சரும பராமரிப்பில் சீரத்தின் பங்கு!



சருமப் பராமரிப்புக்கு மாய்ஸ்ச்சரைசர், கிளென்சர், டோனர் போன்ற பொருட்களை உபயோகிப்பது போலவே, தற்போது சீரம் பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. சரும அழுக்கை நீக்கவும், சருமத்தின் துளைகளை மூடவும், சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், வயது முதிர்வை தடுக்கவும் என பல நன்மைகளை இந்த சீரம் கொண்டுள்ளது. சீரம் குறித்து தெரிந்து கொள்வோம்.

சில சருமப் பிரச்னைகளுக்கு: சீரம் பயன்படுத்துவதன் மூலம் சூரிய ஒளி, சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் பாதித்த சருமத்தை அதனுடைய பழைய நிலைக்கு மீண்டும் கொண்டு வரலாம். சருமத்தில் உண்டாகும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை சரி செய்யவும், வராமல் தவிர்க்கவும் சீரம் உதவுகிறது.

சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க: சருமத்தின் நீரேற்றத்தை உறுதி செய்ய சீரத்தைப் பயன்படுத்தலாம். ஹைலூரோனிக் அமிலம் உள்ள ஃபேஸ் சீரம்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் மாற்ற உதவுவதோடு, ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும். சீரம்கள் சிறந்த மாய்ஸ்சரைஸராகவும் செயல்படும்.

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க: ஃபேஸ் சீரம் சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இவற்றில் உள்ள வைட்டமின் சி மூலம் சருமத்தின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும். சீரத்தில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ, நியாசினாமைடு மற்றும் கிளைகோலிக் அமிலங்கள் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்படும் சேதம், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்கவும் உதவும்.

கருவளையங்கள், ப்ரீ ரேடிக்கல்களில் இருந்து காக்க: கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்கள், ப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படுவதைக் குறைக்க ஃபேஸ் சீரம் உதவும். இதன் மூலம் பிரகாசமான, புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற முடியும். சருமத்தின் நிறத்தை சீராக்க: சிலருக்கு முகம் கறுத்து ஒரு நிறத்திலும், கழுத்து, கை, கால்கள் வேறு ஒரு நிறத்திலும் இருக்கும். இதனை சரி செய்ய பேஸ் சீரம் பயன்படுகிறது.

ஃபேஸ் சீரமின் வகைகள்

எக்ஸ்போலியேட் சீரம்கள்: எக்ஸ்போலியேட் என்பது சரும மேற்பரப்பில் இருக்கும் இறந்த செல்களை அகற்றும் செயல் முறையாகும். எக்ஸ்போலியேட் சீரம்களில் உள்ள கிளைகோலிக், சிட்ரிக், மாலிக், மாண்டெலிக் மற்றும் சாலிசிலிக் அமிலம் ஆகியவை சருமத் துளைகளை சீர் செய்யவும், மந்தமான சருமத்தை சரி செய்யவும் உதவும். மேலும், இந்த வகை சீரம்கள் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கும் சிறந்தது ஆகும்.

க்ளோ சீரம்கள்: இவ்வகை சீரம்களில் சருமப் பிரகாசத்தை ஏற்படுத்தும் வைட்டமின் சி மற்றும் நியாசினமைடு உள்ளது. வைட்டமின் சி ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கவும், மெலனின் உற்பத்தி செய்யும் என்சைம்களைத் தடுக்கவும் செய்யும். நியாசினமைடு சரும மந்தத்தை சரி செய்து சரும நிறத்தை சமன் செய்யவும் உதவும்.

ஆன்டி ஏஜிங் சீரம்கள்: வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை சரி செய்ய ஆன்டி ஏஜிங் சீரம்கள் உதவும். இந்த சீரம்களில் முன்கூட்டிய வயது முதிர்வை தடுக்கும் ரெட்டினோல் உள்ளது. இது வைட்டமின் ஏ -வின் வடிவம் ஆகும். ஆனாலும், ரெட்டினோல் உள்ள சீரம்கள் சிலருக்கு சருமத்தில் வறட்சி, சிவத்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஹைட்ரேட்டிங் சீரம்: ஹைட்ரேட்டிங் சீரம்களைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்துக்கு கூடுதல் நீரேற்றம் கிடைக்கும். ஈரப்பதமூட்டும் சீரம்களில் முக்கிய மூலமான ஹைலூரோனிக் அமிலம் உள்ளது. இதனைப் பயன்படுத்துவதால் சரும வறட்சி குறைவதோடு, சருமத்துக்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கும். 

ஆன்டி ஆக்ஸிடன்ட் சீரம்கள்: இது வயதாவதை வேகமாக்கும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். காற்று மாசுபாடு மற்றும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படும். இதனைத் தவிர்க்க ஆன்டி ஆக்ஸிடன்ட் சீரம்கள் உதவும்.

வைட்டமின் சி சீரம்: வைட்டமின் சி சீரம் அல்லது அஸ்கார்பிக் அமில சீரம் என்று அழைக்கப்படும் இவ்வகை சீரம்கள் ப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தைத் தடுக்கும் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும். இது சருமத்தை பிரகாசமாக்கவும், சருமத்தின் கருந்திட்டுகளை குறைக்கவும் உதவும்.

ஆல்பா ஹைட்ராக்ஸி (AHA), பீட்டா ஹைட்ராக்ஸி அமிலம் (BHA) சீரம்: இந்த வகை சீரம்கள் எண்ணெய் சருமம் உள்ளவர்கள், முகப்பரு பாதிப்புள்ள சருமம்
உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.

 பயன்படுத்தும் முறை

சீரத்தைப் பயன்படுத்தும் முன் முகத்தை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். பின்னர் டோனரை பயன்படுத்திய பின்தான் சீரம் பயன்படுத்த வேண்டும். சீரத்தில் மூன்று அல்லது நான்கு சொட்டுகள் உள்ளங்கையில் எடுத்துக் கொள்ளவும். அதனை அதிகமாக கைகளைக் கொண்டு தேய்க்காமல் லேசாக பரப்பி, முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவ வேண்டும்.

சருமம் சீரத்தை முழுமையாக உறிஞ்சும் வரை மெதுவாக மசாஜ் செய்யவும். சீரம் பயன்படுத்திய 20 நிமிடங்களுக்குப் பின் சன்ஸ்கிரீன் அல்லது மாய்சரைஸர் பயன்படுத்தி விட்டு, பின்னர் மற்ற சரும பராமரிப்பு செயல்களை மேற்கொள்ளவும்.

- ரிஷி