மெனோபாஸும்... ஹார்மோன் சிகிச்சையும்...



*மகளிர் மட்டும்

மாதவிடாய் நிற்றலின் அறிகுறிகள் எல்லாமே மிதமான அளவில் இருக்கும்போது பிரச்னை இல்லை. இதெல்லாம் இயல்புதான் என நிதானிக்கலாம். இதில் பல அறிகுறிகள் ஒரு சில வருடங்களுக்குப் பின் தானாகவே சரியாகிவிடும். ஆனால், இந்த அறிகுறிகளின் அளவு மீறும்போது, அந்தப் பெண்ணானவர் அந்த அறிகுறிகளால் மிகவும் வேதனைக்குள்ளாகும்போது ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி(Hormone replacement therapy) எடுப்பது அவசியம்.

மெனோபாஸ் காலகட்டம் என்பது பெரும்பாலும் பெண்களை பயமுறுத்துவதாகவே இருக்கிறது. Menopause(மாதவிடாய் நிற்றல்) என்பது பெண்ணின் மாதவிடாய் சுழற்சிகளின் இயற்கை உச்சநிலை. இந்தியாவில் மாதவிடாய் நிற்றலின் சராசரி வயது 46 மற்றும் 48-க்கு இடைப்பட்டது. இருந்தாலும் அந்தந்த பெண்களின் மருத்துவ வரலாறு மற்றும் குடும்பப் பாரம்பரியங்களின் படி மாதவிடாய் நிற்றல் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அனுபவங்களைப் பெறுகின்றனர். சில பெண்கள் மாதவிடாய் நிற்றலை 41 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட காலங்களில் உணரலாம். 40 வயதுக்கு முந்தைய மாதவிடாய் நிற்றலை முன்முதிர்வு மாதவிடாய் நிற்றல் என்பர். 52 வயதுக்குப் பிந்தைய மாதவிடாய் நிற்றல், தாமதமான மாதவிடாய் நிற்றல் என கருதப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் நிற்றலை 10 ஆண்டு காலகட்டம்வரை உணரலாம். அது மாதவிடாய் சுழற்சியின் அளவில் மாறுபாடுகள், ஓட்டத்தில் மாறுபாடு, ஒழுங்கற்ற கால சுழற்சி, உடல் சூடாதல் மற்றும் தூங்குவதில் தொந்தரவுகளுடன் தொடங்கும்.

நாற்பதுகளில் பயணிக்கும் பெண்களுக்கு அந்த வயதுதான் அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலை, திருமணம் என பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழலினால் ஏற்படும் மன உளைச்சல் இருக்கும். சேர்ந்தோரை இழத்தல்(பெற்றோர், கணவர்) போன்ற மன அழுத்தமான சூழல்களும் நிலவும். வேலை செய்யும் பெண்கள் தங்கள் தொழிலில் மேல்பதவி போன்ற முக்கியப் பொறுப்புகளை ஏற்க வேண்டி வரலாம். எனவே, இந்த நெருக்கடிகளால் நாற்பதுகளில் தங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், இதே சமயத்தில்தான் மெனோபாஸ் பிரச்னையும் சேர்ந்துகொள்ளும். மெனோபாஸ் பெண்களின் வாழ்வில் பல மாறுதல்களை கொண்டு வரும். மாதவிடாய் நிற்றலின் காரணமாக உடல் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதை நிறுத்திவிடும். இதயம், எலும்பு மற்றும் தோலின் நலத்திற்கு ஈஸ்ட்ரோஜன் முக்கியமானது. எனவே, பல பெண்களுக்கு இதைச் சுற்றி சிக்கல்கள் வரலாம். இதனால் மூட்டு வலி, முதுகுவலிக்கு பெண்கள் ஆட்பட நேரும்.  அறிகுறிகள்...

