கடலுக்குள் செல்லும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்!



“8 வயதில் கடலில் இறங்கினேன். அப்பாவும் அம்மாவும் கடலுக்குள் பாசி எடுத்துக்கொண்டிருக்கையில் நானும் அவர்களுடன் சேர்ந்து கடலின் உள் கரையில் நின்றபடி என்னால் முடிந்தவரை பாசி எடுத்து கொடுத்தேன். இப்போது 41 வயதாகிறது. கடலின் ஆழத்திற்கு சென்று கடல் பாசிகளை எடுத்து வருகிறேன்” என்று நெகிழ்ந்த சுகந்தி, ராமேஸ்வரம் அருகே நரிக்குளி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். 
இங்கு வசிக்கும் மக்கள் கடல்சார் தொழிலை சார்ந்து வாழ்பவர்கள். கடலில் இறங்கி பாசி எடுப்பதில் பல சிரமங்களை சந்தித்தாலும், கடலின் மேல் கொண்ட அதீத காதலால் சிறுவயதிலிருந்தே இப்போது வரையிலும் பாசி எடுக்கும் தொழிலை தன் விருப்பத் தொழிலாக செய்து வருகிறார். தன் கடல் தொழில் குறித்து சுகந்தி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.“அப்பா, அம்மா இருவரும் கடல்சார் தொழிலை செய்து வந்தனர்.

எங்க வீட்டில் என்னையும் சேர்த்து ஐந்து பெண்கள். எல்லோரும் பட்டப் படிப்பு படித்திருக்கிறார்கள். நான் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கேன். கடல் என்றாலே எனக்கு கொள்ளைப் பிரியம். ரொம்ப சின்ன வயசுலேயே பாசி எடுக்கும் தொழிலை செய்யத் தொடங்கினேன். 

எட்டு வயதில் கடலின் உள் கரையில் மட்டும்தான் என்னால் நிற்க முடியும். 12 வயதில் அப்பாவிடம் நீச்சல் பழகியதும் கடலின் ஆழம் வரை சென்று பாசி எடுக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் சிறிய சாக்குப்பையில் பாசிகளை சேகரித்தேன். இப்போது டன் கணக்கில் பாசிகளை கொண்டு வருகிறேன். முதலில் கடலைக் கண்டு அச்சம் இருந்தது. அப்பாதான் அதைப் பற்றி அனைத்து விஷயங்களும் கற்றுக்கொடுத்தார்.

அப்பா ஆரம்பத்தில் பெரிய நாட்டுப்படகு வைத்திருந்தார். என் திருமணத்திற்குப் பிறகு பராமரிக்க முடியாமல் விற்றுவிட்டார். இப்போது மிதவை படகில்தான் சிறு சிறு வேலைகளை செய்கிறார். எனக்கும் மிதவை படகினை இயக்க சொல்லிக் கொடுத்துள்ளார். இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் கடல் சார்ந்துதான் இருக்கும். 

ஆண்கள் நடுக்கடல் வரை சென்றால், பெண்கள் கரையோர வேலைகளை செய்வார்கள். பாசி எடுக்கும் தொழிலை அதிகமாக செய்யும் பகுதி என்றால் அது நான் பிறந்து வளர்ந்த நரிக்குளிதான். திருமணத்திற்குப் பிறகு நான் பாம்பன் அருகே வசித்து வந்தாலும், பாசி எடுக்கும் தொழிலை விட்டுவிடவில்லை’’ என்றவர், கடலுக்குள் எவ்வாறு பாசி எடுப்பதை பற்றி விவரித்தார்.

‘‘கடலுக்குள் செல்லும் போதெல்லாம் நீந்தும் போது பயன்படுத்தக்கூடிய கண்ணாடியை போட்டுக்கொள்வேன். அடுத்ததாக இரு கைகளிலும் கையுறைகளை அணிந்து கொள்வேன். இது பாசிகளை எடுக்கும் போது பாறைகள் கைகளை கீறாமல் பாதுகாக்கும். பாசிகளை சேகரிக்க சாக்குப்பைகளை இடுப்பில் கட்டிக்கொள்வேன். கடலின் குறைவான ஆழத்திலேயே பாறைகளில் பாசிகள் படிந்திருக்கும். அதில் பலவகை உண்டு.

