பட்டுப் புடவையில் குஞ்சம்!



கல்யாணி

பீரோ நிறைய அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனாலும், யாரோ ஒருவர் உடுத்தியிருப்பதைப் பார்த்தால் அதே கலரில், அதே டிசைனில் இன்னொன்று வாங்கலாமா என யோசிப்பார்கள். பட்டுக்கும் பெண்களுக்குமான தொடர்பு அப்படிப்பட்டது. எத்தனை வைத்திருந்தாலும் அலுக்காது.‘‘உங்க பட்டுச் சேலையைப் பார்த்து மத்தவங்க கண் வைக்கணுமா.... குச் ஒர்க் பண்ணிக் கட்டுங்க...’’ என்கிறார் கல்யாணி. பெங்களூருவைச் சேர்ந்த இவர், பட்டுப் புடவைகளுக்குக் குஞ்சம் வைப்பதில் நிபுணி!

‘‘எம்.காம் படிச்சிருக்கேன். எந்த வேலைக்கும் போகாம வீட்லதான் இருந்தேன். நான் இருக்கிற பெங்களூருல பட்டுப் புடவைகளுக்கு குஞ்சம் வைக்கிற பயிற்சி வகுப்புக்குப் போய் கத்துக்கிட்டேன். அடிக்கடி சென்னைக்கு வந்து போவேன்.

பெங்களூருல நான் கத்துக்கிட்டதை சென்னையில பண்ணிக் காட்டினப்ப நல்ல வரவேற்பு இருந்தது. கடைகள்ல பட்டுப்புடவை வாங்கும் போது, அதுல குஞ்சம் வச்சோ, வைக்காமலோ வரும். ஆனா, நான் பண்றது அந்தக் குஞ்சத்துலயே மணி, முத்து, ஸ்டோன்ஸ் எல்லாம் வச்சு அழகுப்படுத்தற வேலை. அந்த ஒர்க் எவ்வளவு பெரிய கடைகள்லயும் கிடைக்கறதில்லை. சிலர் எப்பவோ ஆசைப்பட்டு ஒரு பட்டுச் சேலை வாங்கியிருப்பாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு அந்த கலரோ, டிசைனோ பிடிக்காம இருக்கலாம். அந்த மாதிரிப் புடவைகளுக்கு இப்படி குஞ்சம் வச்சுத் தைக்கிறது மூலமா அதை புதுப் புடவை கணக்கா ஆடம்பரமானதா மாத்திடலாம். சிம்பிளா பட்டுச் சேலை வாங்கிட்டு, இந்த ஒர்க் பண்ணி, காஸ்ட்லி லுக் கொடுக்கவும் இது நல்ல வழி’’ என்கிற கல்யாணி, பட்டு தவிர சில்க் காட்டன், டிசைனர் சேலை, பிரைடல் சேலைகளுக்கும் இந்த வேலைப்பாட்டை செய்ய முடியும் என்கிறார்.

‘‘பட்டு நூல்லதான் பண்ணணும். அதுலயே சிங்கிள் ஷேடு, டபுள் ஷேடுனு வெரைட்டி காட்டலாம். சிம்பிளான சேலைக்கு 150 ரூபாய் போதும். ஆடம்பரமா வேணும்னா 450 ரூபாய் வரைக்கும் பண்ணலாம். ஒரு நாளைக்கு 3 சேலைகள் வரைக்கும் ஒர்க் பண்ணலாம். புடவைக்கு மேட்ச்சா அதே கலர் பட்டு நூல், மணிகள்னு பார்த்து வாங்கித் தைக்கிறதுதான் முக்கியம்.

டெய்லர்கிட்ட பேசி வச்சுக்கிட்டு, அவங்க மூலமா ஆர்டர் பிடிக்கலாம். பெரிய பட்டுப்புடவை கடைகளை அணுகியும் அவங்களுக்கு இந்த குச் ஒர்க் மட்டும் பண்ணிக் கொடுக்கிறதா பேசி, ஆர்டர் வாங்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்பவரிடம் சென்னை மற்றும் பெங்களூருவில் ஒரே நாள் பயிற்சியில் இந்த வேலையைக் கற்றுக் கொள்ளலாம். 5 மாடல்களுக்கான கட்டணம் 750 ரூபாய். (ணூ91-99649 23577)

கலரோ, டிசைனோ பிடிக்காத புடவைகளுக்கு குஞ்சம் வச்சுத் தைக்கிறது மூலமா, அதை புதுப் புடவை கணக்கா ஆடம்பரமானதா மாத்திடலாம்!

