டியர் டாக்டர்



*ரவுண்ட்ஸ் அப் பகுதியில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பற்றி, துல்லியமாக பல விஷயங்களை அறிய வைத்தது வியப்பூட்டியது. இரண்டு நிருபர்களின் உழைப்புக்கும் ஒரு சல்யூட்! பலரும் அறியாத உலர் திராட்சையின் உள்ள மருத்துவ குணங்கள் பயனளிப்பதாய் இருந்தது. மெடிக்கல் ஷாப்பிங்கிலும் முதியோர்களுக்கு உதவும் உபகரணங்கள் இருப்பது பெருமையாக இருந்தது. ரசாயன மீன் பற்றிய தகவல் நல்ல ஒரு விழிப்புணர்ச்சி. ஒ.ஆர்.எஸ். தயாரிப்பும் அதன் மகத்துவமும் வியப்பூட்டின.
- சிம்மவாஹினி, வியாசர் காலனி.  

*‘அடிப்படையான உடற்பயிற்சிகள்’ (கவர் ஸ்டோரி) தலைப்பில், கூறப்பட்டிருந்த எளிய உடற்பயிற்சிக்கான விளக்கங்களைப் படித்தபோது, கட்டுகோப்பான உடல் அமைப்பை பெற இனி மெனக்கெட வேண்டியது இல்லை எனத் தோன்றியது. புதுவகையான புற்றுநோயோ என்று பயந்த மக்களுக்கு ‘மெட்டாஸ்டாடிக்’ கேன்சர் பற்றி புற்றுநோய் நிபுணர் பிரசாந்த் கணேஷ் கூறிய தகவல்கள் அனைத்தும் பயனுள்ளவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சோனாலி பிந்த்ரே குணமடைய வாழ்த்தும் பிரார்த்தனையும்!
- ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை.

*‘இயற்கையின் அதிசயம் பகுதியில் விதைகள் என்பவை வேண்டாதவை அல்ல என்ற கட்டுரையைப் படித்ததும் மகிழ்ச்சி
ஏற்பட்டது. சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம் குறிப்பிட்டு இருந்த கழற்சிக்காய் விதை, பூனைக்காலி விதை, தோற்றான் விதை போன்றவைகள் குறித்து முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன். இனி விதைகளை ஒதுக்க மாட்டோம்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.      

*‘ஃபிட்னஸ் ஸ்பெஷல்’ இதழில் ‘உடலினை உறுதிசெய், ‘அடிப்படை உடற்பயிற்சிகள்’ ‘One Minute Workout’ என அசத்திவிட்டீர்கள். சோம்பி இருப்பவர்களையும் ‘Workout’ செய்ய ஓட வைப்பதாக இருந்தது சிறப்பு தொகுப்பு. செய்திகளுக்கு இணையாக படங்களும் இடம்பெறுவது நமது குங்குமம் டாக்டர் இதழுக்கு மேலும் மெருகு சேர்க்கிறது.
- கிருஷ்ணன், தாம்பரம்.

*‘மருத்துவ உலகில் எந்த சிகிச்சையும் எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பயன் அளிக்காது’ என அழகே என் ஆரோக்கியமே தொடரில் சரும நல மருத்துவர் கூறியது நல்ல விழிப்புணர்வை தந்தது. உடல் எடை நிபுணர் திவ்யாவின் அறிவுரை ‘ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியம்’ என்று நம்பியிருந்தவர்களை எச்சரிப்பதாய் இருந்தது. குண்டாக இருப்பவர்களுக்கு முக்கியமாக ஆறுதலாகவும் இருந்தது.
- வளர்மதி, திருச்சி.