மக்களுக்கு எதிரானதா மருத்துவ ஆணையம்?!



சர்ச்சை

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (Medical Council of India-MCI) பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது. இது தொடர்பான மசோதாவை 2017 டிசம்பர் 29 அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் எதிரானதா தேசிய மருத்துவ ஆணையம்?!

 சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்...

 ‘‘இந்திய மருத்துவ கவுன்சில் 1934-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1956-ல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி இது சட்டரீதியான, தன்னாட்சி அதிகாரமுடைய அமைப்பாக மாறியது. மருத்துவக் கல்விக்கான தரத்தை நிர்ணயித்து நாடு முழுவதும் சீரான கல்வித் தரத்தைப் பேணுவது, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மருத்துவப் படிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்குவது போன்றவை இதன் முக்கிய பணிகள்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 120 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவர்களாவும், இதில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், தற்போது மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் ஆணையத்தில் மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 20 பேரை மத்திய அரசே நியமிக்கிறது.

மத்திய அரசு நியமனம் செய்யும் உறுப்பினர்கள் மருத்துவர்களாக இருக்க வேண்டியதில்லை. மாநிலங்கள் சார்பாக தேர்வு செய்யப்படும் 5 உறுப்பினர்கள் மட்டுமே மருத்துவர்களாக இருப்பார்கள். இதுமட்டுமல்ல ஆணையத்தின் தலைவரை நீக்குகிற அதிகாரமும் மத்திய
அரசிடம் இருக்கும் என்கிறது புதிய மசோதா.

இந்த ஆணையத்தில் மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. அதோடு அதிகாரமற்ற நிலையில் வெறும் ஆலோசனைக் குழுவில் மட்டுமே மாநிலப் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் இருப்பார்கள். அவர்கள் பதவிக்காலமும் 2 ஆண்டுகள்தான். இந்த ஆணையம் தொடர்பான கொள்கைகளில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும். மாநில அரசுகள் இந்த மருத்துவ ஆணையத்தின் விதிகளை அமல்படுத்தியே தீர வேண்டும் என்றெல்லாம் இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இது மருத்துவ சேவையிலும் மருத்துவக் கல்வியிலும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகவும் இருப்பதோடு, யதேச்சதிகாரத்துக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுப்பதாக அமையும்.

மருத்துவ நெறிமுறைகள் காணாமல் போனதற்கு, இந்திய மருத்துவ கவுன்சிலைக் குறை சொல்கிறது மத்திய அரசு. ஆனால், மருத்துவக் கல்வியும், மருத்துவமும் தனியார்மயமானதும், வணிகமயமானதும்தான்அதற்கு முக்கியக் காரணம். மேலும் இதை கட்டுப்படுத்தாத மத்திய அரசு, பெருநிறுவனங்களின் கரங்களில் மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையும் ஒப்படைக்கும் வகையில் தேசிய நலக் கொள்கையை கொண்டுவந்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்தவே இந்தப் புதிய மருத்துவ ஆணையம் என்கிறது மத்திய அரசு. இதற்கெனத் தனியாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. அதற்குப் போதிய நிதியை அரசு ஒதுக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சிக்கான நிதியை இந்த அரசு 25% குறைத்துவிட்டது என்பதே உண்மைநிலை.

‘இந்திய மருத்துவ கவுன்சில் ஊழல் நிறைந்த அமைப்பாக மாறிவிட்டது, மருத்துவக் கல்லூரிகளைப் போதிய அளவுக்கு உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை, மருத்துவக் கல்வி வியாபாரமாவதைத் தடுக்கவில்லை’ என்பது போன்ற காரணங்களாலும், டாக்டர் ரஞ்சித் ராய் சௌத்ரி தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதாலும், இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழித்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தைக் கொண்டுவருவதாக மத்திய அரசு காரணம் சொல்கிறது.

ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றுதான் ரஞ்சித் ராய் பரிந்துரைத்துள்ளாரே தவிர, இந்திய மருத்துவ கவுன்சிலையே ஒழிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல்படியே தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க முடியும் என்பதே தற்போதைய நடைமுறையாக இருக்கிறது.

ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் விருப்பப்படி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக்கொள்ள வழி வகுக்கிறது இந்த புதிய மசோதா. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களிலுள்ள 100% இடங்களின் கட்டணங்களையும் மாநில அரசுகளின் கட்டண நிர்ணயக் குழுக்களே நிர்ணயித்து வருகின்றன.

ஆனால், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள 40%-க்கும் குறைவான மருத்துவ இடங்களுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்கிறது புதிய மசோதா. இது மருத்துவக் கல்வியின் தரத்தையே
கேள்விக்குறியாக்கிவிடும்.

புதிய மசோதாவின்படி மருத்துவ மாணவர்கள் உள்ளுறை மருத்துவர்களாகப் பயிற்சியை முடித்த பிறகு தேசிய உரிமத் தேர்வு (National Licentiate Examination) எழுத வேண்டும். மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் EXIT தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற்றால்தான் மருத்துவராகப் பதிவுசெய்து பணிசெய்ய முடியும்.

இந்த EXIT தேர்வே முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் இருக்கும். அது மட்டுமல்ல... இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை இந்த ஆணையமே நடத்தும் என்கிறது புதிய மசோதா.

மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதாக சொல்லி, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கும் விதத்தில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆணையம் மருத்துவக் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், திறமையான மருத்துவர்களைப் போதிய அளவு உருவாக்கவும் உதவும் என்கிற மத்திய அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல.

மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டுமென்றால், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கி, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் போதிய அளவில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதே இதுபோன்ற பிரச்னைகளுக்கு சரியான தீர்வாக அமையும்’’ என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.

