ஆட்சியாளர்கள் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்!



Centre Spread Special

டிரம்ப்பின் மெடிக்கல் ரிப்போர்ட் சீக்ரட்


‘70 வயதில் இவருக்கு அரசியல் தேவையா’ என்ற விமர்சனத்திலிருந்து, தொடர்ந்துகொண்டே இருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள், வட கொரியாவுடனான யுத்தத்துக்கான வைப்ரேஷன் மோட், ‘அவர் மனநிலை சரியில்லாதவர்’ என்று சர்ச்சைகளுக்கும், பிரச்னைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாதவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.அவரிடம் பாராட்டுவதற்கு எந்த அம்சமுமே இல்லையா என்று கேட்பவர்களுக்குப் பதிலாக, சமீபத்தில் அவரது மருத்துவ அறிக்கைகள் வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பெரும்பாலான பிரபலங்கள் தங்களது உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால், டிரம்ப்பின் கொள்கை இதில் தலைகீழானது. அவரது உணவுப்பழக்கத்தைக் கேட்டால் பலருக்கும் தலை சுற்றும். மூன்று வேளையும் அசைவ உணவுகள், பர்கர்கள், கணக்கு வழக்கில்லாத முட்டைகள், ஒருநாளைக்கு 20 குளிர்பானங்கள் என்று அவரது உணவுப்பழக்கமும் அவரைப் போலவே அதிரடியானது.

இவையெல்லாமே ஆரோக்கியக் கேடானது என்று அவரது மருத்துவர்கள் எத்தனை சொல்லியும் டிரம்ப் தன்னுடைய டயட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை. மற்றவர்களைப் போல உடற்பயிற்சியிலும் அவருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. இதனால், ஒபாமாவோடு ஒப்பிடும்போது டிரம்ப் ஆரோக்கியக் குறைவானவராகவே இருப்பார் என்று பலரும் நினைத்தார்கள். அதே சந்தேகத்தோடுதான் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதில் வெளியான தகவலின்படிதான் ‘மிகவும் ஆரோக்கியமான அமெரிக்க அதிபர்’ என்று மருத்துவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். காக்னிட்டிவ் டெஸ்ட் என்ற அறிவுத்திறன் தொடர்பான பரிசோதனையிலும் 30 புள்ளிகள் பெற்றிருக்கிறார்.முறையற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவை இருந்தும் டிரம்ப் ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியம் என்ன?

பரிசோதனைகள் மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான ஜாக்ஸன், இதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.‘‘டிரம்பின் கொலஸ்ட்ரால் அளவு 220. இதில் நல்ல கொலஸ்டிரால் 61, டிரைகிளிசரைடு 61 மட்டுமே. ஃபாஸ்ட்டிங் சுகர் 99. இதயத்தில் அடைப்புகள் இல்லை. சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை நன்றாக இயங்குகிறது. அனைத்து வகை புற்றுநோய் எண்களும் நெகடிவ்.

கொலஸ்ட்ரால் 20 பாய்ன்ட் அதிகமாக இருந்தாலும் டிரம்புக்கு மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும் இல்லை என்பது பெரிய ப்ளஸ் பாய்ன்ட். அவர் உண்கிற பர்கர்களில் ரீஃபைண்ட் ஆயில் இல்லை. இவற்றுடன் அவரது மரபணுவும் மிக முக்கிய காரணம். டிரம்பின் தாயார் 88 வயது வரையிலும், தந்தை 93 வயது வரையிலும் வாழ்ந்திருக்கிறார்கள்.

கார்பனேட்டட் குளிர்பானங்களையும், மில்க் ஷேக் போன்ற இனிப்புகளையும் அவர் கைவிட்டு உணவுப்பழக்கத்தை முறைப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருப்பார். உடற்பயிற்சி பற்றிய ஆர்வமும் அவரிடம் உருவாவது நல்லது’’ என்று கூறியிருக்கிறார்.ஆட்சியாளர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக இருப்பதைப் போலவே ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பது அவசியம் என்பதையே உணர்த்தியிருக்கிறது டிரம்பின் மெடிக்கல் சீக்ரட்!

- ஜி.ஸ்ரீவித்யா