வாவ்... வெரைட்டி ரைஸ்!


ஜெயலலிதா
தனலட்சுமி
ரேவதி


குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுப்பதில் இருந்து, விசேஷங்களுக்கான விருந்துகளில் பரிமாறுவது வரை தவிர்க்க முடியாத உணவு வெரைட்டி ரைஸ். சாம்பார் சாதம், பிரிஞ்சி, தேங்காய் சாதம், புளியோதரை என சில வகை சாதங்கள் எல்லா விசேஷங்களிலும் கட்டாயம் பரிமாறப்படுகிற அயிட்டங்களாகவே மாறி விட்டன. சென்னை, சைதாப்பேட்டை, ‘வாழ்க வளமுடன்’ மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ரேவதி, ஜெயலலிதா மற்றும் தனலட்சுமி மூவரும் விதம் விதமான வெரைட்டி ரைஸ் தயாரித்து விற்பனை செய்வதையே முழுநேர வேலையாகச் செய்கிறார்கள்!

‘‘நாங்க மூணு பேருமே அதிகம் படிக்கலை. சமைக்கிறதையும் சாப்பிடறதையும் தவிர வேற எந்த வேலையும் தெரியாது. அதே நேரம் குடும்பச் சூழலை சமாளிக்க ஏதாவது வேலை பார்த்து, கூடுதலா சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். எங்க மூணு பேருக்குமே சமையல் நல்லா வரும். எங்க மூணு பேர் வீடுகள்ல என்ன விசேஷம்னாலும் சேர்ந்து சமைப்போம். அப்படி ஒரு முறை சாப்பிட்டவங்க, உடனடியா அவங்க வீட்டு விசேஷத்துக்கு ரெண்டு, மூணு வகையான ரைஸ் வேணும்னு ஆர்டர் கொடுத்தாங்க.

செய்து கொடுத்தோம். அது அப்படியே பரவி, வேற சிலரும் கேட்க ஆரம்பிச்சாங்க. சீமந்தம், காது குத்து மாதிரியான சின்னச் சின்ன விசேஷங்களுக்கு ஆர்டர் வந்தது. பிறந்த நாள் பார்ட்டிக்கு ஆர்டர் வருது. குழந்தைங்களுக்குப் பிடிச்ச மாதிரி கலர்ஃபுல்லா, அதே நேரம் சத்தானதா புதுமையா பண்ணிக் கொடுங்கனு கேட்கறாங்க. பொதுவா குழந்தைங்க கறிவேப்பிலை, கொத்தமல்லியை எல்லாம் ஒதுக்கிடுவாங்க.

அவங்களை சாப்பிட வைக்க அதுலயே பனீர், சீஸ், காளான் எல்லாம் சேர்த்துப் பண்றோம். கேரட், பீட்ரூட் சாப்பிடாத குழந்தைங்களை அதை சாப்பிட வைக்க அதுலயும் ரைஸ் பண்ணித் தரோம். கடைகள்ல கலருக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கிற எந்தப் பொருளையும் நாங்க சேர்க்கறதில்லை. விலை கொஞ்சம் அதிகம்னாலும் பாசுமதி ரைஸ்லதான் செய்யறோம்’’ என்கிறார்கள் மூவரும்.40 சதவிகிதம் லாபம் பார்க்க வைக்கிற இந்த பிசினஸுக்கு ஒரே நாள் பயிற்சி அளிக்கவும் தயாராக இருக்கிறார்கள். 750 ரூபாய் கட்டணத்தில் 12 வகையான வெரைட்டி ரைஸ் கற்றுக் கொள்ளலாம். (99418 62798)

சமைக்கிறதைத் தவிர வேற என்ன தெரியும்னு நினைச்சிட்டிருந்த எங்களுக்கு சமைக்கிறதையே ஒரு பிசினஸா பண்ணலாம் போலருக்கேனு ஐடியா வந்தது!

அட... ஐஸ்க்ரீம்!

