டியர் டாக்டர்



*எடையைக் குறைக்க லேகியம், முடியை வளர்க்க மூலிகை என்று உலகமே அலைந்துகொண்டிருக்கும் நேரத்தில், தலையில் குட்டி நல்ல விழிப்புணர்வைத் தந்தது கவர் ஸ்டோரி. அதேபோல், யூ டியூப் மூலம் பிரசவம் பார்த்து ஒரு இளம்பெண்ணின் உயிர் போயிருக்கும் நேரத்தில் வெளியிட்டிருக்கும் ‘உயிரைப் பறித்த சுயமருத்துவம்’ கட்டுரையும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய விழிப்புணர்வூட்டல்!
- சுகந்தி நாராயண், வியாசர் நகர்.

*பிளாஸ்டிக் ஒழிப்பு குரல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் ஆரோக்யமான சூழலுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது, ‘பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்’ கட்டுரை. பயோபிளாஸ்டிக் தயாரிக்கும் முறை, அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விளக்கங்கள் பிளாஸ்டிக்குக்கு குட் பை சொல்லும் உத்வேகத்தைத் தந்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*வியர்வை என்பது உடலில் இருந்து வரும் வெப்பம் அல்ல. அது உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி என்று உணர்த்தியது அழகே... என் ஆரோக்கியமே.... சருமத்தில்தான் எத்தனை எத்தனை மகத்தான விஷயங்கள் மறைந்திருக்கிறது என்று வியந்தே போனேன்.
- கிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.

*பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடக் கூடாது என்று பலரும் இப்போது பேசிவருகிறார்கள். அது பற்றிய இன்னும் ஒரு தெளிவினைத் தந்தது ‘பிராய்லர் பிராப்ளம்’. மரபணு மாற்றப்பட்ட பிராய்லர் கோழிகள் உண்பதால் ஏற்படும் விபரீதங்களை எளிமையாக விளக்கியிருந்தார் இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை நிபுணர் சுகுமார்.
- ஆர்.ராஜசேகர், கிண்டி.

*பாதங்களில் எண்ணெய் வைப்பது, வெந்நீர் சிகிச்சை, சுடு ஒத்தடம் என ஒவ்வொரு தகவலும், பாதங்களை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.
- வனஜா, கோவைப்புதூர்.

*‘மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்’ என்ற தலைப்பே பல விஷயங்களைப் புரிய வைத்துவிட்டது. உடல்நலன், மனநலனோடு சமூக நலன் காப்பதாகவும் விளையாட்டுகள் இருக்கின்றன என்ற கருத்தை இன்றைய பெற்றோரும், ஆசிரியர்களும் உணர வேண்டும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதைப் போலவே அவர்கள் சிறந்த குடிமகன்களாகவும் உருவாக வேண்டும். மைதானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய ‘குங்குமம் டாக்டருக்கு’ நன்றி கலந்த பாராட்டுக்கள்.
- பிரபு, பாலக்கோடு.