அதில் எல்லாவகையும் சேகரிக்க மாட்டோம். முக்கியமாக நாம் பயன்படுத்தக்கூடிய பாசிகள் என்றால் மரிக்கொழுந்து, கஞ்சிப்பாசி, கருக்கம் பாசி, கட்டக்கோரை போன்றவைதான். மரிக்கொழுந்து பாசி உணவு, மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சாயங்களுக்கு பயன்படுத்துவார்கள். கஞ்சிப்பாசி, கட்டக்கோரை போன்றவை தாவரங்களுக்கு உரம் தயாரிக்க மூலப்பொருளாக  பயன்படுத்தப்படுகிறது.

மரிக்கொழுந்தை தவிர மற்ற பாசிகள் 365 நாட்களும் கிடைக்கும். மரிக்கொழுந்து வருடத்தில் மார்ச், ஏப்ரல், மே மூன்று மாதங்கள்  மட்டும்தான் எடுக்க முடியும். மற்ற மாதங்கள் அவற்றின் வளர்ச்சிக்கான காலம். மேலும் நன்றாக வளர்ந்தபின்தான் பயன்படுத்த முடியும். கடலில் இருந்து சேகரித்து வரும் பாசிகளை முதலில் நன்கு பிழிந்து அதில் இருக்கும் நீரை எடுத்துவிடுவோம். பிறகு வெயிலில் காயவைப்போம். பாசிகள் நன்றாக காய்ந்ததும் அதனை உதறினால் அதில் படிந்திருக்கும் மண் எல்லாம் உதிர்ந்துவிடும்.

அதன் பிறகுதான் பாசிகளை வாங்கும் நிறுவனங்களுக்கு கொடுப்போம். பாசிகள் எடைக்கு ஏற்பதான் பணம். மரிக்கொழுந்து பாசி ஒரு கிலோ 60 ருபாய்க்கும் மற்ற பாசிகள் ஒரு கிலோ ரூ.20க்கும் விலை போகும்” என்றவர், பாசிகளை சேகரிக்கும் போது எதிர்கொள்ளும் சவால்களை பகிந்தார்.

“கடலில் இறங்கி வேலை செய்ய எனக்குப் பிடிக்கும். ஆனால் கடலில் பாசிகளை சேகரிப்பது அத்தனை சுலபமில்லை. கையுறைகள் அணிந்திருந்தாலும் சில நேரங்களில் கூர்மையான பாறைகள் கைகளை கீறிடும். பாசிகளை எடுக்கும் போது பாறை இடுக்கில் கை, கால்கள் மாட்டிக்கொள்ளும். ஒருமுறை கடலில் நீந்தி பாசிகளை எடுக்கும் போது பாறைகளின் இடுக்கில் என் கால்கள் மாட்டிக்கொண்டது. சிக்கிக்கொண்டிருந்த என் காலை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிரமப்பட்டுதான் வெளியே எடுத்தேன். 

ஒருமுறை நானும் என் தோழிகளும் கடலில் பாசி எடுத்துக்கொண்டிருந்தோம். நீச்சல் நன்றாக தெரியாதவர்கள் கடலின் மேற்பகுதியில் இருந்தபடியே பாறைக்கு பாறை தாவித்தான் பாசி எடுப்பார்கள். அப்போது தோழி ஒருத்தி நின்றிருந்த பாறை திடீரென நொறுங்கியதில் அவள் கடலின் ஆழத்தில் மூழ்கிவிட்டாள்.

அவளுக்கு நீச்சல் தெரியாது என்பதால் நான் உடனே கடலில் குதித்து காப்பாற்றினேன். பாசி எடுக்கும்போது தெரியாமல் பலவீமான பாறை மீது ஏறிவிட்டால் இப்படி நடக்கும். அடுத்து நடந்த சம்பவம்தான் என்னை பெருமளவு பாதித்தது. அன்று நான் மட்டும் கடலின் ஆழத்தில் பாசி எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு ராட்சத மீன் என் கண்ணை தாக்கியது. இது சாதாரணமாக நடக்கக்கூடியதுதான்.

மீன் தாக்கிய இடத்தில் சுடுமண்ணை வைத்து தேய்த்தால் சரியாகிடும் என்று சொன்னார்கள். நானும் அதுவாக சரியாகிடும் என்று கவனிக்காமல் விட்டுவிட்டேன். கண்ணில் பலமாக தாக்கியதால், கண்ணில் வலி இருந்து கொண்டே இருந்தது. மருத்துவமனைக்கு போகாமல் கண் வலிக்கான மருந்து மட்டும் போட்டேன். 

அதுதான் நான் செய்த பெரிய தவறு. சம்பவம் நடந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போது என் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அன்று சரியாக மருத்துவம் பார்க்காமல் அலட்சியமாக இருந்ததால் இன்று ஐந்து மாதங்களாக கடலில் இறங்க முடியவில்லை.

சிகிச்சை முடியும் வரை கண்ணில் தண்ணீர் படக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் போவேன். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். என்னைப்போல் கடலில் பாசி சேகரிப்பவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை கடலில் எந்த தாக்குதல் ஏற்பட்டாலும் உடனடியாக முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான். மேலும் எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது.

 கடல்சார் தொழில் செய்யும் இடங்களில் அனைவரும் எளிதாக அணுகும் வகையில் முதலுதவி அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் அமைத்தால் எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். காரணம், நாங்க எந்த ஒரு சிகிச்சைக்கும் மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் ராமேஸ்வரம்தான் போக வேண்டும். 

எங்களின் கிராமத்தில் முதலுதவி சிகிச்சைகள் கிடைத்தால் பாதிப்புகள் தீவிரம் அடையாமல் தவிர்க்கலாம். அதேபோல கடலோர கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும் சிறப்பாக இருக்கும்’’ என்றவர், பல்வேறு சேவைகளையும் செய்து வருகிறார்.

“14 வயதில் இருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். எங்க ஊர் மக்களுக்காக தன்னார்வலர் சேவையில் ஈடுபட்டேன். இன்றும் தொடர்வதால், என் கிராமத்து மக்கள் என்னை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். பாசி மட்டுமில்லாமல் கடல் சிப்பிகளையும் சேகரித்து அதில் கலைப்பொருட்கள் செய்யும் தொழிலை செய்து வந்தேன். 

இந்தக் கலையினை சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க சொல்லி கேட்டுக் கொண்டார்கள். இதுவரை 1500 பெண்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேன். மேலும் கப்பா பாசி வளர்ப்பு முறை சார்ந்த பயிற்சியும் அளிக்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியும் கொடுக்கிறேன். கோடைகால விடுமுறையில் பள்ளி மாணவர்கள் இங்கு கேம்பிற்காக வருவார்கள். அவர்களுக்கு சிப்பிகளைக் கொண்டு கலைப்பொருட்களை செய்யும் பயிற்சிகளை அளிப்பேன்.

எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது இந்த கடல்தான். மனக்கஷ்டம் ஏற்பட்டால் முதலில் அதை கடலிடம்தான் பகிர்வேன். அழுகை வந்தாலும் கடலுக்குள் சென்று அழுவேன். என் கண்ணீர் முதல் சந்தோஷம் வரை எல்லாமும் இந்தக் கடலுக்கு தெரியும். ஒவ்வொருமுறை கடலுக்குள் சென்று எழும் போதும் புத்துணர்வாக இருக்கும். என் உயிர் மூச்சு உள்ளவரை நான் கடலில் இறங்கி வேலை செய்வேன்” என்று கடல் மீதான அதீத காதலை வெளிப்படுத்தினார் சுகந்தி.

ரம்யா ரங்கநாதன்