அலைபாயும் மனதை எளிதாய் அடக்க...



கொஞ்சம் மனசு

வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் என எங்கு பார்த்தாலும் தகவல்கள் வெள்ளமாய் சூழும் போது, அதில் எது நமக்குத் தேவையானது? எதெல்லாம் குப்பை என பிரிக்கலாம்? இதற்கு தனியா நம் மூளைக்கு பயிற்சி தேவையோ?

சமீபத்தில், அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தின் உளவியல் இணை பேராசிரியரான அமிஷி ஜா, ‘அலைபாயும்  மனதை எப்படி வசியப்படுத்தலாம்? என்ற தலைப்பில் மனதை ஒருமுகப்படுத்துவதற்கான டிப்ஸ்களை வெளியிட்டிருக்கிறார்.

கவனம்தான் உங்கள் மூளையின் முதலாளி எதையெல்லாம் நீங்கள் கவனிக்கிறீர்கள்? கவனச்சிதைவு ஏற்படுகிறதா அல்லது நிறைய விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்கிறீர்களா? என்று குறிப்பெடுங்கள். முதலில் கண்ணில் படுவதை பார்க்கத் தூண்டும்; பின்னர் மூளையின் கணக்கீட்டு வளங்கள் அதைப்பற்றி கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் திரட்ட மூளையின் துணைக்குழுக்களை வழிநடத்தும் பணியைச் செய்யத்தூண்டும் வேலையை ஆரம்பித்துவிடும். கவனம் எப்படி மூளையின் தலைவராக செயல்படுவதை இப்போது உணர முடிகிறதா?

அதாவது, கவனம் எங்கு சென்றாலும் மீதமுள்ள மூளையின் பாகம் அனைத்தும் அதை பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்து விடும். இதன்மூலம் கவனமே உங்கள் மூளையின் முதலாளியாகிவிடுகிறது. அதனால் தேவையற்ற தகவல்களை Hide செய்துவிடுங்கள்.

திசை திருப்புங்கள்

எப்போதெல்லாம் உங்கள் மனது அதீத தகவல்களினால் அலை பாய்கிறதோ, அப்போதெல்லாம் வலுக்கட்டாயமாக மனதை திசை திருப்புங்கள். இதை ஆங்கிலத்தில் Mind Nudge என்று சொல்வோம். அதேபோல் ஒரு செயலில் கவனமாக ஈடுபடுவதால் உங்களின் எல்லா சக்தியையும் அந்த வேலைக்கே செலவிட வேண்டும் என்பதில்லை. அந்த நேரத்தில், மூளையை அலைபாய அனுமதிப்பதும், அந்த வேலையிலிருந்து மெதுவாக கவனத்தை திசை திருப்ப வேண்டியதும் அவசியமாகிறது.

ஒரே சமயத்தில் உங்கள் மூளையில் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்களது கவனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவதற்கும், மனம் அலைபாய்வதை தடுப்பதற்கும் Mind Nudge தேவைப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ‘அந்தத்தருணத்தில் மட்டும் உங்கள் கவனம் இருக்கட்டும்’.

வேலையைச் சுருக்கலாம்  

‘நியூரோ சயின்ஸ் ஜர்னலில்’ வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, ‘செவிப்புலன் மற்றும் பார்வை உணர்வுகள் ஒரு வரையறுக்கப்பட்ட நரம்பியல் வளத்தைப் பகிர்ந்து கொள்கின்றன’ என்று கூறுகிறது. அதாவது, நீங்கள் டி.வி பார்த்துக் கொண்டே மொபைலில் வேறொருவரிடம் பேசமுடியாது அல்லது பக்கத்தில் இருப்பவர்கள் சொல்வதை கவனிக்க முடியாது. அதற்காக அவரை நீங்கள் உதாசீனப்படுத்துவதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கண்களும், செவியும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது என்பதைத்தான் அந்த ஆய்வு சொல்கிறது. ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் செய்யுங்கள். அதை முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்.

மல்டி டாஸ்கிங் கட்டுக்கதைஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதால் தீவிர கவனச்சிதறலின் சிக்கலை எதிர்கொள்கிறோம். மூளை ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யும்படி வடிவமைக்கப்படவில்லை. ஒரே இடத்தில் கவனம் செலுத்துவதைத்தான் மூளை விரும்புகிறது. ஒரு வேலையிலிருந்து கவனத்தை வலுக்கட்டாயமாக மாற்றும் போது கூட, நமது மூளை வேறொரு வேலையில் முழு கவனம் செலுத்த தொடங்கிவிடும். மீண்டும் தேவைப்படும்போது, ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வேலையில் கவனத்தை திருப்பலாம்.  

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மனதிற்கு சில உந்துதல் பயிற்சிகளைக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக, மியூசிக் கேக்கலாம், அல்லது நகைச்சுவை காட்சிகளை பார்க்கலாம், சிம்பிளா மூச்சை நன்றாக இழுத்து விடுவதில் உங்கள் கவனத்தை திருப்ப முடிந்தால் அலைபாயும் மனதை அமைதிப்படுத்த முடியும்.

- உஷா நாராயணன்