பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!



அகராதி

பிளாஸ்டிக் சூழ் உலகு என்று வர்ணிக்கும் அளவு அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன பிளாஸ்டிக் பொருட்கள். நாம் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலும் எத்தனை மண்ணில் மட்கக் கூடியவை என்று யோசித்துப் பாருங்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும்.

காலையில் எழுந்து பிரஷ் செய்வதில் தொடங்கி இரவு தூங்கச் செல்லும்வரை பிளாஸ்டிக் என்பது ஒரு தவிர்க்க முடியாத பொருளாக இன்று உருவெடுத்துள்ளது. பயன்படுத்திய பிறகு தூக்கி எறியக்கூடிய(Use and Throw) கலாச்சாரம்தான் இன்றைய உலகையே இயக்கிக் கொண்டும் இருக்கிறது.

சராசரியாக ஒரு பிளாஸ்டிக் முழுவதுமாக அழிவதற்கு 200 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இதனால் சுற்றுப்புறச் சூழலுக்கும், நமக்கும் பிளாஸ்டிக் என்பது பெரிய அச்சுறுத்தலாகவே அமைகிறது. என்னதான் பிளாஸ்டிக்கினை ஒழிக்க அரசு பலவித கெடுபிடிகளை விதித்தாலும் பிளாஸ்டிக் என்னும் நெகிழியின் பயன்பாடு இன்னும் முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திணறுகின்றனர். இதற்கு சரியான மாற்று வழிதான் பயோ பிளாஸ்டிக் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

எதிர் வரும் 2050-ம் ஆண்டில் கடலில் இருக்கும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை ஒழித்துக் கட்ட அதற்கு மாற்றுப் பொருள் இன்று அவசரமாகத் தேவைப்படுகிறது. எனவேதான் பிளாஸ்டிக்குக்கு மாற்று தயாரிக்கும் முனைப்பு உலகெங்கிலும் நடைபெற்று வருகிறது.

அத்தகைய முயற்சிகளில் முக்கியமான ஒன்றுதான் இந்த பயோ பிளாஸ்டிக்(Bio Plastic). வெதுவெதுப்பான தண்ணீரில் உடனடியாகவும், நிலத்திலோ, கடலிலோ கரையக்கூடிய ஒரு சிறப்பை பயோ பிளாஸ்டிக் பெற்றுள்ளது. அதுவும் 2 அல்லது 3 மாதங்களில் கரைந்துவிடும் என்பது இதன் தனிச்சிறப்பு என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அப்படி என்ன இருக்கிறது இந்த பயோ பிளாஸ்டிக்கில்?

பயோ பிளாஸ்டிக் என்பது மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், சோயா ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இதில் பைகள் செய்து பயன்படுத்தலாம். வேடிக்கைக்காகச் சொன்னால், நச்சுப்பொருட்கள் இல்லாததால் பயோ பிளாஸ்டிக்கை கரைத்துக் குடித்தாலும் உடலுக்குத் தீங்கு விளையாது. பயோ பிளாஸ்டிக் பைகள் சில நாட்களிலேயே மண்ணிலோ, நீரிலோ கரைந்து போய்விடுகின்றன. ஆகையால், இதற்கு 100 சதவீதம் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பயோபிளாஸ்டிக்கின் நன்மைகள் என்ன?

* பயோ பிளாஸ்டிக் என்பது முழுக்கமுழுக்க காய்கறிகள் மற்றும் இயற்கை கழிவுகளால் தயாரிக்கப்படுவதால் இதனை குழந்தைகளோ அல்லது விலங்குகளோ உட்கொண்டு விட்டாலும் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

* நிலத்திலேயே விட்டுவிட்டாலும் 2 அல்லது 3 மாதங்களில் மக்கி மண்ணுக்கு சிறந்த உரமாக மாறி பயன் அளிக்கும் குணம் கொண்டது பயோ பிளாஸ்டிக்.

*இதனை எரித்தாலும் எந்தவித தீய மாசும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்துவதில்லை. சாதாரண காகிதம் பேப்பர் போன்று எரிந்து சாம்பலாகி விடுகிறது.

* சாதாரண பிளாஸ்டிக் பையை விட விலை சற்று அதிகமென்றாலும் துணிப்பை மற்றும் இதர பைகளை விட இது விலை குறைவாகவே இருக்கும்.

* பாலித்தீன் பைகளால் வரும் நரம்பு தளர்ச்சி, நோய் எதிர்ப்பை குறைத்தல், மூச்சுக் குழாய் பாதிப்பு, சிறுநீரக செயல் குறைபாடு மற்றும் புற்றுநோய் போன்ற அபாயங்களிலிருந்து நம்மை காக்கிறது.

நாளைய சந்ததிகளுக்கு ஏதாவது நல்லது புரிய வேண்டும் என்றால் நீர், நிலம், காற்று போன்றவற்றை சுத்தமாக வைத்திருப்பதுடன், அவற்றை அடுத்த தலைமுறைக்கு நல்ல முறையில் விட்டுச் செல்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை என்பதை உணர வேண்டும்!

- எம். வசந்தி