ஹேமலதா


கொளுத்துகிற கோடையில் ஜில்லென ஐஸ்க்ரீம் சாப்பிடுவது சுகமான அனுபவம் என்றால் கொட்டுகிற மழையில் குளிரக் குளிர ஐஸ்க்ரீம் ருசிப்பது அதைவிட அருமையான
அனுபவம்.கடைகளில் வாங்கி சாப்பிடுகிற ஐஸ்க்ரீம் வகைகளில் செயற்கையான எசென்ஸும், கலரும், சுவையும் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லை.
‘‘வீட்லேயே விதம் விதமான பழங்களைக் கொண்டு ஐஸ்க்ரீம் செய்யறது மூலமா ஆரோக்கியத்தையும் காப்பாத்தலாம்... பழங்கள் சாப்பிடற பழக்கத்தையும் உருவாக்கலாம்’’ என்கிறார் ஹேமலதா!

‘‘எம்.பி.ஏ. முடிச்சிருக்கேன். ஆரோக்கியமான சாப்பாடு பத்தின அக்கறை காலேஜ் படிக்கிற போதே உண்டு. பேக்கரி அயிட்டங்களை கூட வீட்லயே ஆரோக்கியமா எப்படிச் செய்யறதுனு யோசிச்சுப் பண்ணுவேன். அப்படித்தான் ஐஸ்க்ரீம் செய்யக் கத்துக்கிட்டேன். எசென்ஸ் உபயோகிச்சுப் பண்றதுக்குப் பதிலா பழங்களையே வச்சு ட்ரை பண்ணினேன். ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ, பனானானு எல்லாப் பழங்களையும் வச்சு ஐஸ்க்ரீம் பண்ணலாம். குல்ஃபியும் பண்றேன்.

பிளெயின், கேசர் - பாதாம், மேங்கோ, சாக்லெட், மலாய்னு அஞ்சு ஃபிளேவர்ல குல்ஃபி பண்றேன். இது தவிர, சமீப காலமா சிறுதானியங்களைப் பத்தின விழிப்புணர்வு அதிகமாயிட்டு வர்றதால, அதை வச்சும் ஐஸ்க்ரீம் பண்ணினா என்னனு யோசிச்சு ட்ரை பண்ணினேன்.

 சர்க்கரைக்குப் பதில் வெல்லம், பாலுக்கு பதில் தேங்காய்ப் பால், கோவா, கார்ன்ஃப்ளாருக்கு பதில் பனிவரகு, திணை மாவு வச்சு செய்து பார்த்ததுல சூப்பரா வந்தது. ஐஸ்க்ரீம் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்கிறதை மாத்தி, அதையுமே ஒரு ஆரோக்கிய உணவா கொடுக்கிறதுதான் என் நோக்கம்’’ என்கிற ஹேமலதா, 2 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஐஸ்க்ரீம் பிசினஸில் இறங்க நம்பிக்கை தருகிறார்.

‘‘பால், பழங்கள், ஃப்ரெஷ் க்ரீம், சிறுதானியங்கள், எலெக்ட்ரிக் பிளென்டர், மோல்டுனு எல்லாத்துக்கும் சேர்த்தே அந்த முதலீடு போதும். எலெக்ட்ரிக் பிளென்டர் 1,750 ரூபாய்க்குக் கிடைக்கும். கையாலயே ஐஸ்க்ரீம் கலவையைக் கலக்கலாம். பிளென்டர் உபயோகிச்சா இன்னும் அதிக சாஃப்டா வரும். அதே பிளென்டரை கேக் தயாரிக்க, மாவு கரைக்கவெல்லாம் கூட உபயோகிக்கலாம்.

வெனிலா, பட்டர் ஸ்காட்ச் வகைகளை 500 மி.லி. 50 முதல் 75 ரூபாய்க்கும், குல்ஃபி வெரைட்டியை அளவு மற்றும் ஃபிளேவரை பொறுத்து 10 ரூபாய்லேருந்தும் விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம். வெயில் காலத்துல விற்பனை அதிகமா இருக்கும்.

மற்ற நாட்கள்லயும் விசேஷங்களுக்கு ஆர்டர் எடுக்கிறது மூலமா லாபம் பார்க்கலாம்...’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான ஐஸ்க்ரீம் மற்றும் 4 வித குல்ஃபி செய்யக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய். (95001 48840)ஐஸ்க்ரீம் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்கிறதை மாத்தி, அதையுமே ஒரு ஆரோக்கிய உணவா கொடுக்கிறது தான் என் நோக்கம்!

ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்