புத்தாண்டு ஸ்பெஷல் இனிப்புகள்



புத்தாண்டு, பண்டிகை நாட்களில் பேக்கரிகளில் கேக்குகளை வாங்குவதற்கு பதில் நாமே வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையான கேக்குகளை தயாரிக்கலாம் என்கிறார் சமையல் கலைஞர் குப்பம்மாள்.

தேங்காய்ப்பூ கேக்

தேவையானவை:  முற்றிய தேங்காய்த்துருவல் - 4 கப், சர்க்கரை - 400 கிராம், ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 1 டீஸ்பூன், நெய் - 200 கிராம், பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்.

செய்முறை: முதலில் அடுப்பில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் தேங்காய்த்துருவலை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து பாகுபதம் வரும் போது அதில் வறுத்து வைத்துள்ள தேங்காய்த்துருவலைப் போட்டு கைவிடாமல் கிளறவும். நன்றாக திரண்டு வரும்போது நெய்யை ஊற்றிக் கிண்டவும். 
கேக் பதம் வந்ததும் ரோஸ் எசென்சை ஊற்றி நெய் தடவி தாம்பாளத்தில் கொட்டவும். மேலே பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய்த் தூவி அலங்கரிக்கவும். ஆறியபின் வில்லைகள் போடவும். இதுவே ‘தேங்காய்ப்பூ கேக்.’செலவும் குறைவு. செய்வது எளிது. சுவை மிகுந்த கேக்.

பரங்கிக்காய் கேக்
தேவையானவை: மைதா மாவு - 125 கிராம், சர்க்கரைத்தூள் - 100 கிராம், வெண்ணெய் - 100 கிராம், சமையல் சோடா - 1/4 டீஸ்பூன், பரங்கிக்காய் - 100 கிராம், லவங்கம், பட்டை, ஏலத்தூள் - சிறிது, வெனிலா எசென்ஸ் - சில சொட்டுகள், வெனிலா கஸ்டர்ட், சாக்லேட் கஸ்டர்ட் - அலங்கரிக்க, முட்டை - 1.

செய்முறை:  மைதா மாவுடன் சமையல் சோடாவை கலக்கவும். பரங்கிக்காயை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் மசித்துக்கொள்ளவும். எண்ணெயுடன் சர்க்கரைத் தூளைக் கலக்கவும்.
முட்டையை நன்றாக நுரைக்க அடித்துச் சர்க்கரையுடன் சேர்க்கவும். மைதா மாவு, மசித்த பரங்கிக்காய், கலந்த சர்க்கரைத் தூள், மசாலாத்தூள், வெனிலா எசென்ஸ் சேர்த்து கலவையாகக் கலக்கவும். மைக்ரோ வேவ் டிரேயின் உட்புறம் சிறிது நெய் தடவி அதற்குள் இந்தக் கலவையை கொட்டவும். 20 நிமிடம் மீடியம் பவரில் வைக்கவும். கமகமக்கும். ‘பரங்கிக்காய் கேக்’ ரெடி. வெனிலா, சாக்லேட் நாட் கஸ்டர்ட் சேர்த்து பின் செர்ரி பழங்களுடன் அலங்கரித்து, கேக்குகளாக கட் செய்யவும்.

சைனா கிராஸ் மில்க் கேக்

தேவையானவை: சைனா கிராஸ் (கடல் பாசி) - 1 பாக்கெட், பால் - 1 லிட்டர், முந்திரி - 20 கிராம் (பொடி செய்து கொள்ளவும்), சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 1 டீஸ்பூன், ரெட் ரோஸ் பவுடர் - 1  சிட்டிகை.

செய்முறை: முதலில் 1/2 டம்ளர் பாலைக்காய்ச்சி சைனா கிராஸை சிறு துண்டுகளாகக் கட் செய்து காய்ச்சிய பாலில் ஊற வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து மீதி பாலை ஊற்றி நீர் விடாமல் சுண்டக்காய்ச்சவும். 1 லிட்டர் பால்  1/2 லிட்டராக வரும் வரைக் காய்ச்சவும். சுண்டக் காய்ச்சிய பாலில் சர்க்கரையும், ஊற வைத்துள்ள சைனா கிராஸையும் போட்டு மறுபடியும் அடி பிடிக்காமல் கிளறவும். இதற்கு கோவா போல் காய்ச்ச வேண்டாம்.

நன்றாக பாலில் உள்ள நீர் சுண்டினால் போதும். பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள், ரோஸ் எசென்ஸ், ரெட் ரோஸ் பவுடர் இவை எல்லாவற்றையும் பாலில் கொட்டிக் கிளறி விட்டுப்பின் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆறவிடவும். 1 மணி நேரத்தில் நன்றாக ஆறி கெட்டியாகி விடும். பின் கத்தியால் சிறு சிறு கேக்குகளாகக் கட் செய்து ஃபிரிட்ஜில் வைத்து எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். இதுவே சைனா கிராஸ் மில்க் கேக் ஆகும். 

கிறிஸ்துமஸ் நாட்களில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு கொடுக்க ஒரு வித்தியாசமான கேக். சுலபமாக சீக்கிரம் செய்யலாம். ருசியானது.குறிப்பு: சைனா கிராஸ் கரைந்த பின் திடப்பொருளாகி விடுகிறது.

கேரட் பால் கேக்

தேவையானவை: கேரட் - 1 கிலோ, பதப்படுத்தப்பட்ட பால் - 1 டின், கிசுமுசுப்பழம் - 50 கிராம், முந்திரி - 50 கிராம், வாதுமைப்பருப்பு - 50 கிராம், சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி, நெய் (அ) வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், மைதா மாவு - 50 கிராம், கேசரி பவுடர் - சிறிது.

செய்முறை: கேரட்டை கழுவி சுத்தம் செய்து துருவி வைக்கவும். டின் பாலை தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியான பாலாகக் கரைக்கவும். பிறகு பாலில் மைதா மாவை கலந்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். அதோடு துருவிய கேரட், கிசுமுசுப்பழம், முந்திரிப்பருப்பு, வாதுமைப்பருப்பை நொடித்துப் போடவும். பின் ஏலக்காய்ப்பொடி, சமையல் சோடா சேர்த்து பின் நெய் (அ) வெண்ணெய் ஊற்றிக் கிளறி விடவும். கேசரிப் பவுடரைப் பாலில் கரைத்து ஊற்றவும்.

இந்தக் கலவையை  நன்றாக கலந்து பின் நெய் தடவிய ஒரு டிரேயில் ஊற்றி, சமமாகப் பரப்பி, அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். சிறிது ஆறியபின் கேக்குகளாக வெட்டி எடுத்து, ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ‘கேரட் பால் கேக்’ சாப்பிட இனிப்பாய், சுவையாய் இருக்கும். 1 வாரம் வரை கெடாது.

குறிப்பு: ஓவன் இல்லாதவர்கள் அடுப்பில் ஒரு டிரேயில் மணலைக் கொட்டி மணல் நன்றாக சூடான பின், நெய் தடவிய கேக் கலவையை சூடான மணல் டிரேயின் மேல் வைத்து சூடாக்கவும். 20 நிமிடம் கழித்தப்பின் இறக்கினால் ஓவனில் செய்தது போல் கேக் வெந்துவிடும்.

பேரீச்சம் பழ கேக்

தேவையானவை: சிறிதாக நறுக்கிய பேரீச்சம்பழத்  துண்டுகள் - 1 கப், பாலேடு - 1 கப், பால் - தேவையான அளவு, மாரி பிஸ்கெட் - 6, கசகசா - 1 டீஸ்பூன்.

செய்முறை: அல்வா கிண்டும் பாத்திரத்தில் நறுக்கிய பேரீச்சம்பழத்துண்டுகள், பாலேடு சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வேக விடவும். பழத்துண்டுகள் நன்கு வேக வேண்டும். தேவைப்பட்டால் பால் சேர்க்கலாம். 

பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். அப்போது 3 மாரி பிஸ்கெட்டுகளை நன்றாகப் பொடித்து அதனுடன் சேர்த்துக் கிளறவும். ஒரு தட்டில் மீதி உள்ள மாரி பிஸ்கெட்டுகளைத் தூள் செய்து தட்டில் தூவி அதன் மீது பேரீச்சம் பழக் கலவையை ஊற்றி பரப்பி மேலே கசகசா தூவவும். விருப்பப்பட்டால் உலர் பழங்கள் சேர்க்கலாம். ஆறியபின் கேக் துண்டுகளாகப் போடலாம். ஈஸி கேக் ரெடி.

ஆரஞ்சு கேக்

தேவையானவை:  மைதா மாவு - 2 கப், சர்க்கரை - 2 கப், முட்டை - 4, ஆரஞ்சுப்பழச்சாறு - 3 கப், சமையல் சோடா - 1/2 தேக்கரண்டி.

