பணம் ஈர்க்கும் உளவியல் தந்திரங்கள்



Money & psychology

‘உலகெல்லாம் ஒரு சொல்... ஒரு சொல்லில் உலகம்’ என்று காதலைப் பற்றிக் கவிஞர்கள் வர்ணிக்கிறார்கள். இது காதலைப் போலவே பணத்துக்கும் பொருந்தும். நம்முடைய இத்தனை அங்கலாய்ப்புகள், அலைக்கழிப்புகள் எல்லாமே பணம் என்ற ஒன்றுக்காகத்தானே...

தேவைக்கேற்ற பணம் இருந்தால் வாழ்வின் பாதிக்கு மேற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும் என்பதையும் உணர்ந்தவர்கள்தான் நாம். அதற்காகத்தான் நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எல்லோரிடமும் பணம் வருவதில்லையே ஏன்? எல்லோரிடமும் பணம் நிலைப்பதும் இல்லையே ஏன்?

இதற்கு உளவியல் அறிஞர்கள் நிறைய ஆச்சரியகரமான பதில்களைச் சொல்கிறார்கள். செல்வத்தை ஈர்க்கும் பல எளிமையான உளவியல் தந்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஒரு சுவையான ஆராய்ச்சி பணத்தை கையால் கணக்கிடும்போது மனதில் இனம்புரியா மகிழ்ச்சி ஏற்படுவதை கவனித்திருக்கிறீர்களா? இதைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி கூட செய்திருக்கிறார்கள். பணத்தை கணக்கிடுவதால் உடலின் வலி கூட குறைந்துவிடுமாம். நாம் நினைத்துக் கொண்டிருப்பதையும் விட, பணம் மனிதனிடத்தில் மிகப்பெரிய உளவியல், உடலியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சீனா மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

ஆய்வுக்குட்படுத்தியவர்களிடத்தில் வெறும் வெள்ளைத் தாள்களையும், பணத்தையும் தனித்தனியே கொடுத்து கணக்கிட வைத்தும், ஒரு கிண்ணத்தில் 122 ஃபாரன்ஹீட் வெப்பத்தில் வெந்நீரை நிரப்பி, தொடு உணர்ச்சி சோதனை மேற்கொண்டனர்.

 உடல் வலி உள்ளவர்கள் வெந்நீரில் கைவைத்த போதும், பணத்தை தொட்ட போதும் வலி குறைவதையும், வெள்ளைத்தாளை தொடும்போது வலி அதிகரிப்பதையும் உணர்ந்தார்களாம். வெவ்வேறு தொடு உணர்வுகளில் நல்ல வித்தியாசத்தை உணர முடிந்ததை நிரூபித்த இந்த ஆய்வு, ‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்ற மிகப்பழைய பழமொழியை உறுதிப்படுத்துவது உண்மைதானே.

எல்லோரும் ஏன் செல்வந்தர்களாவதில்லை?

பணம் சம்பாதிப்பவர்கள் எல்லோருமே செல்வந்தர்களாக இருக்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக கிளார்க்காக வேலை செய்பவர்கூட தன்னுடைய எதிர்காலத்திற்காகவும், அவசரத்திற்காகவும் குறிப்பிட்ட தொகையை கையில் வைத்திருப்பார். ஆனால் கார், பங்களா என்று சொகுசாக இருப்பவர்களை கேட்டுப் பாருங்கள். மாதக்கடைசியில் நண்பர்க ளிடம் கடன்
வாங்குபவராக இருப்பார்கள்.

ஒருவருக்கு, பணம் கையாளும் பக்குவம் அவர்களுடைய பெற்றோர் மற்றும் குடும்பப் பின்னணியிலிருந்து வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரே வீட்டில் ஒரு பையன் செலவாளியாகவும், ஒரு பையன் சேமிப்பாளனாகவும் இருப்பதைப் பார்க்க முடியும். ‘பணம் சேமிப்பது அல்லது செலவிடும் பழக்கங்கள் நாம் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை’ என்பதை பல நவீன ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
மூளையின் பங்கு முக்கியமானது!

