கடல் தியானம்



ரிலாக்ஸ்

இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றாலே உடலும், மனமும் புத்துணர்வு அடைவதை உணர்ந்திருப்போம். இவற்றில் கடற்கரையில் நேரம் செலவழிப்பது மூளையில் அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

‘இயற்கையிலேயே தண்ணீரில் இருக்கும் நேர்மறை அயனிகள் மனச்சோர்வை போக்கும் ஆற்றல் கொண்டவை. கடற்கரை காற்றில் கலந்துவரும் கடல் உயிரினங்களின் நறுமணம் மனதை அமைதிப்படுத்தும்.

கடலில் இறங்கி நீந்தும்போதோ அல்லது காலை மட்டும் அலைகள் மோதும் இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்தாலே மனம் சாந்தமடைவதை உணர முடியும். கடற்கரையில் கிடைக்கும் தியானத்துக்கு நிகரான இந்த அமைதி, மனதி–்ன் அமைதியின்மையைப் போக்கி கவனத்தை ஒருமுகப்படுத்தும்.

கடற்கரையில் பரவும் வாசனை மற்றும் அலைகள் எழுப்பும் ஒலிகள் ஆகியவை ஹிப்னாடிஸ வடிவில் ஒருவரின் மூளையினுள் வினைபுரியக் கூடியவை. இதன்மூலம் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு செவிசாய்க்கும் உங்கள் மூளை மகிழ்ச்சியையும், நிதானத்தையும், மறு ஆற்றலையும் பெறுகிறது’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

‘எனவே அதிகரிக்கும் ஆபீஸ் டென்ஷன், வீட்டுப் பிரச்னை இதுபோன்ற சூழல்களில் எப்போதெல்லாம் மன அழுத்தத்தை உணர்கிறீர்களோ உடனே கடற்கரைக்குச் சென்று ஒரு மணிநேரம் கண்களை மூடி, அலைகளின் ஒலியையும், கடற்கரை மண்ணிலிருந்து எழும் நறுமணத்தையும் அப்படியே உணர ஆரம்பித்தால், எல்லாம் பறந்துவிடும். நேரம் கிடைக்கும்போது மட்டுமல்ல, கடற்கரை செல்வதற்கான நேரத்தையும் ஒதுக்குங்கள். கடற்கரையில் செலவழிக்கும் இந்த நேரம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும்’ என்றும் பரிந்துரைக்கிறார்கள்.

- இந்துமதி