இந்த மசோதாவில் வரவேற்கத்தகுந்த எந்தவொரு நல்ல திட்டமும் இல்லையா என்று பொதுமருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம்...

‘‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பது போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவ தகவல்கள் நம்மிடையே உள்ளது. இதுபோன்ற சரியான பாரம்பரிய மருத்துவ முறைகளை அங்கீகரிப்பது, அனைவருக்கும் எளிதாக மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதற்கு உதவியாக இருக்கும்.

சித்தா, ஆயுர்வேதம், யோகா, யுனானி, ஓமியோபதி போன்ற மாற்று மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்களை பிரிட்ஜ் கோர்ஸ் என்கிற 6 மாதகால படிப்பு மூலம் கிராமப்புறங்களில் நவீன மருத்துவம் செய்ய சட்டரீதியாக அங்கீகரிப்பது வரவேற்கத்தக்கதுதான்.

அரசு நியமிக்கும் உறுப்பினர்களில் மருத்துவர்கள் அல்லாத ஆனால் மருத்துவ சேவையில் ஈடுபாடுடையவர்களை சேர்த்துக் கொள்வதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இதில் நோயாளி தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கு சிகிச்சை வழங்குபவர்கள் மற்றும் அந்த சிகிச்சைக்குரிய வசதிகளை செய்வதற்கான திட்டமிடலில் இருப்பவர்கள் என்று அனைத்து தரப்பினரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவது, மருத்துவ பிரச்னைகளைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இவற்றை நாம் சில உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். 

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு மருத்துவமனையில் மருத்துவத்தை மக்களுக்கான சேவையாகக் கருதி, முழு ஈடுபாட்டோடு பணிபுரிந்து வந்த ஒரு செவிலியர் மூலமாக அந்தப் பகுதியில் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் தடுக்கப்பட்டது. அந்த தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்புமிக்க பணியால் சுகாதாரப் பிரச்னைகளின் அளவும் கணிசமாக குறைந்திருந்தது. நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அந்த செவிலியரின் பணியை
மனமுவந்து பாராட்டியிருந்தார்.

இப்படி மருத்துவத்தை வியாபாரமாக பார்க்காமல் சேவையாகக் கருதும் ஒரு செவிலியரால் நல்ல மருத்துவ சிகிச்சை வழங்க முடியும் என்கிறபோது, இதேபோன்ற எண்ணமுடைய இந்திய மருத்துவ முறைகளில் பயின்ற மருத்துவர்களும் நல்லதொரு மருத்துவ சேவையை வழங்க இந்த புதிய மசோதா ஒரு வாய்ப்பாக இருக்கும்.

மருத்துவ சேவை சரியாக கிடைக்காத மழைவாழ் மக்கள் வாழ்கிற பகுதியில், மக்களின் அத்தியாவசிய தேவையான வீடு கட்டுவது போன்ற அத்தியாவசிய உதவிகளை செய்த பெண் ஒருவருக்கு, அவருடைய சேவை எண்ணத்தின் அடிப்படையில் இங்கிலாந்தில் மருத்துவம் பயில வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வெனிசுலா நாட்டில் யார் வேண்டுமானாலும் மருத்துவத்துறையில் பணிக்கு சேரலாம். ஆனால், அதற்கு அவர்கள் கியூபா
நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களின் பயிற்சிளைப் பெற்று தேர்ச்சிபெற வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.

இதுபோன்ற நாடுகளில் மருத்துவத்தை சேவையாக செய்யும் எண்ணத்தோடு பணிபுரிய விரும்புகிறவர்கள் யாராக இருந்தாலும், அந்த நாடுகளின் அரசு விதிமுறைப்படி பயிற்சி பெற்றபின்பு அப்பணியை செய்யும் சூழல் உள்ளது. போபாலில் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு மீத்தைல் ஐசோ சயனேட் என்கிற வாயுவே முக்கிய காரணம்.

அந்நேரத்தில் தயோ சல்பேட் என்கிற மாற்று மருந்தைக் கொடுத்து பலருடைய பிரச்னைகள் கட்டுப்படுத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சை விவரங்களை பதிவு செய்யும் கேஷ் சீட்டில் இதை மருத்துவர்கள் பதிவு செய்திருந்தது குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) 20 வருடம் கழித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் தயோசல்பேட்டை முறையாக பரிந்துரை செய்திருந்தால் பலருடைய உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று தெரிவித்திருந்தது.

சரியான நேரத்தில் அரசு அனுமதி பெற்ற ஏதாவதொரு மருத்துவமுறையில் சிகிச்சையளித்து உயிரை காப்பாற்றுவது அவசியம் என்பதே இந்த நிகழ்வின் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  சித்த மருத்துவர்கள் நவீன முறைப்படி ஊசிபோட்டால் தவறு என்கிறார்கள். ஆனால், மஞ்சள் காமாலைக்கு LIV 52 என்கிற சித்தமருத்துவ முறைப்படி தயார் செய்யப்பட்ட மருந்தை நவீன மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் அது தவறல்ல என்கிற நிலை தற்போது உள்ளது.

நோய் குணமாக வேண்டும் என்கிற நிலையில், அரசு விதிகளின்படி உரிய பயிற்சிபெற்ற மருத்துவர்களிடம் நோயாளி விரும்பும் வகையிலான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கு தற்போதைய புதிய மசோதா உதவியாக இருக்கும். மேலும் மருத்துவ சிகிச்சை எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதற்கும் இது உதவியாய் இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் புகழேந்தி.மருத்துவ கவுன்சிலோ, மருத்துவ ஆணையமோ... மக்களுக்கு நல்லது நடந்தால் சரி!

- க.கதிரவன்