Justice is due - அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு
திருமணம், விவாகரத்து இரண்டுமே எளிதானதாகவும் இயல்பானதாகவும் இருக்க வேண்டும். - தந்தை பெரியார்
பெங்களூரு ஐடி நிறுவனம் ஒன்றின், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர் அதுல் சுபாஷ். கடந்த டிசம்பர் 16ல் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய 24 பக்க தற்கொலைக்கான காரணத்தை விவரிக்கும் கடிதமும், 90 நிமிடங்கள் அவர் பேசுகின்ற காணொளி ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார்.
அதில் தன் மனைவி நிகிதா சிங்காரியாவுடனான விவாகரத்து வழக்கில், மனைவி ஜீவனாம்சமாக 3.3 கோடி கேட்டு துன்புறுத்தியது, தன் 3 வயது மகனை காண்பிக்காமல் பராமரிப்புச் செலவுக்காக மாதம் 40 ஆயிரம் கோரியது, பொய் வழக்குகளை தொடுத்து தொல்லை கொடுத்தது, வழக்கை தீர்க்க நீதிபதிக்கு 5 லட்சம் லஞ்சம் கேட்டது ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷ் மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் மூவரையும் பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.
பெண்களின் பாதுகாப்புக்கு இயற்றப்பட்ட சட்டங்களை, பெண்கள் ஆயுதமாக்கி தவறாக பயன்படுத்துகின்றனர்..! ஆண்கள் மீது சட்டப்பூர்வமான படுகொலைகள் நடைபெறுகிறது..! ஆண்களுக்கும் நீதி வேண்டும் போன்ற முழக்கங்கள் சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் முழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஆண்களும், அவர்களின் குடும்பத்தாரும் பெண்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை அறிய பெண்ணிய சிந்தனையாளரும், பேச்சாளரும், வழக்குரைஞருமான அருள்மொழி அவர்களைச் சந்தித்தபோது...
தற்கொலை செய்து இறந்த அதுல் சுபாஷின் வழக்கு குறித்து?
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து கருத்து சொல்வதற்கில்லை. இங்கு திருமண வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக, ஒருவர் இன்னொருவரை சார்ந்து வாழ்வதாகவே இருக்கின்றது. இப்படி இருக்கக்கூடிய இந்த கட்டாய பந்தத்தில் வன்முறை, ஏமாற்றுவது, சுரண்டுவது போன்றவை நடைபெறுகிறது. இப்படிப்பட்ட தவறான அணுகுமுறையும், எதிர்ப்பும் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது. அதில் ஒன்றுதான் அதுல் சுபாஷ் வழக்கு. இந்த வழக்கு மாதிரியான பிரச்னைகள் பெண்களுக்கு நடக்கும் போது, இயல்பாய் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எப்போது இது மாறி, ஆண்களுக்கு நடக்கிறதோ, அப்போது பேசுபொருளாகிறது.
பொய் வழக்கில் ஒரு ஆண் கைது செய்யப்பட்டார் அல்லது தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டால், நீதிமன்றங்களில் இருந்து வீதி மன்றங்கள் வரை பெண்களைத் திட்டுகிறார்கள். இங்கு எவ்வளவு பெண்கள் தினம் தினம் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கான காரணங்கள் பேசப்படுகிறதா?
ஒரு பெண் தனக்கு ஏற்படும் பிரச்னை, அழுத்தம், தாங்கமுடியாத துன்பத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என சொல்லலாம். அந்தப் பெண்ணின் மனநிலை இதை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்த்து நிற்கவோ தயாராக இல்லை. அதனால் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சொல்லலாம். அதுபோல்தான் அதுல் சுபாஷ் வழக்கிலும்.
தற்கொலை தவிர வேறு தீர்வு இல்லையா? வேறு மாதிரியாக இதனை எதிர்கொண்டிருக்க முடியாதா? உண்மையான பாதிப்பிலும் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். இல்லையென்றால் எக்ஸ்என்ட் என ஆங்கிலத்தில் சொல்வதுபோல, தீவிரத்தன்மை உடையவராக இருந்து, அந்த குணாதிசயத்தினாலும் இந்த முடிவை எடுத்திருக்கலாம். இது உளவியலாளர்களும், நீதிமன்றமும் முடிவு செய்ய வேண்டிய செய்தி. பெண்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து?
பெண் திறமையான மருத்துவராய், பொறியாளராய், வழக்கறிஞராய் இருந்தாலும், வெற்றிகரமான மனைவியாக இருந்தால் மட்டுமே சமூகம் மதிக்கும். பெண் தன் அறிவை பயன்படுத்தாத போது, உரிமையை கேட்காத போது, எதிர்த்துக் கேள்வி கேட்காத போது சரியான நல்ல பெண்ணாக பாராட்டப்படுகிறாள். எப்போது தனக்கான சட்ட உரிமைகளைக் கேட்கிறாளோ, அப்போது பெரிய கொடுமைக்காரியாக தவறாக பார்க்கப்படுகிறாள். இதுதான் அதிகமாக நடக்கிறது.
