குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை



*செய்திகள் வாசிப்பது டாக்டர்

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு அணு ஆற்றல் துறையின் பங்களிப்பை பயன்படுத்துவது குறித்த அறிக்கையை, நாடாளுமன்ற நிலைக்குழு தயாரித்துள்ளது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான கமிட்டிகள் நாடாளுமன்ற கமிட்டித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் நவம்பர் 11 அன்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அறிக்கையை சமர்ப்பித்தன.

இந்த அறிக்கையில் அணு ஆற்றல் துறையின் உதவியுடன் மும்பையில் செயல்பட்டுவரும் டாடா நினைவு அறக்கட்டளையின் மூலம் புற்று நோய் சிகிச்சைக்கான மருத்துவ மையங்களை அமைக்கவும், நாடு முழுவதும் பெரிய அளவில் புற்று நோய் மையங்களை டாடா நினைவு அறக்கட்டளை எடுத்து நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் 68 சதவீத புற்று நோயாளிகள் இறப்பது குறித்து கவலை தெரிவித்த நாடாளுமன்ற நிலைக் குழு, புற்று நோய்க்கான சிகிச்சை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் பரிந்துரைத்துள்ளது.

அணு ஆற்றல் துறை அமைச்சரின் தலைமையில் அனைத்து மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தினர், டாடா நினைவு அறகட்டளையின் இயக்குனர் ஆகியோர் அடங்கிய வழிகாட்டும் குழுவை அமைக்கவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 கௌதம்