உடல் வெப்பத்தை தணிக்கும் வெள்ளைக் கீரை!



வெள்ளைக்கீரை என்பது நம்முடைய முன்னோர்களால் தொன்று தொட்டே பயன்படுத்தி வரும் கீரை வகையாகும். இது பெரும்பாலும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளிலும் ஈரப்பதமான இடங்களிலும் செழித்து வளரக்கூடியதாகும். இதன் தண்டு மெல்லியதாகவும், நீரில் மிதக்கக் கூடியதாகவும் இருக்கும். இலைகள் நீண்டதாக காணப்படும். 

தமிழகத்தில் பல கிராமப்புறங்களில் இக்கீரையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. வெள்ளைக் கீரைக்கு வள்ளைக்கீரை, வள்ளிக்கீரை, வள்ளல்கீரை, நீர்தாங்கீரை, கங்குன்கீரை என்ற வேறு பெயர்களும் உண்டு. சில இடங்களில் இதனை தண்ணீர்க்கீரை என்றும் அழைக்கின்றனர்.இக்கீரை தெற்காசிய நாடுகள், ஆப்ரிக்கா, சீனா, அமெரிக்கா, மலேசியா, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வளருகிறது.

வெள்ளைக்கீரையின் தாவரவியல் பெயர்

இப்போமியா அக்குவாடிக்கா(Ipomoea aquatica) ஆகும். இது ஆங்கிலத்தில் Water Spinach என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் தாய்ப்பாலை பெருக்கும் தன்மை கொண்டது என்று சொல்லப்படுகிறது.

 வெள்ளைக்கீரையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் ஏ மற்றும் சி.

தாதுக்கள்: கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ்.

தாவர மூலக்கூறுகள் 

பிளேவோனாய்டுகள், கரோட்டினாய்டுகள், டானின்கள், சாப்போனின்கள், பீனாலிக் அமிலங்கள் போன்றவை உள்ளன. இவையனைத்துமே உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை அகற்றி, உடலுக்கு ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரஸை தடுக்கிறது. இதன் காரணமாகவே இக்கீரை பல்வேறு மருத்துவ பண்புகளைக் கொண்டதாகத் திகழ்கிறது. 

மருத்துவ பயன்கள்

*வைட்டமின் ஏ வெள்ளைக்கீரையில் நிறைந்துள்ளதால் கண்பார்வை தொடர்பான சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது.
*வைட்டமின் சி, நிறைந்திருப்பதினால் தோல் சார்ந்த பிரச்னைகளை தடுப்பதில் சிறந்து விளங்குகிறது. மேலும் சருமப் பொலிவினை மேம்படுத்த உதவுகிறது. 
*உடல் வலிமைக்கு உதவக்கூடிய தாதுக்களை இக்கீரை கொண்டுள்ளதால் இக்கீரை சிறந்த கீரையாக கருதப்படுகிறது.
*ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு உதவுகிறது.
*குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளை சீர்செய்வதில் வெள்ளைக்கீரை தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டுள்ளது.
*நார்ச்சத்து நிறைந்துள்ளதினால் மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு உதவுகிறது.
*நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக்கோளாறு, போன்றவற்றிற்கு உதவுகிறது.
*ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை தடுக்கிறது. 
*இக்கீரை எந்தவித பக்கவிளைவினையும் தராது.
*உடல் வெப்பத்தைக் குறைக்கும்: உடலில் ஏற்படும் அதிக வெப்பத்தை தணிக்கும் தன்மை கொண்டது. 
*சிறுநீர்ப் பிரச்சனைகளை தீர்க்கும்: நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, நீர்க்கட்டு போன்ற சிறுநீர்ப் பாதை சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். 
*தசை பலத்தை மேம்படுத்தும்: தசைகளை வலுப்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். 
*வாத, பித்த, கபத்தை சமன்படுத்தும்: வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களை சீர்படுத்தும். 

அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை நீக்கும் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளைக் களைய உதவும். 

புண்களை ஆற்றும்: ஆசன வாயில் ஏற்படும் புண், கடுப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும். 

இதில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் நீர் இழப்பைத் தடுக்கிறது, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது, உடலுக்கு குளிர்ச்சி மற்றும் சத்துக்களை அள்ளித்தரும். 
வெள்ளைக்கீரையை பொரியல், கூட்டு, சூப் என செய்து அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். இருப்பினும் தண்டு பகுதியினை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நீர்நிலைகளில் இக்கீரை கிடைக்கப்பெறுவதினால் தண்டில் கிருமிகளின் தாக்கம் இருக்கலாம். ஆகையால் இலையினை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துவது சிறப்பு.

வெள்ளைக்கீரை சமையல் வகைகள்

வெள்ளைக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை தரும்.

கீரை சாம்பார்: வெள்ளைக்கீரையை, சின்ன வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, துவரம் பருப்பு, கடுகு, வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து சாம்பார் தயாரிக்கலாம்.
கீரை கூட்டு: வெள்ளைக்கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். இது சுவையானது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானது.
கீரை மசியல்: வெள்ளைக்கீரையை நன்றாக வேகவைத்து, மசித்து, தாளித்து மசியலாக செய்யலாம். இது வயிற்றுக்கு இதமாகவும் சத்தானதாகவும் இருக்கும்.
கீரை சூப்: வெள்ளைக்கீரையை தண்ணீர் அல்லது காய்கறி சாறு சேர்த்து சூப் தயாரிக்கலாம். இது உடல் நீர்ச்சத்தை பராமரிக்க உதவும்.
கீரை பொரியல்: வெள்ளைக்கீரையை பொடியாக நறுக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து, கீரை பொரியல் செய்யலாம்.
கீரை சூப்: வெள்ளைக்கீரையை தண்ணீர் அல்லது காய்கறி சாறு சேர்த்து சூப் தயாரிக்கலாம். இது உடல் நீர்ச்சத்தை பராமரிக்க உதவும்.
கீரை கொழுக்கட்டை: வெள்ளைக்கீரையை கொழுக்கட்டையுடன் சேர்த்து தயாரிக்கலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு சமையல் வகையாகும். 

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா