டியர் டாக்டர்



*மெடிக்கல் டிரெண்ட்ஸ் பகுதியின் ரசிகன் நான். அதன் வடிவமைப்பும், அழகிய படங்களும், சுவாரஸ்யமான துணுக்குகளும் வாசிக்கத் தூண்டும் விதத்தில் இருக்கிறது.
- வேல்முருகன், கரூர்.

*‘நல்ல ஐடியாவாக இருக்கிறதே’ என்று தோண வைத்தது ஒரு நாள் டிஜிட்டல் விரதம். எப்போதும் மொபைல்,  லேப்டாப், கம்ப்யூட்டர், டி.வி என்று திரையைப் பார்க்கும் நேரம்தான் இன்று நம்மிடம் அதிகம். இந்த திரை பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் இருப்பது பலன் தரும் முயற்சியாகத்தான் இருக்கும். நாங்களும் முயற்சிக்கிறோம்!
- ரஞ்சனி, பெங்களூரு.

*பாலீஷ் செய்யப்பட்ட தானியங்கள் மட்டுமே ஆரோக்கியக் கேடானது. அந்த வகையில் பாலீஷ் செய்யப்படும் அரிசியைத் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும். ஆனால், மேலோட்டமாக அரிசியே தவறான உணவு என்ற பிம்பம் பரவிவிட்டது. அரிசி குறித்து ஏற்பட்டிருக்கும் இந்த பிம்பத்தை மாற்றும் வகையில் இருந்தது ‘அரிசியும் நல்லதுதான் மக்களே’ கட்டுரை. நம் நாட்டில் 3 லட்சம் அரிசி வகைகள் இருந்ததாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டுமே 5000-த்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் கிடைத்தது என்ற தகவல்களும் பிரமிப்பைத் தந்தன.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*அருமையான கவர் ஸ்டோரி. புத்துணர்வு சிகிச்சை பற்றி படித்தபோதே உடலும் மனதும் குளிர்ந்தது. ஆயுர்வேதத்தில் இருக்கும் இத்தகைய சிகிச்சைகள் எல்லாம் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. பழங்களை வேக வைத்தும் உண்ணக் கூடிய ப(ல)ழ வகைகள் பற்றி விரிவான நல்ல தகவல்கள் தந்து அசத்தியிருக்கிறீர்கள். அரசு மருத்துவமனைகள் ரவுண்ட்ஸ் லிஸ்ட்டில் இடம்பெறும் இடங்களுக்கு அரசின் கவனத்துக்கு என தலையில் ஒரு குட்டு வைக்கிறீர்கள் பாருங்கள்... அது தனி ரகம்.
- சுகந்தி நாராயண், வியாசர் நகர்.

*களைப்பு ஏற்பட்டால் அதை நாம் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறோம். அலைச்சல் அதிகம், வெயில் அதிகம் என்றும் புரிந்துகொள்கிறோம். ஆனால், களைப்பு என்பது உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள வைத்தது அதீத களைப்பு பற்றிய கட்டுரை.
- எஸ்.விஸ்வநாதன், வேலூர்.

*புளிச்சக்கீரை சத்தானது என்று தெரியும். ஆனால், அதில் இத்தனை மகத்துவங்கள் இருப்பது இப்போதுதான் தெளிவாகப் புரிந்தது. அதேபோல் ராஜ்மா பற்றிய தகவல்களும் ஆச்சரியம் தந்தது. இனி ராஜ்மாவைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டியது.
- கே.சித்ரா, மோகனூர்.