அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்!செய்திகள் வாசிப்பது டாக்டர்

எச்.ஐ.வி, எய்ட்ஸ் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த அரசாணை வெளியிட்டிருப்பதாக டெல்லி உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைக் காப்பாற்றும் பொருட்டும் மருத்துவம், கல்வி, வேலை மற்றும் வீடு ஆகியவற்றில் உரிய உரிமை பெறும் பொருட்டும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி ஒப்புதல் அளித்தார். ஆனால், அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திரமேனன், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. ‘நீங்கள் ஒரு சட்டத்தை உருவாக்குகிறீர்கள். ஆனால், அதற்கான அரசாணை வெளியிடுவதில் ஏன் இத்தனை தாமதம்? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த மனு மீண்டும் 11-9-2018 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம் 2018 அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் (முன்தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2017 என்று இதற்கு பெயரிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் பரவுவதைத் தடுப்பது, எச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கான மனித உரிமை பாதுகாப்பை வழங்குவது, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் பிறருடன் இணைந்து வாழ்வதை உறுதி செய்வது, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கு எதிரான குற்றங்களை இழைப்போருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகை  விதிக்க வழிவகை செய்வது, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை தொடர்புடையவர்களின் ஒப்புதல் இல்லாமலோ, நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலோ வெளியில் சொல்லக்கூடாது ஆகியவை இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது!

- கௌதம்