லைபி ஓய்னம்



மணிப்பூர்வாசிகளிடம் ரொம்பவே பிரபலமான பெயர் லைபி ஓய்னம். நோய்வாய்ப்பட்ட கணவர், படித்துக்கொண்டிருக்கும் மகன்கள் என குடும்பம் வறுமையில் சுழல லைபி ஓய்னம் வாடகை ஆட்டோவை ஓட்டத் தொடங்கினார். இது நடந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது ஒரு பெண் ஆட்டோ ஓட்டுவது என்பது மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயம்.

அதுவும் ஆண்களைப் போல பேன்ட், சட்டை  அணிந்து ஆட்டோ ஓட்டிய லைபி சந்தித்தது எதிர்ப்புகளை மட்டும்தான். ஆனால், துவண்டு போகாத லைபி ஆட்டோ ஓட்டி சம்பாதித்து குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.

அத்துடன் சொந்தமாக ஆட்டோ வாங்கி மணிப்பூர் பெண்களின் ரோல்மாடலாக மாறிவிட்டார். இன்று ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் லைபி ஓய்னத்தின் ஆட்டோ மணிப்பூர் சாலைகளில் பறந்து கொண்டிருக்கிறது. அவரை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது லைபியைச் சந்திக்கும்போது மரியாதையுடன் புன்னகைக்கின்றனர். லைபியின் வாழ்க்கை விரைவில் ஆவணப்படமாகப் போகிறது என்பதுதான் அவரைப் பற்றிய சமீபத்திய தகவல்.