பொருளாதார பழக்கங்களை நிர்ணயிப்பதில் ‘மூளை வேதியியலின்’ பங்கும் இருக்கிறது என்கிறார்கள் உளவியல் வல்லுனர்கள். சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிடும் நுகர்வோர் ஆராய்ச்சி இதழில், ரிக், சைடர் மற்றும் லோவைன்ஸ்டீன் ஆகியோரால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மூளையின் உட்பகுதியில் இருக்கும் ‘Insula’ வின் தூண்டுதல் செயல்பாடே ஒருவரின் பணம் சம்பந்தமான பழக்கத்தை நிர்ணயிப்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது ‘Insula’ செயல்பாடு அதிகமாக இருக்கும் ஒருவர் பண விஷயத்தில் கில்லாடியாக இருப்பார். மிகச்சாதுர்யமாக சம்பாதிப்பவராகவும், அதைப் பத்திரமாக சேமிப்பவராகவும் இருப்பார் என்கிறது விஞ்ஞானம்.  

‘ஒருவருடைய பணத்தை கையாளும் திறனானது அவரின் மனநிலை மற்றும் உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம்’ என்கிறார்கள் தென் சீனாவின் சன் யட்-சேன் பல்கலைக்கழகத்தின் சின்யூசூவே மற்றும் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் கேத்லின் டி வோஸ் மற்றும் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் ராய் எஃப் பியூமுஸ்டா போன்ற ஆராய்ச்சியாளர்கள் திறமையாக பணம் கையாள்பவர்களிடையே 6 தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் பணம் சம்பாதிப்பதற்கான எண்ணங்கள் அல்லது நினைவூட்டல்கள், எவ்விதம் ஒருவரின் சமூக மற்றும் உடல் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்தனர்.

கோடீஸ்வரர்களின் பழக்கங்கள் அமெரிக்க பொருளாதார உளவியலாளரான நெப்போலியன் ஹில், உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் எழுதிய ‘Think and Grow rich’ என்ற புத்தகத்தில் பணக்காரர்கள் எப்படி சிந்திக்கிறார்கள், பணத்தை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதையும் பட்டியலிட்டிருக்கிறார். ஒட்டுமொத்த இந்த ஆராய்ச்சிகளிலிருந்து, பணத்தைப் பற்றி நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

‘பணம்தான் அனைத்து துன்பத்திற்கான வழி என்று நாம் சொல்வோம். ஆனால், செல்வந்தர்களோ ஏழ்மைதான் எல்லா துன்பத்தையும் தரக்கூடியது’ என்பார்கள். பணக்காரர்களை அதிர்ஷ்டசாலிகளாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் இவ்வுலகம் சித்தரிக்கிறது. ஆனால், பணத்தைப்பற்றிய நேர்மறையான சிந்தனையே அவர்களிடம் பணத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.

பணம் சம்பாதிப்பதற்கான யோசனை சொல்லக்கூடியவர்களையே தன்னிடம் சேர்த்துக் கொள்வார்கள். நிதி முடிவுகளில் உணர்ச்சிகளுக்கு அவர்கள் இடம் கொடுப்பதில்லை. கையில் கிடைக்கும் பணத்தில் முதலில் தனக்கான தேவைகளை நிறைவேற்றிய பிறகே மற்றவற்றைப்பற்றி யோசிப்பார்கள். இவர்களின் சிக்கன மனப்பான்மை ஒவ்வொரு செயலிலும், நொடியிலும் சுயநலவாதிகளாக சிந்திக்க வைக்கும். தனக்கருகில் இருக்கும் எல்லாவற்றிலும் தனக்கான வாய்ப்பை தேடிக் கொள்கிறவர்களாகவும் பணக்காரர்கள் இருப்பார்கள்.

பெரும்பாலும் இவர்களுடைய பொருளாதாரத்திட்டங்கள் நீண்டகாலத்திற்கானதாக இருக்கும். குறுகிய காலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை. உடை, உறைவிடம், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகள் சார்ந்ததாக இருந்தாலும் நீண்ட கால உபயோகத்திற்காகத்தான் யோசிப்பார்கள். பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுவார்கள்.

