அமெனோரியா அலர்ட்



மகளிர் மட்டும்

மாதவிலக்கின்போது ரத்தப்போக்கு ஏற்படாத நிலையையே அமெனோரியா(Amenorrhea) என்கிறோம். அமெனோரியா ஏற்பட முதல் முக்கியக் காரணம் கர்ப்பம். கரு உண்டானால் அதன் காரணமாக மாதவிலக்கு நிகழாமல் போகும்.

அமெனோரியா ஏற்பட வேறு  சில காரணங்கள் உள்ளன. இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகள், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளின் காரணமாகவும் அமெனோரியா ஏற்படலாம். ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு இயல்பாக நிகழ ஹைபோதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி, சினைப்பை மற்றும் கர்ப்பப்பை போன்ற உறுப்புகள் சீராக இயங்க வேண்டும்.

ஹைபோதலாமஸ் பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி எஃப்.எஸ்.ஹெச் (FSH) மற்றும் எல்.ஹெச்(LH) ஹார்மோன்களை விடுவிக்கச் செய்கிறது. சினைப்பைகள் உற்பத்தி செய்யும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் உற்பத்திக்கு இந்த எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் இரண்டுமே காரணம். எண்டோமெட்ரியம் எனப்படும் கருப்பையின் உட்சுவரில் ஏற்படும் சுழற்சிகளுக்கு இந்த இரண்டு ஹார்மோன்களே காரணம். மாதவிலக்கும் அதில் ஒன்று.

மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு தடையின்றி நிகழ பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையும் அசாதாரணங்கள் ஏதுமின்றி இருக்க வேண்டியது
முக்கியம்.அமெனோரியா நிலையை பிரைமரி அமெனோரியா (Primary Amenorrhea) மற்றும் செகண்டரி அமெனோரியா Secondary Amenorrhea) என்று இரண்டு வகையாக மருத்துவர்கள் பிரிக்கிறார்கள்.

பிரைமரி அமெனோரியா என்பது 16 வயதாகியும் ஒரு பெண் பருவமடையாத நிலையை குறிப்பது இது. செகண்டரி அமெனோரியா ஏற்பட கர்ப்பம் தரிப்பது முதலும் முக்கியமான காரணம். இது தவிர கர்ப்பப்பை, சினைப்பைகள், பிட்யூட்டரி சுரப்பி, ஹைபோதலாமஸ் போன்ற பகுதிகளில் ஏற்படும் அசாதாரணங்களும் காரணமாகலாம்.

அமெனோரியாவை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்...

மன அழுத்தம், அளவுக்கு அதிக உடற்பயிற்சி, அதீத உடல் பருமன் அல்லது சராசரிக்கும் குறைவான உடல் எடை, கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது, காசநோய், பிட்யூட்டரி சுரப்பி, ஹைபோதலாமஸ் மற்றும் சினைப்பைகளில் ஏற்படும் அசாதாரண பிரச்னைகள், தாய்ப்பால் கொடுப்பது, தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறுகள்.

அமெனோரியாவின் அறிகுறிகள்

மாதவிலக்கு வராமல் இருப்பது, தலைவலி, உடலில் ரோம வளர்ச்சி, பிறப்புறுப்பில் வறட்சி, உடல் சூடாவது, இரவில் அதிக வியர்வை, பதற்றம், உடல் பருமன் அல்லது எடை குறைவது.இந்த மூன்றும் முக்கியம்.... கவனத்தில் கொள்ளுங்கள்!மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, மிதமான உடற்பயிற்சி, சரிவிகித உணவு.

மருந்துகளும் காரணமாகலாம்

வேறு ஏதேனும் பிரச்னைகளுக்காக எடுத்துக் கொள்ளும் சில வகை மருந்துகள், கீமோதெரபி, ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள்  மற்றும் ஒவ்வாமைக்கான மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொள்வோருக்கும் அமெனோரியா பாதிப்பு ஏற்படலாம்.
யாருக்கெல்லாம் ரிஸ்க் அதிகம்?

