புகைப்பழக்கமும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்தும்!



எலும்பே நலம்தானா?!

பு கைப்பழக்கம் என்பது ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு முதல் காரணம் என்பது 20 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. சமீப கால ஆராய்ச்சிகள், புகைப்பழக்கத்துக்கும், எலும்புகளின் அடர்த்தி குறைவதற்குமான தொடர்பை மேலும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

புகைப்பழக்கம் உள்ளவர்கள், அந்தப் பழக்கம் இல்லாதவர்களைவிட ஒல்லியாக இருப்பதையும், அவர்களில் பலருக்கும் மதுப்பழக்கம் இருப்பதையும், உடலுழைப்பு குறைவானவர்களாக இருப்பதையும் பார்க்கலாம். அதேபோல புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு மற்றவர்களைவிட முன்னதாகவே மெனோபாஸ் வருவதையும் பார்க்கலாம். இவை எல்லாம் புகைப்பழக்கத்துக்கும் எலும்புகளின் பலவீனத்துக்குமான தொடர்பையே காட்டுகின்றன.

அது மட்டுமல்ல, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஃபிராக்சர் எனப்படும் எலும்பு முறிவுக்கான வாய்ப்புகளும் அதிகம். நீண்ட காலமாக புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு முதுமையில் எலும்பு முறிவுக்கான அபாயங்கள் அதிகம். தவிர இளவயதில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் அது குணமாக அதிக நாட்கள் பிடிக்கும்.

இவற்றைவிடவும் அதிர்ச்சியான விஷயம் ஒன்று சொல்லவா?

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அருகில் நீண்ட நேரம், நீண்ட காலம் இருப்பவர்களுக்கும் எலும்புகள் பலவீனமாவதும், அடர்த்தியிழப்பதும் அதிகம் நடக்கும். மெனோபாஸ் காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் என்பதை நாம் அறிவோம். புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறையத் தொடங்கும், சீக்கிரமே  மெனோபாஸ் வரும். அதன் தொடர்ச்சியாக எலும்புகளும் சீக்கிரமே பலமிழக்கும்.

புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் இந்த பாதிப்புகள் குறையும் என்பது உறுதி. இள வயதில் எலும்பு களின் அடர்த்தி அதன் உச்சத்தில் இருக்கும் என்பதால், அந்த வயதிலேயே புகைப்பழக்கத்துக்கு உள்ளாகிறவர்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறைவாகவே இருக்கும். 30 வயதுக்குள் புகைப்பழக்கத்தை ஆரம்பிக்கிறவர்களின் எலும்புகள் மற்றவர்களைவிடவும் 2 மடங்கு விரைவாக அடர்த்தியிழப்பதால் வழக்கத்தைவிட முன்னதாகவே இவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் தாக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள விரும்புவோர், முதல் வேலையாக புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். வாழ்க்கையின் பெரும்பகுதியை புகைத்தே கழித்துவிட்டோம்... இனிமேல் அதை நிறுத்தி என்னவாகப் போகிறது என்று எண்ண வேண்டாம். நிறுத்திய நிமிடத்திலிருந்தே ஒருவரின் உடலில் மாற்றம் தெரியும்.

புகைப்பழக்கத்தைக் கைவிடுவது மட்டும் போதாது. கூடவே ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய பிற விஷயங்கள் இவை....

* கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமுள்ள பால் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவையும் அவசியம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கால்சியம் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

* உடற்பயிற்சிகளின் மூலம் எலும்புகளின் ஆரோக்கியம் பேணலாம். எடை தூக்குவது, நடைப்பயிற்சி, நடனம் போன்ற பயிற்சிகள் எலும்புகளுக்கு நல்லவை.சிகரெட் மட்டுமில்லை, அதைவிடவும் ஆபத்தானது குடிப்பழக்கம். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடுப்பு, முதுகு மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

குடிப்பவர்களின் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியம் சத்தைப் பெறத் தேவையான வைட்டமின்களை உடல் கிரகிப்பதையும் மதுப்பழக்கம் தடுத்துவிடும். குடிப்பவர்களுக்கு கீழே விழவும், அடிபட்டுக்கொள்ளவும், அதன் காரணமான எலும்பு முறிவுகளுக்கும்கூட வாய்ப்புகள் அதிகம். எனவே அந்தப்பழக்கம் வேண்டாம்.

*குடும்பப் பின்னணியில் ஆஸ்டியோபோரோசிஸ்  இருப்பவர்கள் மற்றும் சிகரெட், மதுப்பழக்கம் இருந்தவர்கள் எலும்புகளின் அடர்த்தியை அறிந்துகொள்ளும் போன் மினரல் டென்சிட்டி டெஸ்ட் செய்து பார்க்கலாம். இது எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள உதவும்.

*ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னைக்கு மருந்துகளும் சிகிச்சைகளும் ஒரு பக்கம் தொடர, இன்னொரு பக்கம் புகைப்பழக்கத்தையும் தொடர்பவர்களுக்கு மருந்துகளும், சிகிச்சைகளும் வேலை செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. ஆனால், தவிர்க்க முடியும்.

இவற்றை நினைவில் கொள்ளுங்கள்!

*ஆஸ்டியோபோரோசிஸ் பாதித்தவர்களுக்கு எலும்புகளில் எந்தவிதமான பலவீனமும் தெரியாது. கீழே விழுந்தோ, பலமாக இருமும்போதோ, தும்மும்போதோ எலும்புகள் முறிந்துபோய், மருத்துவரைப் பார்க்கும்போதுதான்  ஆஸ்டியோபோரோசிஸ் தாக்கம் தெரியும்.

*கால்சியம் அதிகமுள்ள உணவுகள் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம். உடலில் போதுமான கால்சியம் இல்லாதபோது, அது எலும்புகளில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சிக்கொள்ளும். உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் எலும்புகள் மெலியும். எளிதில் உடையும்.

*எலும்புகள் என்பவை வளரும் தன்மையுள்ள, உயிர்ப்புள்ள திசுக்கள். கால்சியம் மற்றும் இதர தாதுச்சத்துகளை சேமித்து வைக்கக்கூடியவை. 35 வயதுக்கு மேல் எலும்புகளின் இந்தத் தன்மை மந்தமாகும்.

*பாதிக்கப்படுகிறவர்களில் 80 சதவிகிதம் பேர் பெண்கள். ஏனெனில், அவர்களுடைய எலும்புகள் ஆண்களின் எலும்புகளைவிடவும் மெலிவானவை.

*கால்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிற எந்தப் பயிற்சிகளும் எலும்புகளுக்கு நல்லவை. அந்த வகையில் நடைப்பயிற்சி மிகச் சிறந்தது.

( விசாரிப்போம் !)

எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி