வலியும் மனிதர்களும்!



வலியை வெல்வோம்

தொலைக்காட்சித் தொடர் ஒன்றைக் காண நேர்ந்தது , அக்காட்சியில் விளையாட்டு வீராங்கனையான கதாநாயகி கபடி ஆடிக்கொண்டிருக்கும் போது கணுக்கால் பிசகி விடுகிறது. உடனே பயிற்சியாளர் அவரின் குடும்பத்தினரிடம் அழைத்து வந்து கணுக்காலில் காயம் (injury) ஏற்பட்டுள்ளது. உடனே இவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று
கூறுவார்.

தொலைக்காட்சித் தொடர் ஒன்றைக் காண நேர்ந்தது , அக்காட்சியில் விளையாட்டு வீராங்கனையான கதாநாயகி கபடி ஆடிக்கொண்டிருக்கும் போது கணுக்கால் பிசகி விடுகிறது. உடனே பயிற்சியாளர் அவரின் குடும்பத்தினரிடம் அழைத்து வந்து கணுக்காலில் காயம் (injury) ஏற்பட்டுள்ளது. உடனே இவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று
கூறுவார்.

அடுத்த கட்டத்துக்கான முக்கியமான போட்டி/ ஆகையால் அவரின் குடும்பத்தினர் பதறிப் போய் இருக்க, அங்கே வீட்டுக்கு மூத்த உறுப்பினரான பாட்டியம்மா, ’டேய் நில்லுங்கடா இதுக்கெல்லாம் எதுக்கு ஆஸ்பத்திரி போயிட்டு செலவு பண்றீங்க? என் பேரன் இருக்கிறான் அவன் கை பட்டால் எல்லாம் சரியா போயிடும், என்று பேரனை அழைக்க, பேரனோ வந்தமர்ந்து “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்“ கதையாக கதாநாயகியின் காலை தன் மடி மேல் கிடத்தி எண்ணெயை தடவி கணுக்கால் மூட்டை இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என ஒரு சுழற்று சுழற்றியதில் வலி மிகுதியில் நொண்டி நொண்டி நடந்து வந்த கதாநாயகி ஜீ பூம்பா மந்திரம் போட்டது போல் துள்ளிக் குதித்து ஓடுவார். 
இது காதலுக்கான இயக்குநரின் பிரத்தியேக காட்சி என்பதால் அதை பெரிதாக விவாதிக்க வேண்டாம். ஆனால், ஒரு வேளை இதே காட்சியில் முறையான மருத்துவரிடம் சென்றிருந்தால் எப்படி இருக்கும்? அதை இக்கட்டுரையின் முடிவில் காண்போம்.

 “எனக்கு உண்டான காயம், அது தன்னால ஆறிடும்” இந்தப் பாட்டில் வருவது போல் தன்னாலே காயங்கள் ஆறிடுமா? சில நேரங்களில் மருத்துவரிடம் சென்றால் காலை, கையை அசைக்காமல் ரெஸ்ட் எடுங்க மாத்திரை தேவைப்பட்டால் சாப்பிடவும். இல்லைனா வேண்டாம்னு சொல்லி அனுப்பிடறாங்களே ஏன்?சில சமயம் எக்ஸ்ரே எடுங்க, ஸ்கேன் எடுங்கன்னு சொல்றாங்க. ஒன்னுமே புரியலை. கூகுள்ள பார்த்தேன். ஆப்ரேசன் பண்ணணும்னு இருக்கு. இந்த டாக்டரு எப்படி ஒன்னும் வேண்டாம்னு சொல்றாரு?

யூ ட்யூப்ல ஐஸ் வைத்தால் போதும்னு சொல்றாங்க., ஆனால் இங்க ஆப்ரேஷன் பண்ண சொல்றாங்களே எப்படி? நம் உடலில் ஒரு அசௌகரியம் அல்லது காயம் (injury) ஏற்படும்போது நம் உடலைப் பற்றிய பல சந்தேகங்கள், மருத்துவம் செய்துகொள்வதில் பல குழப்பங்கள் ஏற்படும்.

அதற்கு முதலில் நம் உடலின் அமைப்பையும் காயங்களைப் பற்றிய அறிவையும் பெற்றுக் கொண்டால் ஓரளவு நம்மால் சிகிச்சையின் பலனைப் பெற முடியும்.உடலில் தோல், தசை, தசை நாண்கள், சவ்வு, எலும்பு, எலும்பு மூட்டுகள், நரம்புகள் என்று வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் காயத்தின் அளவு, ஆழம், தாங்கு திறன் குணமாக எடுத்துக்கொள்ளும் கால அளவு இவற்றைப் பொறுத்தே சிகிச்சை நிர்ணயம் செய்யப்படும்.

