இ-சிகரெட்டுக்குத் தடை விதித்தால் போதுமா?!



நாட்டு நடப்பு

இ-சிகரெட் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நிகோடின் மற்றும் புரோபைலின் கிளைகாலர் திரவம் நிரப்பப்பட்டிருக்கும். இதை சூடுபடுத்த அதனுள் பேட்டரியும் இருக்கிறது. இதனால் சுவாசக் கோளாறுகள் மற்றும் கேன்சர் ஏற்படாது என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால், கேன்சர் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட நிகோடின் மட்டுமே போதும் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். உலக சுகாதார நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச புகையிலை பாதிப்பு 2017 அறிக்கையின்படி,

மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கொரியா, இலங்கை, சவுதி அரேபியா உள்ளிட்ட 30 நாடுகளில் இ-சிகரெட்டுகள் மற்றும் எண்ட்ஸ் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இ-சிகரெட்டுகள் மிக அதிகளவிலான உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காரீயம், குரோமியம் மற்றும் நிக்கல் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் சிலவகை எண்ட்ஸ் தயாரிப்புகளில் காணப்படுகின்றன.

புகையிலைப் பொருட்களுக்கு இந்த இ-சிகரெட்டுகள் மாற்று என மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்படவில்லை. ‘இ-சிகரெட்டுகள் விற்பனை, தயாரிப்பு, விநியோகம், வர்த்தகம், இறக்குமதி மற்றும் விளம்பரம் போன்றவை நடைபெறுவதைத் தடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்’ என்று விரிவாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட், மது பானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டியது பொது மக்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்ட அரசின் பணி. ஆனால், அதை விட்டுவிட்டு இ-சிகரெட் விற்பனைக்கு மட்டும் தடை விதிப்பதென்பது பிரச்னைக்குக் காரணமாக இருக்கிற வேரை விட்டுவிட்டு அதன் கிளைகளை மட்டும் அகற்ற முயற்சிப்பது போன்று உள்ளது!

- கௌதம்