சந்தேகமெனும் முள்விதை Paranoid ஓர் அறிமுகம்



அகமெனும் அட்சயப் பாத்திரம்

நவீன உளவியல் பேரனாய்டு பாதிப்பு ஏற்பட்டவரை நீங்கள் எதனைக் கொண்டும் சமரசம் (Compromise) செய்து விடமுடியாது என்கிறது. அவர் ஏற்கெனவே மனதில் பொய்யான ஒன்றை உண்மை என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறார். இதுவே உறுதிக் கோணம் (Confirmation bias) என்று குறிப்பிடப்பட்டு உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. தான் உண்மை என்று அவர் நம்பும் ஒன்றுக்கு மாறான எதனையும் அவரால் ஏற்கவே முடியாது.

இதனால் தவறான முடிவையே சரியென தீர்மானித்த நிலையில் வாழ்வை சிக்கலாக்கிக் கொள்பவர்கள் பலர்.உண்மையை நீங்கள் சான்றுகளோடு கூறினாலும் அவரைத் திருப்திப்படுத்த முடியாது. 
தகுந்த உளவியல் சிகிச்சையை மேற்கொள்வதே பேரனாய்டுக்கு சரியான  தீர்வாக இருக்கும்.உரிய காலத்தில் முறையான மனநல ஆலோசனைகளைப் பெறத் தவறினால் இந்த அவநம்பிக்கை ஆளுமைக் கோளாறானது, (PPD - Paranoid Personality Disorder) மாயத் தோற்றக் கோளாறாக ( Dilutional Disorder) உருமாறும். போலியாக ஒன்றை நம்பி மூழ்கி விடுவார்கள்.

அதன் அடுத்த நிலையாக ‘Scheizhopernia’ எனும் முற்றிய மனச்சிதைவு (தீவிர உளப்பிறழ் ) நோயாக மாறுவதற்கான சாத்தியங்கள் உண்டு.தான் எதைச் செய்தாலும் தவறில்லை என்ற நிலை கெட்டிப்பட்டு அடுத்தவரை உடல்ரீதியாகத் தாக்குவது, சமூகத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது (Anti -Social) என்று கட்டுப்படுத்த முடியாத நிலையை நோக்கிச் செல்லும்.எனவே, சந்தேகமெனும் விதை முதன்முதலில் மனதில் விழும்போதே கலந்து பேசி சரி செய்ய முயற்சி செய்வது நல்லது.

ஐயப்பித்து நிலைக்கு ஆளானவர்கள் தன்னை மற்றவர்கள் தாழ்ந்த நிலையில் வைத்துப் பார்க்கிறார்களோ என்ற எண்ணத்தின் பிடிப்பில் இருக்கிறார்கள். அன்றாடப் பணிகள்,  கடமைகள், அடுத்தடுத்த இலக்குகள், வாழ்வில் முன்னேற்றம் என்பவற்றிலிருந்து விலகி முழுவதுமாக அடுத்தவரின் மீது கவனக்குவிப்பு செய்கிறார்கள். இன்னொருவர் என்ன செய்கிறார், எங்கே போகிறார், ஏன் இப்படி இருக்கிறார் என்பதையொட்டிய சிந்தனைத் தேக்கம் ஏற்படும்.

அது மூளைச் சோர்வையும், விரக்தி மனநிலையையும் உண்டாக்கும். இத்தகைய மனநிலை உள்ளவருக்கு அவரின் பிறந்த நாளில் சஸ்பென்ஸ் ஆக ஒரு பரிசைக்கூட உடன் இருப்பவர்களால் கொடுக்க முடியாது. அவர்களுக்குத் தெரியாமல் நீங்கள் ‘கேக்’ ஆர்டர் செய்ய, ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்ய முயன்று கொண்டிருப்பீர்கள். 

