முத்தாரம் நேர்காணல்



ஒட்டகப் பெண்

பதினான்கு மாதங்களுக்கு முன் மங்கோலியாவின்  உலாங்கோம் பகுதியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார் பைகல்மா நோர்ஜ்மா. சுமார் 12 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கடந்த வாரம் லண்டனை வந்தடைந்திருக்கிறார். மங்கோலியாவிலிருந்து லண்டனுக்கு வர இவ்வளவு நேரம் ஆகுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழுவது நியாயம் தான்.

ஆனால், பைகல்மா பயணித்தது விமானத்தில் அல்ல; ஒட்டகத்தில். ஆம்; உலகிலேயே ஒட்டகத்தில் அதிக தூரம் பயணம் செய்த சாதனையையும் தன்வசமாக்கிவிட்டார் இந்த ஒட்டகப் பெண். லண்டனில் வெளியாகும் ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் கொடுத்த நேர்காணல் இது.

இந்தப் பயணம் எப்படி ஆரம்பித்தது?

 நான் மங்கோலியாவின் சுற்றுலாத்துறையில் 12 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்குள்ள மலைகளில் ஏறுவது வழக்கம். மங்கோலியாவில் உள்ள முக்கியமான மலைகளில் எல்லாம் ஏறிவிட்டேன். எட்டு வருடங்களுக்கு முன்பு டிம் கோப் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர் குதிரையிலேயே மங்கோலியாவிலிருந்து ஹங்கேரி வரை பயணம் செய்திருக்கிறார். இதே மாதிரி நானும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், குதிரையில் இல்லாமல் ஒட்டகத்தில் பயணிக்க விரும்பினேன்.

ஒட்டகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த முதல் மங்கோலிய பெண் நான் தான். லண்டனை வந்தடைந்தும் வரலாற்றிலும் இடம்பிடித்து விட்டேன். ஆரம்பத்தில் இதை ஜாலியான பயணமாகத்தான் நினைத்தேன். ஆனால், நிறைய மனிதர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதனால் மங்கோலியன் கலாச்சாரத்தை பரப்புவதற்கான வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்திக் கொண்டேன். இந்தப் பயணம் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்ததில் மகிழ்ச்சி.
 
உங்களின் பயணத்தைப் பற்றி மங்கோலியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இப்போது உலகிலுள்ள மங்கோலியர்களின் மத்தியில் நான் பிரபலமாகிவிட்டேன். ஒரு பெண்ணாக இந்தப் பயணத்தை ஆரம்பிக்கும்போது நாலாப் பக்கமும் இருந்து ஆதரவான குரல்கள் தான் எழுந்தன. எதிர்ப்புகள் என்று எதுவுமில்லை. எல்லோரும் என் முயற்சியைப் பாராட்டினார்கள். என்னைப் போலவே மக்களும் இந்த மாதிரி பயணத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

மறுபடியும் மங்கோலியர்களின் வாழ்வில் ஒட்டகம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. என் பயணம் மங்கோலிய கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு உந்துதலாகவும், அவர்களின் எதிர்காலத் திட்டங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது என் பயணத்துக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கிறது.
 
பயணத்தின் போது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்?

மங்லோலியாவில் குளிர்தான் பெரும் சவால். இந்தப் பயணத்தை  ஏழு பேருடன் ஆரம்பித்தேன். ஆனால், குளிரின் காரணமாக மற்ற ஆறு பேரும் இடையிலேயே வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர். என் குடும்பத்தினர் மட்டுமே என்னுடன் வந்தனர்.  சில இரவு களில் மைனஸ் 58 டிகிரி குளிரில் உறங்க வேண்டிய நிலை.

குளிர் அதிகமாகும்போது ஒட்டகங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் அவை குளிரில் உறைந்து இறந்துவிடும். அதனால் பனி அதிகமாகி நிலத்தில் பனிக்கட்டிகள் தேங்கும்போது அதை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தோம். உண்மையில் எங்களைவிட ஒட்டகங்களுக்குத்தான் இந்தப் பயணம் பெரும் சவாலாக இருந்திருக்கும்.
 
மற்ற நாடுகளுக்குள் செல்லும்போது சட்ட ரீதியான பிரச்சனைகள் ஏதாவது வந்ததா?

மங்கோலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தந்தது. இருந்தாலும் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் அனுமதி வேண்டி மூன்று மாதங்களுக்கு மேல் காத் திருந்தேன். இப்போது கஜகஸ்தானுக்குள் நுழைவதற்கான அனுமதிக்காக ஐந்து மாதங்கள் காத்திருக்கிறேன்.

கஜகஸ்தானில் நுழைந்ததும் என்னுடைய ஒட்டகத்தை அவர்களின் இராணுவத்துக்குக் கொடுத்துவிட்டு புதிதாக ஒன்றை வாங்கப்போகிறேன். எதிர்காலத்தில் எல்லா நாடுகளிலும் நுழைய சீக்கிரம் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் பெரிதாக எந்தப் பிரச்சனையும் இல்லை. வேண்டிய இடத்தில் கூடாரம் அமைத்து தங்கவும் முடிந்தது. மக்களும் ஆதரவாக இருந்தனர்.
 
எதிர்காலத் திட்டங்கள்...

கஜகஸ்தான் அனுமதி கிடைத்ததும் உஸ்பெகிஸ்தானுக்கும் துர்க்மெனிஸ்தானுக்கும் சாகசப் பயணம் செய்யணும். ஒரே நேரத்தில் ஒரு நாடு முழுவதையும் சுற்றலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். குறிப்பாக கிழக்கு ஐரோப்பா முழுக்க பயணிப்பது எனது அடுத்த திட்டம்.

தமிழில்: த.சக்திவேல்