வெஜிட்டேரியன் வீக்னஸ்...



B12 ரகசியம்

‘உடலுக்கு ஆற்றல் தரும் உற்பத்தி நிலையம்’ என்று குறிப்பிடப்படுவது வைட்டமின் B12. ஏனெனில் B12 குறைபாட்டின் அடிப்படை அறிகுறியே உடல்சோர்வுதான். ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், உற்சாகமாக உழைக்கவும் பி12 வைட்டமின் நிச்சயம் தேவை. இந்த வைட்டமின் பி12 அசைவ உணவில் அதிகம் உண்டு.

அதனால் சைவ உணவுக்காரர்கள் பி12 பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடலாம். அதேபோல், அசைவ உணவுமுறையைப் பின்பற்றுகிறவர்களும் சமயங்களில் பி12 பற்றாக்குறைக்கு ஆளாகலாம் என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. எதனால் இப்படி நிகழ்கிறது என்று B12 ரகசியம் பற்றி டயட்டீஷியன் சித்ரா மகேஷிடம் கேட்டோம்...

‘‘நோயால் பாதிக்கப்பட்டவர், எலும்பு முறிவு, பலத்த காயம் உட்பட பலவிதமான பிரச்னைகளால் துன்பப்படுபவர்களுக்கு, என்னென்ன மாதிரியான ஊட்டச்சத்துக்கள் எந்த அளவில் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நம்முடைய மூதாதையர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் உணவு வகைகள் மூலமாகவே பலவீனமான உடலுக்குத் தேவையான ஊட்டசத்துக்களைக் கிடைக்கச் செய்யும் வழிகளையும் தெரிந்து இருந்தனர். ஆனால், இயற்கையாக கிடைத்திட்ட அந்த ஊட்டச்சத்துக்களை இன்று மருந்து, மாத்திரைகள் வடிவில் பெற வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். அத்தகைய ஊட்டச்சத்துக்களில் ஒன்றுதான் பி12. அதன் தனித்தன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்...

நாம் அன்றாடம் சரியான விகிதத்தில் உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் நமக்கு நார்ச்சத்து உள்ளிட்ட மாவுச்சத்து, இரும்பு, புரதம், கொழுப்புச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுசத்துக்கள் என அனைத்து சத்துக்களும் போதுமான அளவு கிடைத்துவிடும். ஆனால், பல சமயங்களில் நம்மால் உணவு வகைகளைச் சரியான அளவில் எடுத்து கொள்ள முடிவது இல்லை அல்லது சரியான உணவுப்பழக்கத்தை நாம் பின்பற்றுவதில்லை. அதனால்தான், ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக நாம் அவதிப்பட வேண்டியுள்ளது. முக்கியமாக பி 12 பற்றாக்குறை பற்றி அனைவரும் அறிந்துகொள்வது அவசியம்.

பொதுவாக எல்லாவிதமான பி மற்றும் சி வைட்டமினும் தண்ணீரில் கரையக் கூடியவை. இதனை ஆங்கிலத்தில் Water Soluble Vitamin என்கிறோம். (வைட்டமின் ஏ, டி, இ மற்றும் கே ஆகியவை கொழுப்பில் கரையக் கூடிய Fat Soluble பிரிவைச் சேர்ந்தவையாகும்.) நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்கள் (வைட்டமின்கள்) எந்தக் காரணத்துக்காகவும் நமது உடலில் தங்காது.

தேவைக்கு அதிகமாக உள்ள நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து வெளியேற்றப்படும். ஆனால், தண்ணீரில் கரையும் தன்மை கொண்ட பி-12 வைட்டமின் மட்டும் இதிலிருந்து சற்று மாறுபடுகிறது. ஏனெனில், இந்த வைட்டமின் மட்டும் நமது உடம்பில் தங்கக்கூடியதாக உள்ளது. பொதுவாக, சொல்ல வேண்டுமென்றால் 2.5 மில்லிகிராம் அளவிற்குத் தங்குகிறது. முக்கியமாக நம் கல்லீரலில் சேர்த்து வைக்கப்படுகிறது.

இத்தகைய பி12 வைட்டமின் அசைவ உணவு வகைகளில் அதிகம் காணப்படுகிறது. கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் மூலமாக பி-12 நமக்கு அதிகம் கிடைக்கிறது. முக்கியமாக, விலங்குகளின் கல்லீரலில் பி12 வைட்டமின் அதிகளவில் இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற தாவர உணவு வகைகளில் பி12 சற்று குறைவுதான்.