ஆனால் அவர்களோ எனக்குத் தெரியாமல் எங்கே சென்றாய் / யாரிடம் பேசினாய் என்று விசாரித்து, பரிசோதிக்கும் கேள்விகளால் உங்களை துளைத்து விடுவார்கள். 

இவ்வாறு அவர்களுக்கு வரவிருக்கும் நன்மையை அவர்களே கெடுத்துக் கொள்வார்கள்.இவர்கள் ஒருவகையில் பரிதாபத்திற்கு உரியவர்களே. இத்தகு பாதிப்பு கொண்டவர்களை நேரடியான கரிசனமான கவனிப்பு மூலமாகவும், உளவியல் ஆலோசனைகள் மூலமாகவும் குணப்படுத்த முயல்வது அவசியம்.

சந்தேகம் ஆட்கொண்ட மனநிலையானது,  பெண்டுலத்தைப் போல உண்மைக்கும் பொய்க்கும் நடுவே ஆடிக்கொண்டே இருக்கும்.  மன ஊசலாட்டம்,  மூளை அதிர்வுகள் நாளுக்குநாள் அதிகரிக்கும்.இந்நிலையினை ‘ஒன்றைத் தெரிந்துகொள்ள இரண்டையே பற்றி நிற்பது’ என்று ஆங்கில மானுடவியலாளர் மற்றும் சமூக விஞ்ஞானி க்ரிகொரி பேட்சன் (Gregory Bateson) குறிப்பிட்டுள்ளார்.

எது சரி எது தவறு  என்று முடிவெடுக்க முடியாமல் தொடர்ந்து மூளை அலைவுற்றுக் கொண்டேயிருக்கும்.சோர்வுற்ற மூளை தன்னைப் பிழைத்துக் கொள்ள,உயிரை தக்க வைக்க (Survival act ) அடுத்தவரை ஆத்திரமூட்டும். சிலநேரம் தன்னையே மாய்த்துக் கொள்ளவும் முயற்சி செய்யும். உங்களுடைய நெருங்கிய வட்டத்தில் எவரேனும் சந்தேகம் ஆட்கொண்ட மனநிலையில் இருந்தால் தாமதமின்றி அவருக்கு உதவி புரிய வேண்டும். 

சந்தேகத்திலிருந்து விடுபட வழி காட்டுவதே நல்ல மனிதமாகும். 24x7 நேரமும் மனிதர்களை எடை போட்டுக்கொண்டு இருப்பது என்று சமநிலை தவறும் பொழுது பெருங்குழப்பங்கள் விளையும் என்பதை நமக்குள்ளே நாம் சொல்லிக் கொள்வது இன்றைய சூழலில் மிகவும் அவசியம்.

கணவன் /மனைவி, காதலன்/ காதலி என்று மட்டுமல்ல நண்பர்கள், மாமன் /மச்சான், அண்ணன்/ தம்பி என பல உறவுகளிடத்தும் அவர் நம்மை ஏமாற்றிவிட்டாரோ என்ற எண்ணமே பலநேரம் தலைதூக்கும்.உறவின் நெருக்கத்திற்காக மட்டுமல்லாமல் பணம் தொடர்பான விஷயங்களில் தவறான ஒரு எண்ணம் தோன்றி, அதுவே நாளடைவில் வலுப்பட்டு விடும். சிறு சந்தேகத்தில் ஆரம்பித்து பலகாலம் வழக்கு, நீதி மன்றம் என அலைந்துகொண்டிருப்பவர்களை அன்றாடம் காண்கிறோம்.

தான் வேலைக்குச் சென்ற பிறகு மனைவி இன்னொருவருடன் பழகுகிறாரா என்றறிய, பீரோவில் ஒளிந்திருந்த  கணவனைக் கதையாகக் கேள்விப்படுகிறோம். ‘புரியாத புதிர்’ எனும் திரைப்படத்தில் ரகுவரன் கதாபாத்திரம் மனைவியை சந்தேகப்பட்டு உறவை மெல்ல மெல்லச் சீரழிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஈரம், சத்தம் போடாதே, திண்டுக்கல் சாரதி, மைனா போன்ற பல திரைப்படங்களில் சந்தேகப்படுபவர்களைப் பார்த்து ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ என வருந்துகிறோம். ஆண்கள் பெண்களை சந்தேகப்படுவதுதான் திரையில்
பெரும்பாலும் காட்டப்படுகிறது.

காதலன் /காதலியின் அலைபேசியை ஆராய்ந்து அது யார் / இது யார் என மாறி மாறிக் குற்றம் சாட்டும் love today (2022) போன்ற திரைப்படங்களை ரசித்துப் பார்த்துச் சிரிக்கிறோம். ஆனால்
இது சிரித்து அலட்சியமாகக் கடந்துவிடக்கூடிய விஷயமில்லை. சிந்திக்க வேண்டிய வாழ்வியல் சீர்கேடு. சந்தேகமெனும் குறைபாடு. உடலியலின் அடிப்படையில்  ஆதிக்கம் செலுத்தும் பண்பாகும்.ஆண்களின் குரோமோசோம்களில் ஆதிக்கவுணர்வு நிறைந்திருப்பதை அறிவியல் வலியுறுத்துகிறது.

எனவே, இயற்கையிலேயே ஆளுமையான தலைமை குணம் கொண்ட ஆல்ஃபா (Alpha male) ஆண்கள் சந்தேகப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்று மருத்துவம் கூறுகிறது.சுயமதிப்பீடு குறைந்த, பாதுகாப்பற்ற உணர்வு கொண்ட பெண்களில் பலரும் சந்தேகநோய்க்கு ஆளாகிறார்கள் என்ற பார்வையும் சமூகவியலாளர்களால் வைக்கப்படுகிறது. ஆக, சந்தேகம் பீடித்து சக மனிதர்களை ஆட்டிப்படைப்பதில் ஆண் பெண் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதே உளவியல் உண்மை.

ஐயப்பித்து சில அறிகுறிகளை ஆரம்ப நிலையில் காட்டும். அவை 1. பிறருடைய சிறு சிறு தவறுகளை மன்னித்து ஏற்க முடியாத நிலை 2. குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதிகமாகக் கோபப்படுவது,  3.வெளிப்படையாக தன்னுடைய மென்மையான பக்கங்களைத் திறந்து காட்ட இயலாத நிலை 4.பொறாமை உணர்வு 5.ஆதிக்க மனப்பாங்கு 6.சமாதானம் அடைவதில் சிரமம் 7.நேரத்தின் வரையறையின்றி வாக்குவாதங்களில் ஈடுபடுவது போன்றவையாகும்.

இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் உடனடியாக சந்தேகத்தை வெளிப்படையாகப் பேசி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் புதிய வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அணுக வேண்டும்.சில இடங்களில் உண்மையாகவே தவறு நடக்கும். அதனை நாம் தேவையற்ற சந்தேகம் என்று அசட்டை செய்துவிட முடியாது. உரிய நேரத்தில் தீர்க்கப்படா விட்டால் இன்னொருவர் தவறுகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க நாம் காரணமாகி விடுவோம்.

மேலும் அந்த சந்தேகநோய் பணியிடம், சமூகம் என எங்கும் பரவக்கூடும். இப்படியானவரோடு வாழ்பவர் உறவில் எப்போதும் ஏமாற்றம் அடைபவராக மனவலியோடு இருக்கவும் நேரிடும். அது நாளுக்குநாள் வளர்ந்து பிரிவு,விவாகரத்து, தற்கொலை எண்ணம் போன்ற விளைவுகளை நோக்கி  நகர்த்தும். எனவே, உடனுக்குடன் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். தெளிவுப்படுத்த விருப்பமில்லை, வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நாகரீகமான பிரிவை நட்புறவோடு ஏற்கச் செய்வதே மனநலத்திற்கு உகந்தாகும். 

ஆனால் பலரும் இன்று என் விருப்பம், என் முடிவு, என் வாழ்வு, என்னைத் தவறாக நினைத்தால் என்ன,  நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும், எதற்குப் பேச வேண்டும் என்றே இருக்கிறார்கள். இது தற்காலிகமான தப்பித்தல் வழியே அன்றி தீர்வு இல்லை.

வேறு சில ஆளுமைக்கோளாறு (Personality disorders ) கொண்டவர்கள் அடுத்தவருக்கு சந்தேகம் வரும்படியாகவே தொடர்ந்து குறிப்புகளைக் கொடுப்பது, அரைகுறைத் தகவல்களைப் பகிர்ந்து குழப்புவது என்றிருக்கிறார்கள்.

இதுவொரு எதிர்மனநிலை விளையாட்டு. அடுத்தவரை சந்தேகப்படும்படி தூண்டி, அவரின் குழப்பங்களைக் கண்டு குரூரமாகக் குளிர் காய்வார்கள். இவர்கள், தன்னுடைய அறிவு, திறமை கொண்டு பிறரை ஈர்க்க முடியாது என்று உள்ளே அவநம்பிக்கையில் தோய்ந்து குலைந்து போனவர்கள்.

அதனால், சந்தேகப்பிடியில் அடுத்தவரை வைத்துக் கட்டுப்படுத்த விரும்புகிறார் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். ‘என்னை சந்தேகப்பட்டுட்டான்.... சந்தேகப்பட்டுட்டான்’  என்று இறங்கி, போட்டிக்களத்தில் நாமும் குதிக்கலாம். ‘நீ என்ன ஒழுங்கா..அப்படி செய்தாயே அது என்ன இது என்ன’ என்று கேட்டு நாமும் சந்தேகிக்கலாம்.அது மனித இயல்பின் எதிர்வினையே. ஆனால், இப்படியே இருவரும் பதில் வலி காட்டுகிறேன் பேர்வழி என்றிருந்தால் முடிவே இருக்காது.

பேச்சு வார்த்தை, வரையறைகளை வகுத்துக் கொள்ளுதல், சந்தேகக் காரணியை இனம் காணுதல், கட்டுப்படுத்த திட்டமிடல், சுய மேம்பாட்டில் கவனம் செலுத்துதல் போன்ற நடைமுறை பயிற்சிகள் சந்தேகக்கோளாறுகளை சமாளிக்க உதவும். முறையான உளவியல் ஆலோசனைகளும், சிகிச்சைகளும் நல்ல பயன்களைத் தரும். எல்லா முயற்சிகளையும், வாய்ப்புகளையும் எடுத்துப் பார்த்தபின் மாற்றம் ஏற்படாத தீவிரப் பித்து நிலையில் விலகுதலே நலம்.

சந்தேகம் ஏற்படுவது இயற்கை. நாம் முன்பே குறிப்பிட்டது போல் அதுவே பல மாற்றங்களுக்கு, புதிய முன்னேற்றங்களுக்கு வழிவகுத்து வந்துள்ளது. ஆனால், எதிர்மறை விளைவுகளான மனஉளைச்சல், உறவு விரிசல்களை நோக்கியே சுழலும் சந்தேகம் ஒருபோதும் எவருக்கும் உதவாது என்று உணர்வோம்.

பிறர் நமக்கான சுதந்திரத்தை, மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்று எப்பொழுதும் எதிர்பார்க்கிறோம். அவற்றை நாம் நம்பிக்கையோடு பிறருக்கு வழங்க ஆரம்பிப்போம். நல்ல எண்ணங்களை விதைத்தால் நல்ல விளைவுகளே தோன்றும் இல்லையா? இதை ஐயமின்றி ஆழமாக நம்புவோம். ஐயப்பித்தை தவிர்ப்போம்.ஆம். நம்பிக்கை, அதுதானே வாழ்க்கை.

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்