உடல் சூடு அதிகரிப்பது, அதிகம் வியர்ப்பது, தூக்கமின்மை, பிறப்புறுப்பில் வறண்ட தன்மை, தோல் வறட்சி, படபடக்கும் இதயம் மற்றும் உணர்ச்சி மாறுதல்கள், தலைவலி, கவலை, எரிச்சல், கைகளில் நடுக்கம், சிறுநீர் கட்டுப்பாடின்மை(எடுத்துக்காட்டாக இருமும்போது தானாக சிறுநீர் கசிதல்), களைப்பு, நாள் முழுவது சோர்வாக உணர்தல் போன்ற பிரச்னைகள் இருக்கும். இந்த காலகட்டம் அவர்களிடம் நம்பிக்கையின்மையை அதிகப்படுத்திவிடும். திடீரென தனக்கு வயதாகிவிட்டது என்பதை மனதில் ஏற்றுக்கொள்ள முடியாதபடி, உளவியல் சிக்கல் சிலருக்கு வரும். சில பெண்கள் மாதவிடாய் நிற்றலை எதிர்நோக்கி அந்த மாற்றங்களை சவாலாக ஏற்றுக்கொண்டு சமாளித்துவிடுவார்கள். ஒரு சிலர் மனதளவில் மிகவும் தளர்ந்துபோய் விடுவார்கள். அறுவைசிகிச்சையால் மாதவிடாய் நிற்றலுக்கு உட்படும் பெண்கள்(கருப்பை நீக்கப்படுவதால் மாதவிடாய் சுழற்சிகள் முடிவுக்கு வருதல்), முன்னெச்சரிக்கை இல்லாமல் திடீரென மாதவிடாய் நின்ற காரணத்தால் கவலையாக உணரலாம்.

அவர்கள் தங்கள் கருப்பை இழப்பை இயற்கையின்மையாக உணரலாம் அல்லது தங்களை பெண்ணாக இருக்கும் தன்மையை இழந்தவராகப் பார்க்கலாம். ஹார்மோன் நிலைகளில் ஏற்படும் மாறுபாடுகள் எடை அதிகரிப்புக்கு இட்டு சென்று உடல் தோற்றப் பிரச்னைகளைத் தோற்றுவிக்கலாம். அதனால் அவர்களுக்கு கவலை அல்லது மனச்சோர்வின் அறிகுறிகளும் தோன்றலாம்.சிலருக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் தற்கொலை எண்ணம் கூட ஏற்படும். இப்படியான சமயங்களில் மருத்துவரை சந்தித்தல் அவசியம். மருத்துவர்கள் அந்த சமயத்தில் அவர்களுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபியை எடுக்கச் சொல்லி ஆலோசனை சொல்வார்கள். ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் என்பது மெனோபாஸ் சமயத்தில் குறையும் ஈஸ்ட்ரோஜனுக்கு ஈடாக மருந்து மாத்திரைகளை கொடுத்து சமன்படுத்தும் முறை. இந்த சிகிச்சையை எடுக்கும்போது எலும்பு பலவீனங்களை தடுக்க முடியும். மெனோபாஸ் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.  

சிகிச்சையை எப்படி ஆரம்பிப்பது?

மெனோபாஸின் அறிகுறிகள் அளவுக்கு அதிகமாய் துன்புறுத்தும்போது ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் சிகிச்சைக்காக உங்கள் பொது மருத்துவரை அணுகலாம். பொதுவாக இதற்கு முன்னதாக எந்த பரிசோதனைகளும் செய்யத் தேவையில்லை.பல வகையான ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி இருப்பதால் உங்களுக்குச் சரியான ஒன்றை உங்கள் பொது மருத்துவர் குறிப்பிடுவார். குறைந்த டோஸேஜில் இருந்துதான் ஆரம்பிப்பார்கள். பின்னர் டோஸேஜை அதிகரிப்பார்கள். மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாறுதல்களை உணர ஆரம்பிப்பீர்கள்.

ஆரம்பத்தில் சில பின்விளைவுகளும் கூட ஏற்படும். உங்கள் பொது மருத்துவர் மூன்று மாதத்திற்கு இந்த சிகிச்சையை அளிப்பார். தேவையான அளவு முன்னேற்றம் இல்லை என்றால் டோஸேஜை மாற்றுவதா அல்லது சிகிச்சையின் வகையை மாற்றுவதா என முடிவெடுப்பார். பல வகையான ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி இருப்பதால் உங்களுக்குச் சரியான ஒன்றை மருத்துவர் ஆலோசனையுடன் தேர்ந்தெடுக்கலாம். பெரும்பாலான பெண்கள் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டோஜென் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம்.

