மூழ்கும் தலைநகரம்உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட தீவு ஜகார்த்தா. இந்தோனேஷியாவின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் இது. 2030-இல் ஜகார்த்தாவின் மக்கள் தொகை சுமார் 3.5 கோடியை எட்டி விடும் என்று சமீபத்திய கணிப்பு சொல்கிறது.
இந்த நிலையை  அடைந்துவிட்டால் உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதல் நகரம் என்ற பெருமையை ஜகார்த்தா பெற்றுவிடும். தவிர, தொழில், மக்கள் வாழ்வு, பொருளாதாரம், பாரம்பரியம், அயல்நாட்டு வணிகம் என்று அனைத்து வகையிலும் நல்ல இடத்தை வகித்து வரும் ஒரு நகரம் இது.

அவ்வப்போது இயற்கைச் சீற்றங்களால் நிலைகுலைந்து போனாலும் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறது ஜகார்த்தா. சமீபத்தில் இந்தோனேஷியாவின் அதிபரான ஜோகோ விடாடோ, தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறார். இது இந்தோனேஷியா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட தீவு மட்டுமல்ல, உலகிலேயே அதிவேகத்தில் கடலில் மூழ்கிவரும் ஒரு நகரமும் ஜகார்த்தா தான். ஆண்டுக்கு 17 செ. மீ என்ற அளவில் ஜகார்த்தா கடலில் மூழ்கி வருகிறது. வருடத்திற்கு வருடம் மூழ்கும் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2050-க்குள் நகரத்தின் பெரும்பகுதி கடலில் மூழ்கி விடும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஜகார்த்தாவின் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகள் கடல் மட்டத்திற்கும் கீழே உள்ளன.

குடிப்பதற்கும் குளிப்பதற்கும் அதிகளவில் நிலத்தடி நீரைத்தான் ஜகார்த்தாவாசிகள் பயன்படுத்திவருகின்றனர். நிலத்தடி நீர் வற்றிப்போவதால் தான் ஜகார்த்தாவின் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கிவருகின்றன என்கிறது ஆய்வு. இதுபோக கடுமையான போக்குவரத்து நெருக்கடியிலும் தத்தளித்து வருகிறது இந்த நகரம்.

யாராலும் சரியான நேரத்தில் போக வேண்டிய இடத்துக்குச் செல்ல முடிவதில்லை. இதற்கு மக்கள் தொகைப் பெருக்கமே முக்கிய காரணம் என்றாலும் குறைந்து வரும் நிலப்பகுதியும் இன்னொரு காரணம். எது எப்படியானாலும் தலைநகரம் மாறப்போவது வெகுநாட்களுக்குப் பிறகு நடக்கும் வரலாற்றுச் சம்பவம்.