அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துங்கள்!



நாட்டு நடப்பு

பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிப்பதில் பல கட்டங்கள் உள்ளன. சுகாதாரமாக மருத்துவமனையைப் பராமரித்தல், நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகள், அதிநவீன சிகிச்சைகள், சிறப்பான மருத்துவர்கள் என்பதெல்லாம் எத்தனை அவசியமோ அதற்கிணையாக அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதும் அவசியம். ஆனால், எத்தனை மருத்துவமனைகளில் இந்த அடிப்படை கட்டமைப்பு முழுமையாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது சமீபத்திய பொதுநல வழக்கு ஒன்று.

‘அனைத்து மருத்துவமனைகளிலும் ஊனமுற்ற நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக சாய்தள பாதை மற்றும் தீயணைப்பு சாதனங்களை அமைக்க வேண்டும்’ என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.

இதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ‘அரசு மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகளை செய்வதற்காக தமிழக அரசு ரூ.89 கோடியே 58 லட்சம் ஒதுக்கியுள்ளது. இதில் 34 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு தீயணைப்பு வசதிகளை செய்வதற்காக ரூ.37 கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனைகளில் இந்த தீயணைப்பு வசதிகளை செய்ய ரூ.4 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு ரூ.2.9 கோடியும், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.57 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் சாய்தள பாதை வசதி அமைப்பதற்காக ரூ.16 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

19 அரசு மருத்துவமனைகளில் ரூ.27 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் ஜெனரேட்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, நிதி ஒதுக்கீடு பற்றிய தகவலையே இதில் பார்க்க முடிகிறது. போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெளிவான தகவல் எதுவும் இந்த அறிக்கையில் இல்லை. அதேபோல் 1,400 மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகள் இல்லை என்பதும், 2,023 மருத்துவமனைகளில் சாய்தள வசதி இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவத் தலைநகராக தமிழகம் பெயர் பெற்றிருக்கும் நிலையில், அடிப்படை உள்கட்டமைப்பு விஷயத்தில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதைப் புரிய வைத்திருக்கிறது இந்த பொதுநல வழக்கு. பொதுமக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்கட்டும்!

- ஜி.ஸ்ரீவித்யா