எடைக் குறைப்பு... ஓர் அறிவியல் நோக்கு!
வலியை வெல்வோம்!
வாக்கிங் போகணும், ஜிம்முக்கு போகணும், உடல் எடையைக் குறைக்கணும் போன்ற புத்தாண்டு தீர்மானம் எடுத்துக்கொண்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து நமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்றும் முன்னர் இதோ பொங்கலும் வந்து விட்டது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்‘ என தைத்திருநாளையும் கொண்டாட ஆயத்தமாகிவிட்டோம். இருந்தாலும் அந்த உடற்பயிற்சி, நடைப்பயிற்சி விட்ட குறை, தொட்ட குறையாக இருக்கிறதுங்கிற உங்க மைண்ட் வாய்ஸை நான் கேட்ச் பண்ணிட்டேன். ஆகவே இந்த இதழில் காயங்களைப் பற்றிய தொடருக்கு ஒரு சின்ன ப்ரேக்…
தற்போது தடுக்கி விழுந்தால் உடல் எடை குறைப்புக்கு ஆயிரம் டிப்ஸ் கிடைக்கிறது. நாம் ஒன்று செய்து அதில் வெற்றி கண்டுவிட்டால் போதும் இவ்வளவுதான்டா, இது ரொம்ப சிம்பிள், இதை ஃபாலோ பண்ணினால் ஈசியாக வெயிட் குறைத்துவிடலாம் என்று நமக்கு நாமே பெரிய வல்லுநர்களாக மாறி பத்து பேருக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடுவோம்.
சோசியல் மீடியாவில் குழு அமைத்து ஆலோசனை சொல்லவோ, நூறு பேரை உற்சாகப்படுத்தவோ ஆரம்பித்திடுவோம். சுற்றத்தாரை உற்சாகப்படுத்துவதில் தவறேதும் இல்லை. மிகவும் அருமையான விஷயம்தான்.
ஆனால், இது அறிவியல் பூர்வமானது என்று எந்த நிபுணர்களின் உதவியும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஒருவருடைய உடலமைப்பு, உடல்நலத்தைப் பற்றி அறியாமல் ஆலோசனை சொல்வது தவறான உடல்நிலை மாற்றங்களுக்கு வழி வகுக்கும். அதைக் கருத்தில் கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும்.
பல வருடங்களுக்கு முன்பாக கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலைக்கான நேர்காணலில் உடல் எடை குறைந்ததை எவ்வாறு அளவிடுவீர்கள், எப்படி அறிந்துகொள்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஓவர் ஸ்மார்ட்டாக பதில் சொல்கிறேன் என்று கடைசி வரியாக நமது உடலை கண்ணால் பார்த்து தெரிந்து கொள்வோம் என்று கூறினேன். நான் படித்த படிப்பின்படி அது மிகத் தவறான பதில் என்றாலும் காலப்போக்கில் அதன் அர்த்தத்தை வேறு விதத்தில் உணர்ந்துகொண்டேன். நமது உடல் எடை குறைகிறது என்பதை நமது கண்களின் வழியே, மூளைக்கு எட்டிய பிறகுதான் நமது மனதில் திருப்தி ஏற்படுகிறது அல்லது நான்கு பேர் நம்மை பார்த்து, ‘பரவாலயே நல்லா ஃபிட்டாகிட்ட எப்படி இப்படி இளைச்சு போயிட்ட’ என்று கேட்கும் போதுதான் நாம் செய்த முயற்சிக்கு பலன் கிடைத்து விட்டது என்றுமனம் குதூகலிக்கும்.
தற்போது போல் உடனுக்குடன் புகைப்படங்கள் எடுத்து, ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ என்று ஒப்பிட்டு பார்க்க முடியாத காலகட்டத்தில், ஆளுயரக் கண்ணாடி முன் நின்றோ அல்லது வெறுமனே கண்களால் பார்த்து இடுப்பிலே குறைந்து விட்டது, வயிறு குறைந்தது இதோ XXL விருந்து XLக்கு உடை மாறிவிட்டது என்பதிலேதான் ஆகப் பெரும் ஆறுதல் அடையும் மனம்.
