ஆட்டோ வீடு



எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஆட்டோ வீட்டை உருவாக்கி அசத்துகிறார் அருண்பிரபு.‘‘சிறு கட்டட வடிவமைப்பு இந்தியாவுல ரொம்பக் குறைவு.
இதுல குடியிருப்பு, வர்த்தகம், தொழில்துறை சார்ந்ததுனு மூன்றுவித கட்டட வடிவமைப்பு இருக்கு. இப்ப குடியிருப்புனு பார்க்கும்போது சின்னச் சின்ன இடத்துல வாழ்ற மக்களைச் சொல்லலாம். அடுத்து, நாடோடி மக்கள் போடுற டென்ட்டைக் குறிப்பிடலாம்.

வர்த்தகம்னு பார்க்கிறப்ப டீக்கடை, பெட்டிக்கடைனு நிறைய சொல்ல முடியும். ஆனா, இதையெல்லாம் எந்த கட்டடக்கலை நிபுணர்களும் கண்டுக்கிறதில்ல. அப்படியே இதுல கவனம் செலுத்தினா கூட அது ஒரு நிறுவன ப்ராண்டின் அடையாளமாவே இருக்கும்.
அதனாலயே என்னுடைய கவனமெல்லாம் இந்தச் சிறு கட்டட வடிவமைப்பு பத்தியே இருந்துச்சு...’’ என்கிறார் இருபத்தி மூன்றே வயது நிரம்பிய அருண் பிரபு. வீட்டின் வடி வமைப்பை விவரித்தார்.

‘‘ஒரே ஒரு ரூம்தான். அதுல எந்தத் தடுப்பும் இருக்காது. இது 3டி டிசைன். ஆறடிக்கு மூணு அடில படுக்க இடம். ஓர் ஆள் மட்டுமல்ல, ரெண்டு பேர் கூட படுத்துக்கலாம். இதுல சமையலறையும், பாத்திரம் கழுவ சிங்க்கும் இருக்கு. அப்புறம், குளியலுக்கு பாத் டப்னு வச்சிருக்கேன். பாத் டப் எதுக்குன்னா, தண்ணீரை மிச்சம் பண்ண! அதுல குளிக்காத நேரங்கள்ல சமான்களைப் போட்டுக் கலாம். பாத்திரங்களைக் கழுவிக் கலாம். அழுக்குத் துணிகளை துவைச்சுக்கலாம். இந்தமாதிரியான பயன்பாட்டுக்காக வச்சேன்.

தண்ணீருக்காக மேல 250 லிட்டர் சின்டெக்ஸ் இருக்கு. டாய்லெட் வசதியும் இருக்கு. தேவைப்பட்டா கதவைத் திறந்து இடவசதியை பெருசாக்கிக்கிடலாம். அப்புறம், மேல காற்றோட்டமா, ரிலாக்ஸா உட்கார ஒரு தளமும் இருக்கு. அங்க ஒரு குடையும் போட்டிருக்கேன். சேர்கள் இருந்தா நாலஞ்சு பேரு கூட உட்கார்ந்து பேசலாம். மின்சாரத்துக்காக 600 வாட்ஸ் சோலார் பயன்படுத்தியிருக்கேன்.

அதுல, லேப்டாப், மொபைல் போன் சார்ஜ் ஏத்திக்கலாம். ஒரு லைட்டும், டேபிள் ஃபேனும் போட்டுக்கலாம். தவிர, வெப்பத்தை வெளியேற்றும் ஃபேனும் இருக்கு. அடுத்து, வெளியில சோலார் லைட் வச்சிருக்கேன்.

அது ஆட்டோமெட்டிக்கா பகல்ல சூரியக்கதிர்கள சேர்த்து வச்சிட்டு இரவுல வெளிச்சத்தைத் தரும். அதுக்கும் உள்ளிருக்கும் இன்டீரியர் சோலாருக்கும் சம்பந்தம் இல்ல. பிறகு, குளியலறை தண்ணீரும், டாய்லெட் கழிவுகளும் வெளியேற தனித்தனியா வழிகள் இருக்கு. அடியில் 70 லிட்டருக்கான டேங்க் பொருத்தியிருக்கேன்.

அதுல சேகரமாகும் கழிவுநீரை சரி யான இடத்துல போய் வெளியேற்றிட வேண்டியது. டாய்லெட் கழிவு களுக்குசேமிப்பு டேங்க் இருக்கு. காற்றோட்டம் வர்ற வழிகள தொடர்ந்து  கவனிச்சு அதுக்கான துளைகள சரியான இடத்துல போட்டிருக்கேன்.

அதனால, எந்த இடத்துல வீட்டை வச்சாலும் காத்து வரும். முதல்கட்டமா, ஆட்ேடாவுல இந்தத் தற்காலிக வீட்டை பொருத்தி டெமொ பார்த்திருக்கேன். ஆட்டோனு இல்ல. உங்களுக்குத் தேவைப்பட்டா இதிலுள்ள ஆறு போல்ட்டை கழற்றிட்டு ஃபோர் வீலர் வண்டில கூட மாத்தி வச்சிக்கலாம்...’’ என்கிறார் அருண்.

பேராச்சி கண்ணன்