பெண்கள் நியாயமான வழக்குதான் போடுகிறார்களா?
எல்லா வழக்கும் நியாயமானது இல்லைதான். பாதி நியாயமானதாக இருக்கும். மீதி குறிப்பிட்ட ஆணை ஏதோ ஒரு வகையில் பழிவாங்கவும் அல்லது தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை இப்படியும் பயன்படுத்தலாம் என்ற தவறான போக்கிலும் இருக்கும். இதனால் ஆண்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படுகிறதுதான்.
இதில் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவம், சட்டம், காவல் துறை, நீதித்துறை போன்ற துறையில் இருப்பவர்கள் அனைவரும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானே. அவர்கள் மனப்போக்கு என்னவாக இருக்கிறதோ அதைத்தான் அவர்களின் பணிகளிலும் வெளிப்படுத்துவார்கள்.
நான் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் வழக்கு நடத்துகிறேன். ஏறுமாறான ஆட்களிடம் மாட்டிக் கொண்டால், பெண்ணுக்கும் சீக்கிரம் விடுதலை கிடைக்காது. ஆணுக்கும் விடுதலை இல்லை.
எக்குத்தப்பான வழக்கில் இருந்து எப்படி நமக்கு விடுதலை கிடைக்கும் என இருவருமே தவிக்கிறார்கள். இவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது.
விவாகரத்துகள் ஏன் சமீபகாலமாக அதிகரிக்கிறது?
இன்று சிங்கிள் சைல்ட் சின்ட்ரோம் (ஒற்றைக் குழந்தை மனநிலை) அதிகமாகி இருக்கிறது. ஆண், பெண் இருவரும் ஒரே குழந்தையாக வளரும் போது பெற்றோர் அவர்களை மிகவும் பாதுகாப்புடன் ஊட்டி ஊட்டி வளர்க்கிறார்கள். அப்படிப்பட்ட ஆண் மற்றும் ெபண் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்போது, ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுப்பது, வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கும் தன்மை குறைவாக இருக்கிறது.
30 வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகிற பெண்ணும் பையனும் அவர்கள் வாழ்க்கையை அவர்களே வாழ்ந்துகொள்ள மாட்டார்களா? ஆரம்ப நிலையில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கும்தான். இந்தவொரு பக்குவம்கூட இன்று பெற்றோருக்கு இல்லை. அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகளைப் பெரிதாக்கி, பெண் என்ன செய்கிறாள் என பையனின் பெற்றோரும், பையன் என்ன சொன்னான் என பெண்ணின் பெற்றோரும் போன் செய்து கேட்பதில் பிரச்னைகள் உருவாகிறது.
தைரியமாக இரு. சொந்தக்காலில் நில். கணவருக்குத் துணையாக இரு. உன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதே. யார் கையையும் எதிர்பார்த்து வாழாதே எனப் பெண்ணின் பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேப்போல் மனைவியை மதித்து நட, வீட்டுப் பணிகளைப் பகிர்ந்துகொள், அவளுடைய குடும்பத்திற்கும் மரியாதை கொடு என்று, மகனுக்கும் சொல்லிக் கொடுத்தால் இந்த விவாகரத்து வழக்குகள் கொஞ்சம் குறையலாம்.
திருமண அமைப்புகள் இன்றும் பெண்ணை சுரண்டுவதாகவே இருக்கிறது. 10 திருமணத்தில் 7ல், பெண் வீட்டார் மண்டபம், சாப்பாடு, திருமண செலவென அத்தனையும் செய்து நடத்தி வைக்கிறார்கள். 40 லட்சம், 50 லட்சம் செலவு செய்தோம் என நடுத்தர குடும்பத்தினர் சாதாரணமாகப் பேசுகிறார்கள். காரணம், பயம். தன் அப்பா, அம்மா அவமானப் படுவதை, பயப்படுவதை பார்த்த நிலையிலே பெண் மாமியார் வீடு செல்கிறார். இப்படிச் சென்ற பெண், எப்படி அந்த வீட்டுக்குள் மாமியார், மாமனாரோடு இயல்பாய் பொருந்திப்போகவும், அன்பாக வாழவும் முடியும்?
திருமணத்திற்குப் பிறகு வேலைக்குப் போகணுமா வேண்டாமா என்பதை பையன் வீட்டார்தானே முடிவு செய்கிறார்கள். இதற்குத் தலையாட்டும் பெண்ணின் பெற்றோர்களும் இருக்கிறார்கள்தானே. இந்த மாதிரியான சூழலில் பெண் தனது குணாதிசயங்களை காட்ட ஆரம்பிக்கிறாள்.பெண்ணிற்கு இன்னொரு வாழ்க்கை அமைக்க முடியாத நமது சமுதாயச் சூழலும் ஒரு காரணம்.
