அடுத்தவன் இடியை திருடாதீங்க சார்!



அடுத்தவன் இடியை திருடாதீங்க சார்!
Steal someone’s thunder 

அடுத்தவன் இடியை திருடுதல்? இதென்ன வம்பா இருக்குன்னு தோணுமே... ஆமாம் வம்புதான்! அடுத்தவங்களோட கருத்தை திருடி தன்னுடையதுன்னு சொன்னா பின்னாடி வம்புதான் வரும்!

முன் அனுமதி இல்லாமல் ஒருவரது கருத்தையோ, கண்டுபிடிப்பையோ, திட்டத்தையோ ரகசியமாக திருடி தன்னுடைய ஆதாயத் துக்கு பயன்படுத்துவதுதான் Steal someone’s thunder. அதெல்லாம் சரிதான் எதுக்கு ‘இடி’, இங்கே சம்பந்தமே இல்லாம வருதுன்னு கேட்பவர்களுக்கு விளக்கம் இதோ...

ஜான் டென்னிஸ் என்ற ஆங்கில நாடக ஆசிரியர் லண்டனில்இருந்தாராம். அவர் ஒரு நாடகத்தின் இடி இடிக்கும் காட்சிக்காக பின்னணி இசை தயார் செய்திருந்தாராம். அந்த நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. ஆனாலும், அந்த இடி காட்சியை, அந்த நாடக கம்பெனி ஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்துக்கு டென்னிஸின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாம். இதை அறிந்த டென்னிஸ்   ‘That is my thunder, by God; the villains will play my thunder but not my play!'  என்று சொன்னாராம்.

விளையாட்டாக அவர் கூறிய இந்த வாக்கியமேபின்னாளில் கருத்தைத் திருடி பெருமை தேடும் பெருமை பீத்தகளையங்களை குறிக்கும் சொற்றொடராக மாறி போனது. நாம் அடுத்தவங்ககிட்ட இருந்து ‘காபி பேஸ்ட்’ செய்யும் சமாசாரமும் stealing someone’s thunder   தானுங்கோ!

வித்தையும் கைப்பழக்கம்!

Thumb rule

விரல் விதி ஒண்ணும் புதுசில்லை நமக்கு... ‘கைப்பிடி அளவு, கையளவு’ மாதிரி இதுவும் ஒரு குத்துமதிப்பான எளிமையான அளக்கும் முறை   (easy approximation).தெரியாத ஒரு பொருளின் நீளத்தையோ அகலத்தையோ, ‘குத்துமதிப்பா எவ்ளோ பெருசு இருக்கும்’னு யாருகிட்ட கேட்டாலும் என்ன சொல்வாங்க? விரலையோ, கையையோ காட்டி ‘ஒரு அடி / ஒரு முழம் நீளம் இருக்கும்’னு ஒரு பொதுவான நீள அளவை (rough estimation) காட்டி புரிய வைப்பாங்க. இதை அடிப்படையா கொண்டது தான் இந்த thumb rule.

தச்சு / கட்டிட வேலை செய்பவர்கள்தான் இந்த முறையை முதலில் பயன்படுத்தினர். இவர்களில் பலர் ‘வித்தையும் கைப்பழக்கம்’ என்ற பழமொழிக்கு தகுந்த மாதிரி, அளக்கும் கருவி இல்லாமலேயே, அனுபவத்தில் கட்டை விரலை கொண்டே நீளத்தை அளந்தனர். துல்லியமான அளவாக இல்லாவிட்டாலும், இப்படி கட்டை விரல் கொண்டு அளந்த அளவுகள்
ஓரளவு சரியானதாகவே இருந்தது.

பின்னாளில் இப்படி சாமர்த்தியமாக அளக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதுச்சொல் உருவானது. அதாவது, இதுதான் விதிமுறை என்றில்லாமல் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறுகொஞ்சம் நெளிவு சுளிவோடு ஒரு நடைமுறையை உருவாக்கிக்கொள்வதுதான் thumb rule.

நல்ல இனிப்பான மாம்பழம் வாங்கணும்னு கடைக்குப் போறோம். கடிச்சு பார்த்தா வாங்குறோம்? ‘தொட்டுப் பார்த்து, முகர்ந்துப் பார்த்து, மஞ்சள் நிறமா புள்ளியில்லாத பழம்தான் சிறப்பானது ’ன்னு நாமளே ஒரு அளவுகோல் வெச்சு வாங்குறோம். இதுதான் மாம்பழம் வாங்கிற thumb rule. எப்பூடி... எப்பவுமே எங்க வழி தனி வழி! ஃபேஸ்புக்கில் ‘காபி பேஸ்ட்’ செய்யும் சமாசாரமும் stealing someone’s thunderதானுங்கோ!

தீபா ராம்

(வார்த்தை வசப்படும்!)