கருப்பை நீக்கம் செய்யப்பட்ட பெண்கள் ஈஸ்ட்ரோஜன் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி எடுக்கும்போது மாத்திரைகளோடு ஜெல், யோனி க்ரீம்ஸ், பெசரி அல்லது ரிங் (பிறப்புறுப்பில் வைக்கப்படும் ஒரு சாதனம்) பேட்சஸ் போன்றவையும் இந்த சிகிச்சையில் அடங்கும். எவ்வளவு நாள் எடுக்கலாம்?இதை வரையறுக்க முடியாது. நீங்கள் இந்த சிகிச்சையைத் தொடரலாமா? வேண்டாமா என உங்கள் மருத்துவர்தான் முடிவெடுப்பார். மெனோபாஸ் அறிகுறிகள் நின்ற பிறகு இந்த சிகிச்சையை பல பெண்கள் நிறுத்தி விடுவார்கள்.

பொதுவாக மெனோபாஸ் ஆரம்பித்து ஒரு சில வருடங்களிலே நிறுத்தி விடுவார்கள்.டோஸேஜை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதா அல்லது உடனடியாக நிறுத்துவதா என யோசித்து முடிவு செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக நிறுத்தும் முறையைத்தான் பெரும்பாலும் மருத்துவர்கள் பின்பற்றுவார்கள். உடனடியாக நிறுத்தும்போது பழைய அறிகுறிகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும். நீங்கள் சிகிச்சையை நிறுத்தி பல மாதங்கள் ஆன பின்னும் இந்த அறிகுறிகள் இருந்தனவென்றால், அதிலும் குறிப்பாக அதிக அளவில் இருந்தனவென்றால் நீங்கள் மறுபடி இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

யாரெல்லாம் ஹார்மோன் தெரபி எடுக்கக்கூடாது?

* புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்
* ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டவர்கள்.
* கல்லீரல் பிரச்னை கொண்டவர்கள்.
* அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்.
கவனத்தில் கொள்ள வேண்டியது...
ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி எடுக்கும்போதும் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் 50 வயதுக்குட்பட்டவராக இருந்தாலும் சரி அல்லது 51 வயதாகும் வரையிலும் கூட மாதவிடாய் நின்ற பிறகிலிருந்து சரியாக 2 வருடங்களுக்கு கருத்தடை சாதனங்கள் உபயோகிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு செய்தவராக இருந்தால் பிரச்னை இல்லை.

