா ஷெட்டி), போட்டோகிராபர் (அவிஷா, மெஹி ஷா), கோரியோகிராபர் (மயூரி, சந்திரிகா, ஷக்தி),

பாடலாசிரியர் (வாணி ஹரிகிருஷ்ணா, ரேகா ராணி, ரஞ்சனி), எடிட்டர் (மரியன்), சவுண்ட்இன்ஜினியர் (ஹேமா), எஃபெக்ட்ஸ் (விசாகா), டிடிஎஸ் (ராஷ்மி), கலரிஸ்ட் (ஸோயி) என மிரள வைக்கிறது இந்த ஆல் விமன் டீம்!அறிமுகப் படத்திலேயே இப்படியொரு துணிச்சலான முடிவை எடுத்ததற்காக இதன் இயக்குநர் ப்ரியாவை முதலில் பாராட்டியே ஆக வேண்டும். ப்ரியாவுக்கு மட்டுமின்றி, படத்தில் பணிபுரிந்திருக்கிற பலருக்கும் இதுதான் முதல் படம். 2003ல் பெங்களூருவில் நடந்த ஒரு கொலையின் பாதிப்பில் உருவாகியிருக்கிற க்ரைம் படம் இது.

‘‘முழுக்க முழுக்க பெண்களே உருவாக்கின படம்கிறதால இது ஆண்களுக்கு எதிரானதாகவோ, ஆண்களைக் கெட்டவங்களா காட்டறதாகவோ இருக்காது. தரமான பொழுதுபோக்கு படமா பண்ணியிருக்கோம்...’’ - கேள்வியை முன் வைக்கும் முன்பே பதிலுடன் ஆரம்பிக்கிறார்  இயக்குநர் ப்ரியா பெல்லியப்பா. கர்நாடகாவில் கூர்கை சேர்ந்த ப்ரியா, பூனா ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா படித்தவர்.

‘‘சினிமாங்கிறது பல கலைகளோட கலவை. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி என்னோட ஆர்வங்களும் இப்படி பல துறைகள்ல இருந்திருக்கு. அந்த ஆர்வங்களோட தொடர்ச்சியாதான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். நிறைய விளம்பரப் படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். கன்னடத்துல பிரபலமான இயக்குநர் ரவீந்திர தாஸ்கிட்டதான் சினிமா கத்துக்கிட்டேன். அந்த அனுபவம் கொடுத்த தைரியமும் நம்பிக்கையும்தான் இப்படியொரு முயற்சி வரை யோசிக்கவும் வச்சிருக்கு...’’

தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கிற ப்ரியா, இப்படியொரு பெண்கள் சினிமாவை வேண்டுமென்றே திட்டமிட்டுத்தான் செய்ததாகச் சொல்கிறார்.‘‘மும்பையில ஒர்க் பண்ணினப்ப நான் பார்த்த சினிமா உலகமே வேற... அங்கே ஆண்-பெண் பேதம் பெரிய அளவுல இல்லை. ஆனா சவுத்ல அந்த இடைவெளி ரொம்பப் பெரிசு. பெங்களூருல விரல் விட்டு எண்ணிடக் கூடிய அளவுலதான் லேடி டெக்னீஷியன்ஸ் இருந்தாங்க. ஆனாலும் அவங்க திறமை என்னை பிரமிக்க வச்சது.

இந்தப் படத்துல கமிட் ஆனதும், நானும் புரொடியூசர் ரஞ்சனி ரவீந்திர தாஸும் இதைப் பத்திப் பேசினோம். இந்தியா முழுக்க எங்கெல்லாம் லேடி டெக்னீஷியன்ஸ் இருக்காங்கனு தேடினோம். சொன்னா ஆச்சரியப்படுவீங்க...

இந்தியா முழுக்கவுமே, அப்படி வெறும் 7 சதவிகிதத்தைத்தான் பார்க்க முடிஞ்சது. மேக்கப் மாதிரியான சில துறைகள் ஆண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டதா இருந்ததும் தெரிய வந்தது...

இப்படி ஆரம்பத்துலேருந்தே ஏகப்பட்ட சவால்களை தாண்டித்தான் வந்திருக்கோம்...’’ என்கிற ப்ரியாவின் போராட்டப் பயணத்தில் வழி நெடுகிலும் தடைக் கற்கள்...‘‘எல்லா துறைகள்லயும் பெண்களை வச்சுப் பண்றதுங்கிற எங்களோட ஆசையை செயல்படுத்தறது ரொம்பவே சிரமமா இருந்தது. குறிப்பா மேக்கப் உமனை கண்டுபிடிக்கிறதுதான் பெரிய விஷயமா இருந்தது. மும்பையிலயும் சென்னையிலயும் உள்ள அசோசியேஷன்களை கேட்டுப் பார்த்தோம்.

