மகிழ்ச்சியை தள்ளிப் போடாதீர்கள்!centre spread special

சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், யாரும் அப்படி இருப்பதுபோல் தெரிவதில்லை. அதற்கான அறிகுறிகளையும் எந்த முகத்திலும் காண முடிவதில்லை. ஏனெனில் ஆனந்தம் என்பது எப்போதும் எதிர்காலம் தொடர்பானதாகவே மனிதர்கள் முடிவு செய்துகொள்கிறார்கள்... இந்த அணுகுமுறை முற்றிலும் தவறு என்கிறார்கள் உளவியலாளர்கள்.

படித்து முடித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், வேலைக்குச் சென்று விட்டால் போதும், திருமணம் முடிந்தால் ஜாலியாக இருக்கலாம் என்று தொடங்குகிற நம் பட்டியல் அப்படியே தொடர்ந்து நீள்ள்ள்ள்கிறது. வீடு கட்டினால்... குழந்தைகள் வளர்ந்தால்... வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால்... குடும்பத்துக்கான கடமைகளை முடித்துவிட்டால் என்று நிம்மதியாக இருக்க ஏதேனும் நிபந்தனைகள் எப்போதும் உயிர்ப்போடு இருந்துகொண்டே இருக்கின்றன. இதைத்தான் தவறு என்கிறார்கள்.

நாம் விரும்பியதை அடைந்துவிட்டாலும் திருப்தி அடைகிறோமா என்றால் அதுவும் இல்லை. அதற்கடுத்த இலக்கை நோக்கி நம் பார்வை சென்றுவிடுகிறது. இப்படி எதிர்காலத்திலேயே நம் வாழ்க்கையின் ஆனந்தத்தை அடகு வைத்து, தேடலாகவே நம் வாழ்க்கை முழுவதையும் கழித்துவிடுகிறோம். நிகழ்காலத்தில் எப்போதும் கவலைகளுடனே உலவுகிறோம்.

வெற்றி என்பது இலக்கில் இல்லை. நிகழும் சின்னச்சின்ன தருணங்களிலேயே இருக்கிறது. அன்றைய தினத்தை தொடங்க உதவிய ஒரு கோப்பைத் தேநீர், பேருந்தில் கேட்ட பாடல், சாலையைக் கடக்கும்போது கிடைத்த பள்ளிக் குழந்தையின் புன்னகை, விடுமுறை நாளின் குட்டித்தூக்கம் என்று ஒவ்வொன்றிலும் வாழ்க்கை ஒளிந்துகிடக்கிறது.

உங்கள் இலக்கை அடையும்போது மகிழ்ச்சியைக் காணலாம் என்று நீங்கள் நம்பினால் அது முழுக்கவே அர்த்தமற்றது. ஏனெனில், மலை உச்சியில் ஒன்றுமே இல்லை. சிகரத்தை நோக்கிய பயணத்தில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும்தான் கொண்டாட்டம். ஒவ்வொரு கணமும்தான் உங்களின் வாழ்நாள். எனவே, உங்களின் உற்சாகம் இன்றே இப்பொழுதே மலரட்டும்!

- இந்துமதி