குடும்பத்தில் யாருக்கேனும் அமெனோரியா பாதிப்பு இருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் அது தொடரலாம். உண்ணும் குறைபாடுகளான அனோரெக்சியா நெர்வோஸா(Anorexia nervosa) அல்லது புலிமியா(Bulimia) பாதிப்பு உள்ளவர்களுக்கும் இப்படி நிகழலாம். கடுமையான விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கும் இது சகஜம்.

அமெனோரியா ஏற்படுத்தும் பாதிப்புகள்

மாதவிலக்கு வராததால் ஓவுலேஷன்(Ovulation) எனப்படும் கருவாக்கமே நிகழாது. அதனால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படலாம். ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைபாட்டால் அமெனோரியா பிரச்னை ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு மென்மையாகும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

பரிசோதனைகள் தேவையா?

16 வயதுக்கு மேலும் மாதவிலக்கு வராமல் இருந்தாலும், தொடர்ந்து 3 சுழற்சிகளாக மாதவிலக்கு வராமல் இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். அவர் அடிப்படையான சில பரிசோதனைகளை மேற்கொள்வார்.பிரைமரி அமெனோரியாவா அல்லது செகண்டரி அமெனோரியாவா என்பதைக் கண்டறிவார். இனப்பெருக்க உறுப்புகளில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா, ஹார்மோன் சுரப்பில் அசாதாரணங்கள் இருக்கின்றனவா என்பதை எல்லாம் உறுதி செய்வார். பிறப்புறுப்புப் பகுதிகளை பரிசோதனை செய்வார்.

இவற்றை அடுத்து கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, சினைப்பைகள் சரியாக இயங்குகின்றனவா என்பதைத் தெரிந்து கொள்ள எஃப் எஸ் ஹெச் அளவைக் கண்டறியும் பரிசோதனை, புரோலாக்டின் ஹார்மோன் அளவைக் கண்டறியும் பரிசோதனை, மாதவிலக்கும் வராமல் உடலெங்கும் ரோம வளர்ச்சி மற்றும் குரலில் மாற்றம் தென்படுவதற்கு ஆண் ஹார்மோன்களின் அளவைக் கண்டறியும் பரிசோதனை போன்றவற்றுக்குப் பரிந்துரைப்பார். இவை தவிர அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் போன்றவையும் தேவைப்பட்டால் பரிந்துரைக்கப்படும்.

இவற்றில் எல்லாம் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உங்கள் மகப்பேறு மருத்துவர் hysteroscopy எனும் சோதனையை அறிவுறுத்துவார். கேமரா பொருத்தப்பட்ட கருவியின்மூலம் கர்ப்பப்பையின் உள் பகுதிகள் ஆராயப்படும்.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். பெரும்பாலும் மாத்திரைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சையின் மூலமே இந்தப் பிரச்சினைகள் குணமாக்கப்படும். அரிதாக சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?!

அமெனோரியா இருப்பதாக சந்தேகம் கொள்கிறவர்கள் இந்தக் கேள்வி களுக்கு எல்லாம் பதில்களைத் தயார் செய்துகொண்டு மருத்துவரைச் சந்திக்கச் செல்லுங்கள்.உங்களுக்கு கடைசியாக எப்போது மாதவிலக்கு வந்தது, உங்களுடைய தாம்பத்திய உறவு திருப்திகரமாக உள்ளதா, உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா, கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்படுகிறீர்களா, கருத்தடை மாத்திரைகள் ஏதேனும் எடுத்துக் கொள்கிறீர்களா, திடீரென காரணமே இல்லாமல் எடை அதிகரித்ததாகவோ அல்லது குறைந்ததாகவோ உணர்கிறீர்களா, உடற்பயிற்சி செய்வீர்களா ஏதேனும் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறீர்களா, வேறு ஏதேனும் உடல் அல்லது மன நல பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் எடுத்துக் கொள்கிறீர்களா?
மேற்கண்ட கேள்விகளுக்கான சுயபரிசோதனை மேற்கொண்டுவிட்டு மருத்துவ ஆலோசனை பெறச் செல்வது நலம்.

- ராஜி