சினிமா துறையில பெண்கள் மேக்கப் உமனா வேலை பார்க்க அனுமதி கிடையாதுங்கிறதால மறுத்துட்டாங்க. ஆனாலும் நாங்க முயற்சியை விடறதா இல்லை. கர்நாடகா ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸை அணுகினோம்.

இந்த ஒரு படத்துக்கு மட்டும் லேடி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை யூஸ் பண்ண எங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்தாங்க. அப்படித்தான் டெல்லியை சேர்ந்த பூனம் எங்களோட இணைஞ்சாங்க. அது மட்டுமில்லை, எங்க படத்துல ஒர்க் பண்ணியிருக்கிற பெண்கள் எல்லாரும் இந்தியாவோட பல மாநிலங்கள்லேருந்தும் வந்தவங்க.

அதனால அவங்களோட போக்குவரத்து, அதுக்கான பட்ஜெட்னு எல்லாமே கொஞ்சம் சிக்கலாதான் இருந்தது. ஆனாலும் எல்லாத்தையும் கடந்து வந்து ஜெயிச்சிட்டோம்ல... பெண்கள் நினைச்சா எதுவும் சாத்தியம்கிறதுக்கு எங்களோட இந்த முயற்சி இன்னொரு உதாரணம்...’’ ப்ரியாவின் வார்த்தைகளில் வெற்றிக் களிப்பு. ‘‘இந்தப் படத்துல ஒர்க் பண்ணின எல்லாருக்கும் இது மறக்க முடியாத அனுபவமா இருக்கும். எல்லாரும் ஒரே மாதிரி எண்ண ஓட்டத்துல ஒர்க் பண்ணினோம்.

 ஷூட்டிங் ஸ்பாட்ல நாங்க யார், என்ன பேசறோம், எங்களைப் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்கன்ற எந்தக் கவலையும் தயக்கமும் இல்லாம சுதந்திரமா வேலை பார்த்தோம். எங்கள்ல பெரும்பாலானவங்களுக்கு இது முதல் படமும்கூட... அதனால இதுல பெஸ்ட்டா கொடுத்து, திறமையை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்தோட வேலை பார்த்திருக்கோம். படம் ரிலீசுக்கு தயாரா இருக்கு. பார்க்கிறவங்க நிச்சயம் பாராட்டுவாங்க...’’ நம்பிக்கை குன்றாமல் சொல்கிற ப்ரியாவுக்கு அடுத்து தமிழ் சினிமாவிலும் கால் பதிக்க ஆசை இருக்கிறதாம்.

‘‘இந்தப் படத்தை சாதனையா பதிவு பண்றதைப் பத்தியும் யோசிச்சிட்டிருக்கோம். படம் ஆரம்பிச்ச புதுசுல ‘பொம்பிளைங்களா சேர்ந்து படம் பண்றாங்களாம்... என்னத்த பண்றாங்கனு பார்ப்போம்’னு சொன்னவங்க, இப்ப ‘பொம்பிளைங்களா சேர்ந்து படம் பண்ணியிருக்காங்க... நிச்சயம் அந்தப் படத்துல என்னவோ இருக்கு... பார்க்கணும்’னு பேசறாங்க. இதையெல்லாம் தாண்டி, ‘பெண்களா சேர்ந்து நீங்க எடுத்து வச்சிருக்கிற இந்த முதல் அடி ரொம்ப பெரிசு...

ஸ்பெஷலானது... நல்லா வருவீங்க...’னு வாழ்த்தற இதயங்களையும் பார்க்கறோம்... எல்லாருக்கும் எங்க படம்தான் பதில்... வெயிட் அண்ட் ஸீ...’’ - கட்டை விரல் நிமிர்த்தி கம்பீரமாகச் சொல்கிறார்!எங்க படத்துல ஒர்க் பண்ணியிருக்கிற பெண்கள் எல்லாரும் இந்தியாவோட பல மாநிலங்கள்லேருந்தும் வந்தவங்க. அதனால அவங்களோட போக்குவரத்து, அதுக்கான பட்ஜெட்னு எல்லாமே கொஞ்சம் சிக்கலாதான் இருந்தது...

படம் ஆரம்பிச்ச புதுசுல ‘பொம்பிளைங்களா சேர்ந்து படம் பண்றாங்களாம்... என்னத்த பண்றாங்கனு பார்ப்போம்’னு சொன்னவங்க, இப்ப ‘பொம்பிளைங்களா சேர்ந்து படம் பண்ணியிருக்காங்க... நிச்சயம் அந்தப் படத்துல என்னவோ இருக்கு... பார்க்கணும்’னு பேசறாங்க!