விபத்து அல்லது புறக்காரணிகளால் உடலில் ஏற்படும் சேதாரத்தையே காயம் (injury) என்கிறோம். இவற்றை சிறு மற்றும் பெரியம் காயங்களாக வகைப்படுத்தலாம்.
 பொதுவாக காயம் ஏற்பட்டவுடனயே நமது உடலும் மூளையும் துரிதமாக செயல்பட்டு உடலில் எதிர்வினை புரியும். காயத்தின் தீவிரம், அதன் தன்மை, உடற்பகுதி, உறுப்புகளைப் பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபடும்.

முதலில் இரத்த திசுக்கள் சேதமடைந்து ரத்தம் வெளியேறும். அதைத் தொடர்ந்து காயம்பட்ட இடத்தில் வெப்பநிலை உயருதல், வீக்கம், மென்மை (tenderness ) வலி, விறைப்பு (gaurding ), இரத்தம் உறைதல், உடல் செயல்பாடு இழப்பு, உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

சில நேரங்களில் தலைச்சுற்றல், வாந்தி , மயக்கமும் உண்டாகும்.சிறு காயங்கள் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்றாலும் சில நேரங்களில் அதற்கும் குறைந்த சிகிச்சை முறைகள் தேவைப்படும். பெரியம் காயங்கள் நீண்ட நாட்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடிபட்ட இடம் அல்லது உடற்காயங்கள் குணமாக்குதலில் மூன்று படிநிலைகள் உண்டு.

(Healing process)

1.முதல்நிலை

முதல் நான்கு நாட்கள் ( 0-4) தோன்றும் அறிகுறிகள்

* அடிபட்ட இடம் சிவத்தல் (redness) நிறமாறுதல்

* வீக்கம் (swelling)

* வெப்பநிலை உயருதல் (increase in temperature)

* செயலிழப்பு (loss of function)

 இந்த நிலையில் சில உடற்செயலியல் மாற்றங்கள் ஏற்படும்.ஹிஸ்டமின், லுயூக்கோட்ரைனேஸ், சைட்டோகைன்ஸ் போன்ற உடலின் ரசாயன ஊக்கிகள் துரிதமாக செயல்பட்டு இரத்தம் வெளியேறுதல், உறைதலை துரிதப்படுத்தும். பின்பு ப்ளேட்லெட், வெள்ளையணுக்களுடன் சேர்ந்து அடிபட்ட இடத்தில் இரத்த உறைதலை ஏற்படுத்தும்.

2. இரண்டாம் படிநிலை

2 நாட்கள் முதல் 6 வாரங்கள் வரையான கால அளவு.

* வலியின் தீவிரம் அளவு குறைந்திருத்தல்
* அடிபட்ட இடத்தின் மென் தன்மை
* செயலிழப்பு அடைந்த திசுக்கள் சிறிது சிறிதாக செயல்பாட்டிற்கு திரும்புதல்.

3.மூன்றாம் படி நிலை

3 வாரங்கள் முதல் 2 வருடங்கள் வரையான கால அளவு.

* ஓரளவு நிறைவாக காயம்பட்ட இடம் உறுதியடைந்து இருக்கும்

* செயலிழப்பு அடைந்த திசுக்கள் முழுமையான செயல்பாட்டு நிலைக்கு திரும்புதல்

முதலுதவி  

தோலில் காயம் பட்டவுடன் எவ்வாறு சோப்பு மற்றும் நீரினால் அந்த இடத்தை சுத்தப்படுத்தி மருந்து வைத்து கட்டுகிறோமோ.  அதே போல் தசை மற்றும் தசை நார்கள் எலும்பு மூட்டு ஆகியவற்றில் அடிபட்டாலோ காயம் ஏற்பட்டாலோ முதலில் செய்ய வேண்டியது, மருத்துவத்தில் RICE என்று‌ கூறுவோம், அதாவது,

R- Rest -ஓய்வு

I-Icing - ஐஸ் ஒத்தடம்

C-Compression - எலாஸ்டிக் பேண்டேஜ் மூலம் அடிபட்ட இடத்தை சிறிது அழுத்தம் கொடுத்து கட்டுப்போடுதல்.

E-Elevation - அடிபட்ட காயம்பட்ட இடத்தை உயர்த்தி வைத்தல்

அடிபட்ட முதல் 48 மணி நேரத்திற்கு ஐஸ் ஒத்தடம் சிறந்தது. ஏனென்றால் ரத்தக் கசிவை கட்டுப்படுத்தவும் தசைப்பிடிப்பையும் குறைக்கவும் உதவும்.

கம்பரெசன் அல்லது எலாஸ்டிக் பேண்டேஜ் வீக்கத்தை குறைக்க உதவும்.

