இருமல் நல்லதா? கெட்டதா?
நோய் நாடி- நோய் முதல் நாடி
முத்து திரைப்படத்தில் ரஜினி தொடர்ந்து தும்மிக் கொண்டிருக்கும் போது, நடிகை மீனா ஏன் இப்படி என்னை வேலை செய்ய விடாமல் தொடர்ந்து தும்மிட்டே இருக்கீங்க என்று ரஜினியைப் பார்த்துக் கேட்பார். அதற்கு ரஜினி, இருமல், தும்மல், விக்கல், கொட்டாவி போன்ற செயல்கள் எல்லாம் அனிச்சையான விஷயங்கள் என்றும், அது ஏன் வருதுன்னும் கேட்க முடியாது, ஏன் போறேன்னும் கேட்க முடியாது என்பார்.
இந்தக் காட்சியை நாம் ரொம்ப ரசித்துப் பார்த்திருக்கிறோம். 90களில் இந்த படம் வந்த போது, சமூகத்தில் இருமல் யாருடைய தினசரி வாழ்வியலையும் பாதிக்குமளவிற்கு இல்லை. அதனால் தான், இருமல் வந்துட்டு அது பாட்டுக்கு போய்விடும் என்ற தொனியில் ரஜினி பேசியிருப்பார். இன்றைக்கு இருமல் அது பாட்டுக்கு வந்துட்டு போகும் என்று நம்மால் பேச முடியுமா? என்றால், கண்டிப்பாக இல்லை என்றே நம் மக்கள் கூறுவார்கள்.
அந்தளவிற்கு இந்த காலகட்டத்தில் வரும் இருமல் எல்லாம் மக்களை இயல்பாக செயல்பட முடியாத அளவிற்கு அவர்களின் வாழ்வியலைப் பாதிக்கிறது. இருமலுக்கு ஒரு பொது குணம் என்னவென்றால், காற்றின் மூலம் கிருமிகள் பரவுவதால், இருமல் மற்றவர்களுக்கும் பரவுகிறது. காற்றின் மூலம் பரவுகிறது என்பதை கொரோனா காலகட்டத்தில்தான் நாம் அனுபவித்திருக்கிறோம்.
அதனால் இருமல் மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு நாம் எப்பொழுதும் முகக்கவசமோ அல்லது சுத்தமான துணியை வைத்து இருமும்போது பயன்படுத்த வேண்டும்.இந்த இருமல் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறது என்றும், இருமல் என்றால் என்னவென்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இருமல் என்றால் என்ன?
நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது, ஆக்சிஜன் உள்ளே சென்று, அது ரத்தத்தில் கலந்து கார்பன் டை ஆக்ஸைடை மூச்சின் வழியாக வெளியே வரும். இந்த விஷயம் நம் உடலில் அனிச்சையாக நடந்து கொண்டேயிருக்கும். இப்படி மூச்சை உள்ளிழுப்பது மற்றும் வெளியேற்றுவது தானாக நடைபெறும் வரை நாம் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்போம்.
அதுவே, இதில் சிறுதொந்தரவு ஏற்படும் போது தான் நாம் மூச்சின் சிரமத்தைப் பற்றி யோசிப்போம். அதாவது, நாம் உள்ளிழுக்கும் காற்றை போர்ஸாக வெளியேற்றும் போது, நாம் இருமலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வோம். அதாவது, சுத்தமான காற்று மூச்சுக்குழாய் வழியாக உள்ளே போகும் போது, இயல்பாக இருக்கும். அதுவே கிருமிகளுடனோ அல்லது மாசுபட்ட புகையுடன் உள்ள காற்றையோ அல்லது தூசிகள் நிறைந்த காற்றையோ சுவாசிக்கும் போது, உடல் உள்ளே ஏற்றுக் கொள்ளாது. அந்நேரத்தில் தான், அவற்றை இருமல் மூலம் உடல் வெளியேற்ற முயற்சி செய்யும்.. மேலும், நமக்கு ஏற்படும் இருமல் இரு வகையாக இருக்கிறது. ஒன்று சளியுடன் கூடிய இருமல் மற்றொன்று சளியில்லாத உலர் தன்மையுடன் கூடிய இருமல்.
இருமல் நல்லதா? கெட்டதா?
ஒரு சொல் வழக்கு உண்டு, காய்ச்சல் வந்தால் நல்லது. அப்பொழுது தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேலை பார்க்கிறது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அது போல், இந்த இருமலும் நமக்கு நல்லதா? கெட்டதா? என்பதையும் பார்ப்போம்.இருமல் என்றாலே நுரையீரலில் பாதிப்பு மற்றும் மூச்சுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.
நுரையீரலின் செயல்பாடுகள் என்றதும் மக்களுக்கு தெரிவது, ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவது என்பதாகும் என்று நாம் அனைவரும் ஒரு சேரக் கூறுவோம். உண்மையில் நுரையீரலுக்கு இது மட்டும் வேலையில்லை. நுரையீரல் பல வேலைகளைச் செய்கிறது. அதில் மிகமுக்கியமான வேலையாக, உடலை நோய்தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. ஏனென்றால், காற்றை உள்ளிழுத்து ரத்தத்தின் வழியாகத் தான் அனுப்புகிறது. அதனால், நுரையீரலின் வழியாக கிருமிகள் உள்நுழைய எளிதாக இருக்கிறது. அதனால், உடலும் எளிதாக நோய் தொற்றுக்கிருமியால் பாதிப்படையவும் வாய்ப்பிருக்கிறது.
நுரையீரல் வழியாக காற்றும் செல்வதால், வேறுவித தொற்று நோய்களால் பாதிப்படையாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல விஷயங்கள் நடைபெறுகிறது. அதில் உடல் நோய் தொற்றுக் கிருமிகளால் பாதிக்காமல் இருக்க இருமலை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.
உடலுக்குள் தொற்று இருக்கிறது என்பதை இருமல் மூலம் நமக்கு நம் உடல் வெளிப்படுத்துகிறது.ஏனென்றால், இருமல் வராமல் இருந்தால், நம் உடலுக்குள் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடியாது.
அப்படியிருந்தால், அது நம் உடலுக்குள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால் இந்த இருமல் மூலம் வெளிப்படுத்துவதே நமக்கு நல்லது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் இனி இருமல் நல்லது என்று சொல்வோம். ஆனால், எந்தவொரு விஷயமும் ஒரு அளவுக்குள் இருக்க வேண்டும். அளவை மீறினால் எப்பொழுதும் பாதிப்பு தான் என்பது நமக்குத் தெரியும். இருமலும் அதன் அளவை மீறும் போது, எப்படி நம்மைப் பாதுகாப்பது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் அதிகமான இருமலால், வாந்தி வரவும், மயக்கம் ஏற்படவும், ஹெர்னியா ஏற்படவும், சில நேரங்களில் இருமும் போது சிறுநீர் சட்டென்று வெளிவரவும் வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் இம்மாதிரியான பாதிப்புகள் அதிகமாகும் போது ஒருவரின் இயல்பான செயல்பாடுகளைச் செய்ய முடியாமல் தவிப்பார்கள். இருமலின் தீவிரம் அதிகமாகும் போது, மருத்துவரின் ஆலோசனையோடு சிகிச்சைகள் எடுக்க வேண்டும்.
Post Viral Cough எதனால் ஏற்படுகிறது?
தற்போதைய சீசனில் சளி முழுவதும் வெளியேறி, ஆனால் இருமல் மட்டும் விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள். ஏனென்றால், Post Viral Cough ல் சளி முழுவதும் வெளியேறி, நார்மல் ஆனாலும், மூச்சுக்குழாய் அழற்சி நார்மல் நிலைமைக்கு வர சில நாட்களாகும். அதுவரை நம் மூச்சு குழாயில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். அது தான், வைரஸ் காய்ச்சலுக்கு பின்வரும் இருமலாகும். இவ்வகையான இருமல், குறைந்தது இரண்டு வாரத்திலிருந்து அதிகபட்சம் எட்டு வாரம் வரையிருக்கும்.
அதனால் பயப்படத் தேவையில்லை. இந்நேரத்தில் தான், இருமலுக்கு நாம் செய்யும் வீட்டு வைத்திய முறைகளான பாலில் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் போட்டு குடிப்பது, பாலில் பனங்கற்கண்டு போட்டு குடிப்பது எல்லாம் மிதமான இருமலை கட்டுப்படுத்தும். மேலும், மஞ்சள், மிளகு எல்லாம் தொற்று நோயினை குணப்படுத்தாது.
மாறாக, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை வலுப்படுத்தும். Post Viral Cough ல் மட்டும் புகையோ, தூசியோ படாத அளவிற்கு முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். புகை மற்றும் தூசியால் இருமலை அதிகப்படுத்த முடியும். கை வைத்தியம் செய்தும் கேட்கவில்லை என்றால், உடனே மருத்துவரைப் பார்ப்பது அவசியமாகும். இருமல் ஏற்பட வேறு காரணங்கள்?
மேலும் நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்படுவதால் மட்டும் இருமல் ஏற்படுவதில்லை. மேலும் சில காரணங்களினாலும் இருமல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அவை என்னவென்றால், மூன்று அல்லது நான்கு வாரத்திற்கு மேல் தொடர்ச்சியாக இருமல் இருக்கிறது என்றால், டிபி இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வேண்டும்.
இது தவிர ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்ச்சியான இருமல் இருக்கும். சில நேரங்களில் இருதய பிரச்னைகள் இருக்கும் போதும், இருமல் ஏற்படும். Gastroesophageal reflux disease (GERD) அதாவது உணவுக் குழாயில் இருந்து உணவு ரிஃப்லெக்ஸ் ஆகி, அதன் ஆசிட் மூச்சுக் குழாய்க்குள் போகும் போது, தொண்டையில் புகைச்சல் உண்டாகும்.
அதனாலும் இருமல் ஏற்படும். சில நேரங்களில் பிரஷர் மாத்திரைக்கு எடுக்கப்படும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் கூட இருமல் ஏற்படும். இம்மாதிரி இருமல் ஏற்பட பலவகை காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.இருமல் ஏற்படுவதற்கான காரணங்களாக இவ்வளவு விஷயத்தை மருத்துவர்கள் நாங்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தாலும், சிலர் இருமலுக்கு எல்லாம் டாக்டரை பார்க்கலாமா, பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் ஷாப் போய் டானிக் வாங்கி குடித்தாலே போதும் என்று மருத்துவரிடமே கூறுவார்கள்.
சாதாரண இருமலா அல்லது வறட்டு இருமலா என்று தெரியாமலே மெடிக்கல் ஷாப் போய், வறட்டு இருமலுக்கான டானிக் வாங்கிக் குடிப்பதை நாம் பார்க்கிறோம். உண்மையில், அந்த டானிக் நல்லதா என்றால், அது ஒவ்வொருவரின் உடல் வாகுக்கு ஏற்ற மாதிரி வேறுபடும். நாம் இருமல் என்று டானிக் வாங்கிக் குடிக்கிறோம் என்றால், இருமலால் நம் உடலுக்குள் சளி கட்டியிருக்கிறதா அல்லது ஆஸ்துமா பாதிப்பா, என்று முதலில் மருத்துவர் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு வெறும் சளி பாதிப்பு மட்டுமிருக்கிறது என்றால், அதற்கு ஒரு வகையான டானிக், இதுவே வீசிங் இருக்கிறது என்றால், அதற்கான மருந்து, மாத்திரைகள் வேறு விதமாக இருக்கும். இப்படி இருமலின் தாக்கம் என்ன மாதிரியான தொந்தரவுகளை உடலில் ஏற்படுத்துகிறது என்று முழுமையாக மருத்துவர் தெரிந்த பின்னாடி பரிந்துரைக்கும் சிகிச்சைகள் மூலம், இருமலில் இருந்து விரைவில் குணமடைய வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.
அது தெரியாமல், நாம்சுயமாக டானிக் வாங்கி குடிக்கும் போது, அது தூக்கத்தை வேண்டுமானால் தரலாம், ஆனால் இருமலை சரிபண்ணுமா என்றால், அந்த டானிக்கில் இருக்கும் மருந்துகள் உங்கள் உடலுக்கு சரியாகுமா, இல்லையா என்பதை நாம் உடனே கூற முடியாது. இப்படியாக இருமல் நம் உடலுக்குத் தேவையானதாக இருந்தாலும், அதன் பாதிப்பிலிருந்தும் எளிதாக மீண்டு விடுமளவுக்கு சிகிச்சைகளும் நம் வசமிருக்கிறது. உண்மையில் ரஜினி சொல்வது போல், இருமல், தும்மல் எல்லாம் ஏன் வருதுன்னும், ஏன் போகுதுன்னும் கேட்க முடியாது. ஆனால், இவை எல்லாம் நம் உடலுக்குத் தேவையான நல்ல அறிகுறிகளாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு
|