ஹார்மோன் தெரபியின் பின் விளைவுகள்

* தலைவலி, வயிற்றுவலி, அஜீரணம், காய்ச்சல், மார்பகங்கள் தளர்ந்து போதல், பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு போன்ற பின்விளைவுகள் ஏற்படலாம்.
* எந்த வகையான ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி எடுத்தாலும் மேலே கூறியவாறு பின் விளைவுகள் வரலாம். ஆரம்பத்தில் இந்த தொல்லைகள் இருந்தாலும் தெரபி ஆரம்பித்த முதல் மூன்று மாதங்களில் இவை சரியாகிவிடும்.
ஆனால், ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி ஒரு வருடங்களுக்கும் மேலாக எடுக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களைக் காட்டிலும் மார்பக
புற்றுநோய் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகம்.
* வெஜைனல் ஈஸ்ட்ரோஜன் வகையிலான ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபியைத் தவிர்த்து எந்த வகையான  HRT எடுத்தாலும் இந்த புற்றுநோய்
அபாயம் உண்டு. இவ்வளவு தொல்லைகள் இல்லாமல் இயற்கையாக இந்த பிரச்னையைக் கடக்க சில எளிமையான வழிமுறைகள் உண்டு.
* மாதவிடாய் நிற்றலின்போது சில வாழ்க்கைமுறை மாறுபாடுகளைச் செய்வதின் மூலம் நீங்கள் மாதவிடாய் நிற்றலால் வரும் மாற்றங்களைச் சமாளித்து நல்ல மனநலத்துடன் இருக்கலாம்.
* தொடர்ந்து உடல்நல பரிசோதனைகளுக்குச் செல்லுங்கள்.
* தைராய்டு குறைபாடு அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் நோய்களின் சாத்தியங்கள் குறித்து அறிய உங்கள் மகளிரியல் மருத்துவரைப் பாருங்கள்.
* நீங்கள் முன்னர் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் அப்பழக்கத்தை ஆரம்பிப்பதற்கு இதுவே சரியான நேரம்.
* யோகாசனம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்வது நீங்கள் நெகிழ்வுடன்(Flexibility) இருக்கவும் எலும்புநலனைப் பராமரிக்கவும் உதவுகிறது.
* சூரிய ஒளியில் நீங்கள் நிற்பது, நடப்பது போன்றவற்றால் எலும்புக்குத் தேவையான வைட்டமின் டி போன்றவற்றை நீங்கள் போதுமான அளவு பெற முடியும்.
* உங்கள் உடல் மாற்றமடைகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை அதற்கேற்ப அமையுங்கள். கவனமானது உடல் எடையைக் குறைப்பதில் இருக்கக்கூடாது. மாறாக எடை அதிகரிக்காமல் இருப்பதில் இருக்க வேண்டும். நீங்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது என கருதாமல் உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்வதில் கவனமாக இருங்கள்.
* உங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். குறைந்த அளவில் அடிக்கடி உணவை உட்கொள்ளுங்கள். நார்ச்சத்து, இயற்கை உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாது
உப்புகள் உட்கொள்வதை அதிகரியுங்கள்.
* காரமான உணவுகள் மற்றும் காஃபி சாப்பிடும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள். மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
* தன்னை கவனிப்பதற்கு நேரமெடுத்துக் கொள்ளுங்கள். சிறிது உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி, ஒரு பொழுதுபோக்கு அல்லது நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள்.
* மெனோபாஸ் பிரச்னை அதிகரிக்கும்போதோ மற்றும் சமாளிக்க இயலாதபோதோ, உடனடியாக உங்கள் ஆலோசகர் அல்லது மனநல வல்லுநரைச் சந்தியுங்கள்.

குடும்பத்தின் ஆதரவு

மாதவிடாய் நிற்றல் இயற்கையாக அல்லது அறுவைசிகிச்சையினால் இருந்தாலும் குடும்பத்தின் ஆதரவு, குறிப்பாகத் துணையின் ஆதரவு பெண்ணுக்கு மாதவிடாய் நிற்றலால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களைச் சமாளிக்க உதவும். பெண்கள் எதை கடக்கின்றனர் என்பதை குடும்பம் அறிந்திருப்பது முக்கியமானது. தங்கள் துணைவியை கணவர் அவளது மருத்துவருடனான சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்லலாம் மற்றும் அவளைக் கவனித்துக் கொள்வதில் அவளை ஆதரிக்கலாம்.துணைவர் இணைந்து செய்யக்கூடிய செயல்களான வாக்கிங், ஜாகிங், வழக்கமான உடற்பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.

பெண்ணுக்கு உணர்வுரீதியான ஆதரவு அளிக்கலாம்; அவளுடன் போதுமான நேரம் செலவழிக்கலாம்.பெண் அதனைச் சமாளிப்பதற்கு கடினமாக உணரும்போது அவளுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.அவள் தாழ்ந்த மனநிலையில் இருப்பின், அதனை அது ‘பெண்கள் விஷயம்’ என்று விட்டு விட வேண்டாம். அவள் கடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் அவளை சோர்வாக்கக்கூடியது அல்லது அவளை அந்த பிரச்னையிலே மூழ்கிவிட செய்யக்கூடியது என்பதை உணர்ந்து அவள் அந்த காலகட்டத்தை கடக்க உறுதுணையாக இருங்கள்.
 
* நாற்பது வயதுதான் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இருக்கும். இதே சமயத்தில்தான் மெனோபாஸ் பிரச்னையும் சேர்ந்துகொள்ளும்.

* மெனோபாஸுக்குப் பிறகான ஆரோக்கிய வாழ்வுக்கு மருத்துவரின் ஆலோசனையுடன் ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வது
நல்லது.

 சக்தி