எனவே, சைவ உணவுமுறையைப் பின்பற்றுகிறவர்கள் பி12 பற்றாக்குறைக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. எனவே பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி(Cheese) போன்றவற்றை உரிய அளவில் சைவ உணவுக்காரர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சில சோயா உணவுகள், பயறு வகைகள், தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

‘வீகன்’ உணவுப்பழக்கத்தினர் விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பால் உட்பட எந்தவொரு உணவுப்பண்டத்தையும் சாப்பிட மாட்டார்கள். இவர்களுக்கு பி-12 பற்றாக்குறை வருவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. அதேபோல் சைவ உணவுமுறையைப் பின்பற்றுகிறவர்களும் முறையாக சாப்பிடாமல் இருக்கும்பட்சத்தில் பி12 பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு. இவர்கள் பி12 வைட்டமின் செறிவூட்டப்பட்ட உணவு வகைகளை(Fortified Foods) சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக நாள் ஒன்றுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயது தரப்பினருக்கும் 2 மைக்ரோகிராம் பி-12 போதுமானது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கூடுதலாக, 0.5 மைக்ரோகிராம் அளவு பி-12 ஐ சேர்த்துக்கொள்வது நல்லது. ஒருவருக்குப் பி-12 வைட்டமின் போதுமான அளவு இல்லை என்பது தெரிய வந்தால் சப்ளிமென்ட்ஸ் எடுத்து கொள்வதில் தவறு எதுவும் இல்லை. அப்படி சப்ளிமென்ட்ஸினை மருந்து, மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளும்போது மருத்துவர் ஆலோசனை மிகவும் முக்கியம்.

அசைவ உணவு உண்கிறவர்களுக்கும் சில சமயம் வைட்டமின் பி12 பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேறு ஏதேனும் காரணங்களுக்காக மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது வயிற்றுப்பகுதியில் இருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம்(Hydrochloric acid) சுரப்பு குறையும். இதன் எதிரொலியாக வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும்.

ஹைட்ரோகுளோரிக் அமிலத்துக்கும் பி12 பற்றாக்குறைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி வரலாம். நாம் சாப்பிடுகிற உணவில் காணப்படுகிற பி-12 உடலில் சேர்வதற்கு வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் நிச்சயம் தேவை. இந்த அமிலத்தின் உதவியுடன்தான் உணவில் கலந்துள்ள பி12 வைட்டமின் பிரிக்கப்பட்டு உடலில் சேர்கிறது.

எனவே, இவர்களுக்கு பி 12 பற்றாக்குறை ஏற்படும். ஒரு சிலர் ஹைட்ரோகுளோரிக் அமில உற்பத்தியைக் குறைப்பதற்காகவே மாத்திரைகள் சாப்பிடலாம். அவர்களுக்கு வாயுத்தொல்லை(Gastritis) இருக்கலாம். அது மாதிரியான நபர்களுக்கும் உணவில் பி-12 இருந்தாலும் உடலில் அந்த சத்துக்கள் சேராது. இத்தகையவர்கள் பி12 வைட்டமினை சப்ளிமென்டாக சேர்த்துக் கொள்ளலாம். மாத்திரை வடிவில் பி 12 வைட்டமினை எடுத்துக்கொள்ளும்போது ஹைட்ரோகுளோரிக் அமிலம் பிரச்னையாக இருக்காது.

 B-12 வைட்டமினால் நிறைய பயன்கள் உண்டு. முக்கியமாக நரம்புத் தளர்ச்சி, உடல் வலி மற்றும் சிவப்பணு உற்பத்தி ஆதல் போன்றவை பி12 வைட்டமினை அடிப்படையாகக் கொண்டு நடக்கிறது. B12 குறைபாட்டால் ஒருவித அனிமியா வரலாம். ஒருவரின் உடலில் இந்த வைட்டமின் குறைந்து வருவதை நரம்பு பலவீனம், கை மற்றும் கால்கள் மரத்துப் போதல் மற்றும் கூசுதல்(Tingling Sensation) போன்ற அறிகுறிகளால் தெரிந்துகொள்ளலாம். பி-12 குறைபாடு வராமல் இருக்க சரிவிகித உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஏதாவது, ஒரு குறிப்பிட்ட உணவுமுறையைத் தேர்ந்தெடுக்கும்போது சீரான இடைவெளியில் பி-12 அளவைப் பரிசோதித்துக் கொள்வதும் நல்லது.’’        
 

 - விஜயகுமார்