நாம் செய்கிற தவறுசாதாரணமானவர்களின் சிந்தனை மற்றவர்களை நம்பி அமைந்திருக்கும். நம்முடைய முதலாளி செய்வார், என் கணவன் அல்லது மனைவி உதவுவார், கடவுள் கொடுப்பார்  என அதிர்ஷ்டம் அல்லது உணர்வுரீதியாகத்தான் சாமன்யர்களின் மனவோட்டம் இருக்கும்.

எவ்வளவு திறமையானவர்களாக இருப்பினும் சாதாரணமானவர்களின் பொருளாதாரத்திட்டம், பயத்தோடு கூடிய, பற்றாக்குறை உந்துதலின் கட்டாயத்தால் உணர்வு சார்ந்ததாக இருக்கும். அடிப்படை வசதிகள் உள்ள ஓய்வுகாலமாக இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான நடுத்தர மக்களின் மிகப்பெரிய பொருளாதாரக் கனவாக இருக்கும்.

சிக்கனப் பேர்வழிகள்

சிக்கனப்பேர்வழிகளோ பணத்தை தர்க்க ரீதியான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். புத்திசாலித்தனமாக தாங்கள் விரும்பிய துறையையே பொருளீட்டும் தொழிலாக மாற்றிக் கொண்டுவிடுவார்கள். பிடிக்காத வேலையில் கட்டாயத்திற்காக, கடுமையாக உழைத்து சம்பாதிப்பதை இவர்கள் விரும்புவதில்லை. அதேவேளையில் சாதுர்யமாக அடுத்தவரின் பணத்தை தனக்காக உபயோகித்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள்.

நண்பர்கள் வட்டத்திலேயே ஒருபோதும் இவர் செலவு செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். மற்றவர்களின் பணத்திலேயே தன்னுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு, சேமிப்புப்பணத்தை தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் கில்லாடிகள்.

அலுவலக சம்பந்தமான வெளியூர் பயணங்களில், அலுவலக செலவிலேயே தன்னுடைய சொந்த வேலைக்கும் பயன்படுத்திக் கொள்ள தயங்க மாட்டார்கள். இந்தக்கலையை தங்கள் வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுத்துவிடுகிறார்கள்.

பணம் ஈட்டுவதிலேயே தங்கள் மன அமைதியை தேடிக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஓய்வுநேரத்தை பொழுதுபோக்குகளில் வீணடிப்பதில்லை. அந்த நேரத்திலும் எதையாவது கற்றுக் கொள்வதிலும், அதன்மூலம் சம்பாதிப்பதிலுமே இவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

பணம் சம்பந்தமான கடின சிந்தனை உள்ளவர்களை தன் அருகில் வைத்துக் கொள்வதில்லை. தங்களைப்போலவே சுலபமாக சம்பாதிக்கும் வழி தெரிந்தவர்களையே நட்புவட்டத்தில் வைத்துக் கொள்கிறார்கள். சேமிப்புக்காக பெரிதாக சிந்திப்பதில் நேரம் செலவிடுவதில்லை. அந்த நேரத்தில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதிலேயே இவர்களின் சிந்தனை இருக்கிறது. ‘சின்ன கல்லு, பெத்த லாபம்’ என்பதுதான் தாரக மந்திரம்!

நான்கு கட்டளைகள்!

1. பணத்தைப்பற்றி நாம் எப்படி சிந்திக்கிறோமோ, அதுவே பணத்திற்காக நாம என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.

2. கோடீஸ்வரராக ஓய்வு காலத்தை அனுபவிப்பதற்கும், கையில் எதுவுமே இல்லாமல் கடனாளியாக ஓய்வு பெறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

3. கோடீஸ்வரனாக ஆசைப்பட்டால் மட்டும் பலனில்லை. அதை நோக்கிய சின்ன சின்ன நகர்வுகளும் முக்கியம்.

4. பணம் நம்மை கட்டுப்படுத்தாமல், நாம் பணத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

அனைத்துக்கும் மேல், ‘பணத்தை வெறுப்பதையோ, பயத்தோடு பார்ப்பதையோ விட்டுவிட்டு, பணத்தை காதலியுங்கள்’ என்பதுதான் ஆய்வாளர்களின் அறிவுரை.

- இந்துமதி