மாற்றம் மனதில் இருந்து தொடங்குகிறது!



Weight loss

உடல் எடை குறைய வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவோம். அவசர அவசரமாக ஏதாவது ஒரு ஜிம்மில் சேர்வது அல்லது நண்பர் சொல்லும் உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பது போன்ற விஷயங்களையும் முயற்சிப்போம். ‘எல்லாம் சரிதான்... ஆனால், அவை மட்டுமே பலன் தராது. Mindfulness body transformation வழியையும் கையாள வேண்டும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உளவியல் மருத்துவர், பிரபல எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட நரம்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்ஸன் மற்றும் பத்திரிகையாளரான கோல்மன் இருவராலும் மைண்ட்ஃபுல்னெஸ் டெக்னிக் தற்சமயம் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

தியானத்தின் பெருமை, எண்ணங்களின் சக்தி என்று பலரும் பலவிதத்தில் பேசிய விஷயங்களை சற்று மாற்றி யோசித்து இவர்கள் இருவரும் எழுதிய Altered Traits என்ற புத்தகம் தற்போது விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. பல பிரபலங்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதோடு மற்றவருக்குப் பரிந்துரைக்கவும் செய்கிறார்கள்.
அப்படி என்ன Altered Traits-ல் ஸ்பெஷல்?

அறிவியல்ரீதியாக தியானம் எப்படி உங்கள் உடல், மனம், மூளை, உடல் மூன்றிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், தியானம் அந்த நேரத்துக்கானது மட்டுமல்ல ஆழ்ந்த, நீடித்த மாற்றத்தை நம்மில் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்ற வாதத்தையுமே இதில் முக்கிய கருத்தாக இருவரும் முன் வைக்கின்றனர்.

நம் உடலமைப்பில் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமெனில், போதிய அவகாசத்தை உடலுக்கு கொடுக்க வேண்டும். அவசரப்படக் கூடாது. நிரந்தரமான வாழ்வியல் மாற்றத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமே அதை சாத்தியமாக்கலாம் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

வெறுமனே ஆலோசனையாக இல்லாமல் 10 வருடமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலே இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் அதை உங்கள் மனதுக்குச் சொல்லுங்கள். அதை தியானம் மூலம் அடைந்துவிடலாம் என்பதே இதன் சாராம்சம்.முயற்சி செய்துதான் பாருங்களேன்!

- இந்துமதி