நாம் குண்டாக இருக்கிறோமா ஒல்லியாக இருக்கிறோமோ என்பதைக்கூட அடுத்தவர்களின் கருத்தை வேண்டியே காத்துக் கிடக்கிறோம். ஒருத்தவங்க என்னைய பார்த்து அளவா இருக்கேன்னு சொல்றாங்க. ஆனால் இன்னோருத்தவங்க குண்டுன்னு சொல்றாங்க. இதுக்கு ஒரு வரைமுறையோ வரையறையே கிடையாதான்னு யோசிப்போம் இல்லையா?
இது போன்ற குழப்பத்தைத் தீர்க்கத்தான் உலகம் முழுமைக்குமான பொதுவானதாக உலக சுகாதாரம் நிறுவனம் (WHO) உடல் பருமனை வரையறுத்திருக்கிறது.அதாவது உடல் பருமன் அல்லது அதிக எடை என்பது, அசாதாரணமாகவோ, அதிகப்படியாகவோ உடலில் சேகரமாகும் கொழுப்பு. இது எதிர்மறையாக உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
அதிக உடல் எடையை (over weight), உடல் பருமனை (obesity) எவ்வாறெல்லாம் கணக்கிடலாம்?ஆங்கிலத்தில் BMI (Body mass index) எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் மூலமாக உலக சுகாதார மையம் அதிக உடல் பருமன், உடல் எடையை வரையறுக்கிறது. இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது: பிஎம்ஐ = எடை (கிலோ) / உயரம்^2 (மீ^2).
நமது உடல் எடையை நமது உயரத்தில் மீட்டர் அளவீட்டால் இரண்டு மடங்கால் வகுத்தால் கிடைப்பது தான் உடல் பருமன் குறியீட்டு எண் (BMI).
1. உடல்பருமன் குறியீட்டு எண் (BMI)
*18.5 கீழ் - உடல் எடை குறைவு (Underweight) *18.5-24.9 - சரியான உடல் எடை (Normal weight) *25.0-29.9 - அதிக உடல் எடை ( over weight/Pre-obesity) *30.0-34.9 - உடல்பருமன் 1ம் படிநிலை ( Obesity class I) *35.0-39.9 - உடல்பருமன் 2ம் படி நிலை (Obesity class II) *Above 40 - உடல்பருமன் 3ம் படி நிலை (Obesity class III ).
2.இடுப்பு சுற்றளவு (Waist circumference)
*ஆண்கள் - >102 செ.மீ *பெண்கள் - > 80 செ.மீ.
3.இடை- தொடை சுற்றளவு விகிதம் (Waist Hip Ratio) இடை சுற்றளவு ÷தொடை சுற்றளவு
*ஆண்கள் - >1.0 *பெண்கள் - >0.85.
4.ஸ்கின் ஃபோல்ட் காலிபர்(skin fold caliper)
இதன் மூலமாக உடலில் தோலிற்கு அடியில் சேகரமாகும் கொழுப்பின் அளவை ஓரளவுக்கு அளவிட முடியும்.மேற்குறிப்பிடப்பட்டவை அனைத்தும் உடலின் அடிபோஸ் திசுக்களில் சேகரமாகும் கொழுப்பின் அளவினை கணக்கீடு செய்யும் அளவீட்டு முறைகள்.
உடலின் எந்த பாகத்தில் அடிப்போஸ் திசுக்கள் அதிகமாக உள்ளதோ அங்கதான் உடற்பயிற்சியால் உடல் உழைப்பினால் கரைக்கப்படாத அதிகப்படியான கொழுப்புக்கள் சேகரமாகிறது. சிலருக்கு வயிற்றுப்பகுதியில், சிலருக்கு தொடைப் பகுதியில், சிலருக்கு, கையின் மேற்பகுதியில் இருக்கும்.
அடிப்போஸ் திசுக்கள் அல்லது செல்லின் வடிவம், எண்ணிக்கையை பொறுத்து உடல்பருமன் இரண்டு வகைப்படும்.
