வாய்ப் புற்றுநோய்



வருமுன் காப்போம்!

மாறி வரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால், புற்று நோயினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
அந்தவகையில், வாய்ப் புற்றுநோயும் ஒன்று. உலகளவில் வாய்ப்புற்றுநோயில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தநிலை தொடர்ந்தால், வரும் 2030க்குள் வாய்ப்புற்று நோயில் இந்தியா முதன்மை நாடாக மாற வாய்ப்புள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, பொது மக்களுக்கு வாய்ப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இந்திய வாய்வழி மற்றும் மாக்ஸில்லோ ஃபேஷியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் இணைந்து AOMSI (The Association of Oral & Maxillofacial Surgeons of India) என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் கேன்சர் கேர் கனெக்ட் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இது குறித்து ஏஓஎம்எஸ்ஐ இன் தலைவர் மருத்துவர் எஸ்.ஜிம்சன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

“நாளுக்கு நாள் பெருகி வரும் வாய்ப்புற்றுநோயினால், பொது மக்கள் பலரும் பாதித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் பாதிப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கக் கூடும். 

எனவே, முகம், வாய் மற்றும் தாடை புற்றுநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம்கள் அமைக்கும் திட்டத்தை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம், இலவசமாக வாய்ப்புற்று நோயை கண்டறியும் சோதனைகளை மேற்கொள்ளவும், சிகிச்சைகள் பெறவும், வருமுன் தற்காத்துக் கொள்ளவும் முடியும். அதுவே, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமும் ஆகும்.

 இந்த முகாம்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் மாவட்டம் தோறும் பல்வேறு இடங்களில் வார இறுதி நாட்களில் நடக்கவுள்ளது. அதில் புற்றுநோயை கண்டறியும் நவீன கருவிகள் மூலம் ஐந்து நிமிடத்தில் ஒருவருக்கு வாய்ப்புற்று நோய் இருக்கிறதா.. இல்லையா.. வரும் காலங்களில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை துல்லியமாக கணித்து கூறிவிட முடியும். 

மேலும், சோதனையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை வழிநடத்தி உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்து தருகிறோம். எனவே, பொது மக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

வாய்ப்புற்றுநோய் என்றால் என்ன.. யாருக்கெல்லாம் வரலாம்…

வாய்ப்புற்றுநோய் என்பது முகம், வாய், நாக்கு, தாடை, தொண்டை பகுதியில் ஏற்படும் புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. காரணம், ஆண்களிடையே உள்ள புகைப்பழக்கம் மற்றும் புகையிலை, சுபாரி, குட்கா, மாவா, மது பயன்பாடு போன்றவற்றினால் ஏற்படுகிறது. 

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்றால், புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு நேரிடையாக வாயில் புகையிலையை அடக்குவதால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.

இது தவிர, கூர்மையான பற்கள் உள்ளவர்கள், அதிக காரமான மசாலா கலந்த உணவுளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்கள் போன்றோருக்கும் வாய்ப்புற்று நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனை ஆங்கிலத்தில் (SSSS - smoking, sharp tooth, spicy food, spirt) என்று சொல்கிறோம். 

இந்தப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.இதில், மிகவும் வருந்தக்கூடிய விஷயம் என்றால், இன்றைய சூழ்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே இந்த பழக்கங்கள் அதிகரித்து வருவதால், மிக இளம் வயதிலேயே பலரும் இந்தப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.

அறிகுறிகள்

வாய்ப்புற்று நோயைப் பொருத்தவரை ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. இதனால், பலரும் பெரும்பாலும் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரை அணுகுகின்றனர். அந்த நிலையில் அவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. மற்றபடி வாய்ப்புற்றுநோயை பொருத்தவரை எந்த இடத்தில் புற்று செல்கள் உள்ளது என்பதை பொருத்து அறிகுறிகள் மாறுபடும்.

உதாரணமாக, தொண்டைப்புற்று ஏற்பட்டிருந்தால், சிலநாள்களில் குரலில் வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். நாளடைவில் தொண்டை கட்டியது போன்று குரல் மாறிவிடும். சாப்பிடும்போதும் விழுங்குவதிலும் சிரமம் இருக்கும். எந்த உணவைச் சாப்பிட்டாலும் தொண்டையில் அடைப்பது போன்ற உணர்வு இருக்கும்.

வழக்கத்துக்கு மாறாக எச்சில் நிறைய சுரக்க ஆரம்பிக்கும். இவை எல்லாம் தொண்டைப் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.அதுவே, தாடை, நாக்கு பகுதிகளில் புற்று ஏற்பட்டிருந்தால், வாயில் புண் வரலாம். இந்த புண் ஏற்பட்டு இரண்டு வாரத்திற்கு மேல் ஆறாமல் இருந்தால் அல்லது ஒருமாதம் வரை தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்ள வேண்டும்.

மேலும், பற்கள், ஈறுகளில் காணப் படும் நாள்பட்ட வீக்கம், கழுத்துப் பகுதியில் நெறிகட்டிகள் போன்று தோன்றுவது இவையும் வாய்ப்புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும். இவைகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்

நாள்கணக்கில் ஆறாமல் இருக்கும் புண்ணின் சதைப்பகுதியை எடுத்து பயாப்ஸி சோதனை செய்யப்படும். அதன்மூலம், புற்றுசெல்கள் இருப்பது உறுதியானால், அந்த புற்று செல்கள் எந்தப்பகுதியில் இருக்கிறது என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். 

வாய்ப்புற்றுநோய்க்கான பொதுவான சிகிச்சை என்றால், அது அறுவை சிகிச்சை மேற்கொள்வதுதான். அதாவது, தாடை, நாக்கு பகுதியில் வரும் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சைதான் செய்தாக வேண்டும்.

ஒருவேளை தொண்டைப் புற்றுநோயாக இருந்தால், அப்போது அறுவை சிகிச்சை செய்வது கடினம். ஏனென்றால், தொண்டைப்பகுதியில் ரத்தக் குழாய்களும் குரல்வளையும் அருகில் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்யும்போது, ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். மேலும் குரல்வளை பாதிக்கப்பட்டு பேச முடியாமலும் போகலாம். 

எனவே, தொண்டைப் புற்றுக்கு கதிர்வீச்சு எனும் ரேடியோ தெரபி சிகிச்சையே மேற்கொள்ளப்படும். ஒருவேளை முற்றியநிலையில் ஏற்கெனவே குரல்வளை பாதிக்கப்பட்டு பேச்சு போயிருந்தால், அப்போது அவர்களுக்கு அறுவைசிகிச்சைமேற்கொள்ளப்படும்.

அதுபோன்று, சிலர் புற்றுநோய் முற்றியநிலையில் வாயே திறக்க முடியாமல் வருவார்கள். அந்த நிலையில் வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் கடினமானது. அப்போது அவர்களுக்கு ரேடியோ தெரபி, கீமோ தெரபி, இம்னோ தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், தற்போது சிகிச்சை முறையில் நிறைய அட்வானஸ்ட் டிரீட்மெண்ட்கள்
வந்துவிட்டது.

உதாரணமாக, வாய்ப்புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சையே பிரதானமாக இருப்பதால், முகத்தோற்றத்தில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால், இந்த புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவரும் உடன் இருப்பார். அதனால், முடிந்தளவு முகத்தோற்றம் மாறாமல், பழையபடி முகத்தை கொண்டு வந்துவிட முடியும்.

- ஸ்ரீதேவி குமரேசன்