செய்முறை:  முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடிக்கவும். அதில் சர்க்கரையை கொட்டி அடிக்கவும். சர்க்கரை கரைந்து வெண்ணெய் போல் வரும். மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, சமையல் சோடா, ஆரஞ்சுப் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நன்றாகப் பிசைய வேண்டும். 

பிசைந்த மாவை, சர்க்கரை, முட்டை கலவையில் போட்டு கிளறி விடவும். இந்தக் கலவையை கேக் தயாரிக்கும் தட்டில் போட்டு சமமாகப் பரப்பி, கேக்குகளாகக் கிளறி அடுப்பில் ஒரு டிரேயில் மணலைக் கொட்டி மணல் நன்றாக சூடு ஏறியதும் ஆரஞ்சு கேக் கலவையை மணல் தட்டு மீது சூடு ஏற்றவும். தேவையான அளவு சூடாக்கியதும், தட்டை வெளியே எடுங்கள். ‘ஆரஞ்சு கேக்’ நன்றாக வெந்து பதமாக இருக்கும். ஆறிய பின் சாப்பிடவும்.

தேங்காய், முந்திரி கேக்

தேவையானவை: கெட்டியான பால் - 1 லிட்டர், தேங்காய் - 1, முந்திரி - 100 கிராம், சர்க்கரை - 1/2 கிலோ, நெய் -  1/4 கிலோ, ஏலப்பொடி - 1 டீஸ்பூன், சில்வர் பேப்பர் - தேவைக்கேற்ப.

செய்முறை:  முந்திரியை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். தேங்காயை துருவி நன்றாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் அரைத்த இரண்டு விழுதுகளையும் போட்டு அடுப்பில் வைக்கவும். அதில் பால், நெய், சர்க்கரை, ஏலப்பொடி போட்டு மிதமான தீயில் கிளறவும். 

கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் கேக் பதத்தில் வரும் போது நெய் தடவிய தட்டின் அடியில் சில்வர் பேப்பர் போட்டு மேலே கலவையை கொட்டி பரத்தி விடவும். ஆறியதும் துண்டுகள் போடவும். இதுவே ‘தேங்காய் முந்திரி கேக்.’ விருப்பம் இருந்தால் செர்ரிப் பழங்களை நறுக்கி மேலே பதிக்கலாம்.

பச்சரிசி முட்டை கேக்

தேவையானவை: பச்சரிசி மாவு - (ஊற வைத்து அரைத்து சலித்தது) - 3/4 கிலோ, முட்டை - 4, சர்க்கரை - 300 கிராம், ஏலக்காய்ப்பொடி - 1/4  டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து பின் ஏலக்காய்த்தூள், சர்க்கரையை கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையுடன் உப்பு, அரைத்த அரிசி மாவு சேர்த்து நன்றாகப் பிசையவும். பிறகு பிசைந்த மாவினை சப்பாத்திப் பலகையில் போட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தடிமனாக அப்பளம் போல் தட்டிக்கொள்ளவும். அதனை கத்தியினால் முக்கோண வடிவில் வெட்டி எடுக்கவும். 

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பின் மேல் வைத்துக் (எண்ணெய்) காய்ந்ததும் வெட்டி வைக்கப்பட்டிருந்த துண்டுகளை போட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். இது 10 நாள் வரை கெடாது. வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு மாலை நேரங்களில் இந்த பச்சரிசி கேக்கை கொடுத்து பாராட்டை பெறலாமே!

பாம்பே இஞ்சி கேக்

தேவையானவை:  மிகவும் இளசான இஞ்சி - 1/4 கிலோ, கசகசா - 1/4 கப், தேங்காய்த் துருவல் - 1/2 கப், பால் - 1 கப், நெய் - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், சர்க்கரை - அரைத்த விழுதின் அளவுக்கு இரு மடங்கு.

செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். கசகசாவை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி பால் சேர்த்து, ஊறிய கசகசாவை தண்ணீர் வடித்துவிட்டு, தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். பின் ஒரு  அடிகனமான பாத்திரத்தில் அரைத்த  விழுது, சர்க்கரை, இஞ்சித்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். 

சர்க்கரை கரைந்து பாகு எழும்பி வரும்போது நெய் சேர்த்து கலவை கெட்டியாக வரும் வரை கிளறி, பின் நெய் தடவிய தட்டில் கொட்டி, சற்று ஆறிய பிறகு துண்டுகள் போடவும். இதுவே ‘பாம்பே இஞ்சி கேக்.’ 10 நாள் வரை கெடாது. இது ஒரு வித்தியாசமான, ஜீரண சக்தி உள்ள கேக்.

தொகுப்பு: ப்ரியா