முடிந்தவரைக்கும் பெயருக்காவது அந்த பந்தம் இருக்கட்டும் என நினைக்கும் இடத்திற்கு பெண்ணின் பெற்றோர் தள்ளப்படுகிறார்கள். விவாகரத்துக் கொடுத்தால் அவன் அல்லது அவள் வேறொரு திருமணம் செய்துகொள்வார்கள் எனவும் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் நீண்டு கொண்டே செல்கிறது.
தாம்பத்திய வாழ்க்கை குறித்த புரிதலின்றி, டிஜிட்டல் மீடியா வளர்ச்சியால், குறிப்பாக ஸ்மார்ட் போன் வந்த பிறகு எல்லா வக்கிரங்களும் 10, 12 வயது குழந்தைகளின் கைகளில் கிடைத்துவிடுகிறது.
இந்தக் குழந்தைகள் வளர்ந்து குடும்ப வாழ்க்கைக்குள் வரும்போது, காதலும், மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்து நடைபெற வேண்டிய தாம்பத்திய வாழ்க்கை, வெறும் இயந்திரம் மாதிரியான நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவர்களுக்குள் எதிர்பாலின ஈர்ப்பு இல்லாமலே போகிறது.ஓரிரு மாதங்களிலே இருவருக்கும் இடையே ஏற்படும் பிரிவினைக்கு சில உளவியல் சார்ந்த பிரச்னைகளும் இருக்கிறது. விவாகரத்து வழக்குகள் ஏன் இழுத்துக்கொண்டே செல்கிறது?
மேலை நாடுகளில் no-fault divorce முறை இருக்கு. அதாவது, கணவனோ மனைவியோ எனக்கு இவருடன் வாழ முடியாது (irretrievably broken divorce) என்று சொன்னால், அவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். குழந்தை இல்லையென்றாலும், தன் பொருளாதார பாதுகாப்பிற்காக, கணவரின் சொத்தில், வருமானத்தில் உரிமைகோர மனைவிக்கு உரிமை உண்டு.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து வாங்கிய சொத்துக்கள், இருவர் வங்கி கணக்கில் உள்ள நிதி ஆதாரம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து நீதிமன்றமே பிரித்துக் கொடுத்துவிடும். விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று இருவரும் சொல்வதற்கு வெளிநாடுகளில் வழியே இல்லை. வழக்கு மூன்று மாதத்தில் இருந்து 6 மாதங்களுக்குள் முடிந்துவிடும்.
இந்தியாவிலும் இதை செய்யலாமா என உச்சநீதிமன்றம் பல முறை சட்ட கமிஷனுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், no-fault divorce என்பதை நம்நாட்டில் கொண்டுவர முடியவில்லை. கொண்டுவரவும் முடியாது. ஏனெனில், இதில் பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.
வழக்கை போடுவதற்கு முன்பே தன் பெயரில் எதுவும் இல்லாமல் கணவர் செய்யும் நிலை இதில் இருக்கிறது. அதேபோல் பெண்ணிற்கு பெற்றோர் வரதட்சணையாகக் கொடுக்கும் நகைகள், பொருட்கள், பணம் போன்றவை மாமனார், மாமியாரிடம் மாட்டிக்கொள்ளும். விவாகரத்துக் கொடு, நாங்கள் அவற்றைக் கொடுக்கிறோம் என்பார்கள். தன் பெற்றோர் தனக்குக் கொடுத்த பொருட்களை பெறுவதற்காகவே விவாகரத்திற்கு சம்மதிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். திருமணத்தைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லும் அறிவுரை?
திருமண வாழ்வில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதித்து வாழுங்கள். நேர்மையாக இருங்கள். இரண்டு பேருமாக உழையுங்கள். குடும்ப வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இரண்டு பேரும் வேலைக்குச் சென்றால், வீட்டு நிர்வாகத்தையும் சமமாகச் செய்யுங்கள். ஒருவர் மட்டுமே வேலைக்குச் செல்பவரெனில், மற்றொருவர் வீட்டு நிர்வாகத்தை கவனியுங்கள்.
ஒத்துவராத வாழ்க்கையெனில் இருக்க முடியுமா? முடியாதா? என்பதை முடிவு பண்ணுங்கள். முடியாது என்றால் அதை நேர்மையாகச் சொல்லிவிட்டு வெளியில் வாருங்கள். இதற்காக பத்து வருடம் கோர்ட்டுக்கு அலைந்தாலும் தப்பில்லை. ஆனால் இரட்டை வாழ்க்கை வாழாதீர்கள். ரகசியத் தேடல்களுக்குப் போகாதீர்கள். இது ஆபத்தில் முடியும். இன்னொருவர் உங்களை ஏமாற்றுவதற்கு இடம் கொடுக்கும். பிளாக்மெயில் செய்யக் காரணமாக அமையும்.
செய்தி:மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|