1.ஹைப்பர்டிராஃபிக் ஒபிசிட்டி (Hypertrophic obesity):
கொழுப்பு செல்லின் அளவு(fat cell size) அதிகரிக்கும். இவ்வகை உடல் பருமனை குறைப்பது எளிது.
2.ஹைப்பர்ப்ளாஸ்டிக் ஒபிசிட்டி(Hyperplastic obesity):
இவ்வகையில் கொழுப்புசெல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும். நமது ஆரோக்கியமான சாதாரண உடல் எடையைவிட 30 கிலோ மற்றும் அதற்கும் மேல் அதிகரித்திருந்தால் ஹைப்பர் ப்ளாஸ்டிக் ஒபிசிட்டி வகையாகும்.
இவ்வகை உடற்பருமனை கடுமையான உடற்பயிற்சி மற்றும் தொடர் உணவுகட்டுப்பாட்டின் மூலம் மட்டுமே குறைக்க முடியும்.
உடல் எடை குறைப்பில் உடலின் வடிவத்தை பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. எக்டோமார்ஃப் (Ectomorph)
2. மீசோமார்ஃப் (Mesomorph)
3. என்டோமார்ஃப் (Endomorph).
1.எக்டோமார்ஃப்(Ectomorph)
நீண்ட ஒல்லியான உடல்வாகு, இடுப்பின் அளவைவிட தோள்பட்டையின் அளவு குறுகியதாக இருக்கும்.
2.மீசோமார்ஃப் ( Mesomorph)
ஹவர் கிளாஸ் ஃபிகர்(hourglass figure ) அல்லது நடுத்தர உடல் வாகை கொண்டவர்கள், கொழுப்பைவிட உடல் தசைகளின் அளவு அதிகமாக இருக்கும்.
3.எண்டோமார்ஃப் (Endomorph)
பேரிக்காய் வடிவ உடல்வாகு. தசைகளின் விகித்தைவிட கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும். முக்கியமாக வயிறு, இடுப்பு, தொடைப் பகுதிகளில் அதிகமாக கொழுப்பு சேகரமாகி எடை அதிகரித்து இருக்கும்.
இவை முக்கியமான மூன்று வகைகள் இந்த வகை உடலமைப்புகள் கலந்தும் வேறு விதமான உடலமைப்பையும் சிலருக்கு இருக்கும் அவை,
i.எக்டோ-மீசோமார்ஃப்ஸ்(Ecto -mesomorphs):ஒல்லியான தேகம் ஆனால் தசை திரட்சியோடு இருப்பர்.
ii.மீசோ-எண்டோமார்ஃப்ஸ் (Meso-endomorphs):
தசை திரட்சி பெரிதாக காணப்படவில்லை என்றாலும் கூட விளையாட்டு வீரர்களைப் போல வலிமையான உடல்வாகு கொண்டவர்களாக இருப்பர்.
iii.எக்டோ-எண்டோமார்ஃப்ஸ் (Ecto-endomorphs):
இயற்கையாக ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள். ஆனால் சரியான உடற்பயிற்சி, சரியான உணவுப்பழக்கம் இல்லாமல் இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளவர்கள். மேலே நாம் கண்டறிந்த உடல்பருமன் வகைகள், அளவிடும் முறை, உடல்வாகு இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் உடற்பயிற்சியோ, உணவு கட்டுப்பாட்டு முறைகளையோ நிபுணர்கள் பரிந்துரைப்பர்.
உடல்பருமன் அதிகரிப்பதால் எலும்பு மூட்டுக்கள் மட்டுமல்லாமல் , உடல் உபாதைகள் எவ்வாறு ஏற்படுகிறது, மேலும் உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள், நடைபயிற்சியால் உடற்செயலியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது எவ்வாறு செயல்பட்டு உடல் எடையை பருமனை குறைக்க உதவுகிறது என்பதை அடுத்த இதழில் காண்போம்.
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
|