அடிபட்ட இடத்தை உயர்த்தி வைப்பதன் மூலம் , புவி ஈர்ப்பு விசையினால் அடிபட்ட இடத்தில் அதிகமான ரத்தம் தேங்குவதை தவிர்க்க உதவும்.

மருத்துவ ஆலோசனையின் படி மருந்து மாத்திரைகளோடு வலி, வீக்கத்தை குறைத்து குணமாக்கும் செயல்முறையை துரிதப்பட  நோயாளி அல்லது காயம்பட்டவர் எந்த நிலையில் உள்ளாரோ அதற்கு தகுந்தாற்போல் பிசியோதெரபியின் பல்வேறு சிகிச்சையும் உடற்பயிற்சி ஆலோசனையும் வழங்கப்படும்.

எ.கா

1. லோ பவர் லேசர் சிகிச்சை
2. அல்ட்ரா சவுண்ட்
3. எலக்ட்ரிகல் ஸ்டிமுலேசன்
4. இன்ஃப்ரா ரெட்‌ ரேடியேசன்
5. உடல் வலுப்படுத்தும் பயிற்சிகள்
6. உடலியக்க செயல்பாட்டு

பயிற்சிகள்.

முதல் நான்கு சிகிச்சை முறையில் கூறப்பட்டுள்ளவற்றை பெரும்பாலானோர் கரன்ட் ஷாக் , இரத்தத்தை உறிஞ்சி விடும் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர்.

ஆனால் அவை உடலின் செல்களின் சவ்வூடு பரவலை தூண்டி வலி வீக்கத்தை குறைத்து,‌ உடற்செயலியல் மாற்றத்தின் மூலம், ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த உதவுகிறது.மேலும் தசைகளின் செயல்பாட்டையும் தூண்டுகிறது.

உடற்பயிற்சி அடிபட்ட காயத்தினால் உண்டான செயலிழப்பை மீட்டெடுக்க உதவுகிறது.இப்போது ஓரளவிற்கு உடலில் ஏற்படும் காயங்கள் (injury) அவற்றின் செயல்பாடுகள், சிகிச்சை முறைகளைப் பற்றி அறிந்துகொண்டோம்.

அப்படியே கட்டுரையின் முதல் பகுதியில் கூறப்பட்ட காட்சியமைப்பிற்கு செல்லுவோம்.கதாநாயகி ஒரு கபடி விளையாட்டு வீரர் உடலின் கால் பகுதியை அதிகமாக பயன்படுத்தக் கூடியவர், சரியான காலணி அணியவில்லை உள் அரங்கத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

விளையாட்டின் போது கணுக்காலிலே திடீரென வலி. அடிபட்ட காலில் அவரால் பேலன்ஸ் செய்து நடக்க இயலவில்லை. பயிற்சியாளரின் உதவியோடு கைதாங்கலாக வந்து பெஞ்சில் காலை நீட்டி உட்கார வைக்கப்படுகிறார்.பாட்டி-பேரன் வைத்தியம் இல்லாமல் இருந்திருந்தால் ஒரு விளையாட்டு வீரருக்கு என்ன வைத்தியம்
செய்திருப்பார்கள்?

கூடவே பிசியோதெரபிஸ்டுகள், மருத்துவர்கள் இல்லாத பட்சத்தில், முதலில் ஐஸ் ஒத்தடம் கொடுத்து , கம்பரெசன் அல்லது எலாஸ்டிக் பேண்டேஜ் சுற்றி எலும்பு மூட்டிற்கு அசைவு கொடுக்காமல் அப்படியே மருத்துவரிடம் அழைத்து சென்றிருப்பார்கள்.மருத்துவர் முதலில் அறிகுறிகளை பார்த்த பின் கணுக்காலில் எலும்புகள், தசை நார்கள், தசைநாண்கள் ஏதாவதும் பாதிக்கப்பட்டிருக்கிறதா என சிறப்பு பரிசோதனை செய்து பார்ப்பார்.

அவற்றில் சதசை நார்கள், நாண்களின் பாதிப்பு சிறிதளவு என்றால் அதற்கான சிகிச்சை முறையையும், ஆழமான காயம் , பாதிப்பு அதிகம் என்றால் எக்ஸ்ரே, ஸ்கேனின் மூலம் அவற்றின் தீவிரத்தை கண்டறிந்து அதற்கான முறையான சிகிச்சைகள் அதன்பின்பான வலுவேற்றும் உடற்பயிற்சிகளை பரிந்துரைப்பார்.முதலுதவியில் முக்கியமானது காயம்பட்ட இடத்தை அல்லது மூட்டுகளை, தசைகளுக்கு அதிக அசைவுகளைக் கொடுத்தாலோ, பயன்படுத்தினாலோ பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும்.ஆகவே R.I.C.E என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் முதலுதவி அளிப்பது எளிது.    

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி