Anger Easy Management



கோபத்தின் மூலம் மற்றவர்களை நீங்கள் தண்டிக்கவில்லை. கோபத்தின் மூலம் உங்களையே நீங்கள் தண்டித்துக் கொள்கிறீர்கள்’ என்கிறார் புத்தர். அப்படி நம் ஆரோக்கியத்துக்கு நாமே உலை வைத்துக் கொள்ளும் கோபத்தைக் கட்டுப்படுத்த உளவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் குறிப்புகள் இவை. கோபம் இனி உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ள இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள்...

*உடற்பயிற்சி உதவும்ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். மிதமான உடற்பயிற்சியாக இருந்தாலே போதும். வாரத்தில் 3 முதல் 5 முறை இதுபோல் முயற்சிக்கலாம்.

*ஆழமாக சுவாசிக்கத் தெரியுமா?

!நாம் அனைவருமே சுவாசிக்கிறோம். ஆனால், முறையாக சுவாசிப்பதில்லை. ஆழமாக, நிறுத்தி, நிதானமாக சுவாசிப்பது மன அழுத்தத்திலிருந்து நல்ல நிவாரணத்தைத் தரும். கண்களை மூடிக்கொண்டு இன்னும் சுவாசிப்பதும் சிறப்பான பலனைத் தரும்.

*ஹெல்த்தி டயட்

இது ஆச்சரியம். ஆனால், உண்மை செய்திதான். சரியான உணவுமுறை கூட உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த உதவி செய்யும். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரதம் போன்றவற்றை உங்கள் வழக்கமான உணவுமுறையில் எப்போதும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*வேகம்... சோகம்...

வேகம்... வேகம்... என்று எப்போதும் பரபரப்பாக இருப்பதை மாற்றிக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். கனவுகள் பெரிதாக இருப்பதில் தவறு இல்லை. அதற்காக, திட்டமிடல் இல்லாமல் பெரிய வேலையை எடுத்து வைத்துக் கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டிய அவசியமும் இல்லை. எத்தனை பெரிய வேலையையும் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு செய்தால் எளிதாக முடித்துவிடலாம் என்பதை உணருங்கள். இந்த நிதானமான போக்கின் மூலம் பதற்றம் தணியும்.

*ஓர் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்

உங்களைச் சுற்றி நிலைமை கடினமாக இருப்பதாக உணர்ந்தால், அதிலிருந்து வெளியேற சின்ன இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலைகளுக்குத் தற்காலிக விடுமுறை கொடுங்கள். உங்கள் நேரத்தையும், உங்கள் முன்னிருக்கும் வேலைகளுக்கேற்றவாறு சரியாக திட்டமிட்டு செயலாற்றுவதும் அவசியம்.

*பொழுதுபோக்குகளும் அவசியமே!

ஆமாம்... பொழுதுபோக்குக்கும் உங்கள் நாளில் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களைச் செய்ய அந்த நிமிடங்களைப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

*பிரச்னைகளை மறைக்காதீர்கள்

கஷ்டங்கள் ஒன்றும் பொக்கிஷங்கள் அல்ல. எனவே, அவற்றை மனதுக்குள்ளேயே போட்டு பூட்டி வைக்காதீர்கள். எனவே, நம்பிக்கையான நண்பர்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும் மனதை வாட்டும் விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இதன்மூலம் அந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான புதிய கோணமும், பார்வையும் கிடைக்கும்.

உங்களுக்கு உதவி செய்வதற்கும் ஒருவரை இதன்மூலம் தயார் செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மனதுக்குள்ளேயே பிரச்னைகளை வைத்துக் கொண்டு எல்லோர் மீதும் எரிந்துவிழுவதைக் காட்டிலும் வெளிப்படுத்திவிடுவது சிறந்த வழி.

*டேக் இட் ஈஸி பாலிஸி

உங்களால் மாற்ற முடிகிற விஷயங்களுக்காக முட்டி மோதுவது நியாயமான செயல்தான். ஆனால், உங்களால் மாற்ற முடியாது என்கிற நிலை தெரிகிறபோது, தேவை இல்லாமல் மன அழுத்தங்களுக்கு ஆளாகாதீர்கள்.  மெலிதாகப் புன்னகைத்துவிட்டு, அந்தப் பிரச்னையை கடந்து செல்லுங்கள்... ஆன்மிகவாதிகள் இனி கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுதலையடைவது போல. 

*எதிர்மறையான விஷயங்களைக் கைவிடுங்கள்

மன அழுத்தத்துக்கு மிகப் பெரிய காரணமே சரி வராதவற்றைத் தொடர்ந்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பதுதான். உங்கள் வாழ்க்கையை எந்த விஷயமெல்லாம் அழுத்தத்துக்குள்ளாக்குகிறது என்பதைக் கணக்கெடுங்கள். அவற்றைக் கைவிடுங்கள்.

- பாரதி