பலவானே புத்திமான்!



Centre Spread Special

‘ஆரோக்கியமான உடல் தகுதி கொண்ட குழந்தைகள் கல்வித்திறனிலும் சிறந்து விளங்குகிறார்கள்’ என்று ஸ்பெயினிலுள்ள University of Grenada-வின் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறியிருக்கிறது.

இந்த ஆய்வுக்காக 8 முதல் 11 வயது வரையுள்ள 101 குழந்தைகளின் கல்வித்திறனை ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டனர். நல்ல உடல் உறுதி கொண்டவர்கள் மற்றும் உடல் உறுதி மோசமானவர்கள் என இருபிரிவுகளாக இவர்கள் பிரிக்கப்பட்டு, அவர்களின் அறிவுத்திறனை பரிசோதிக்கும் விதத்திலான கேள்விகள் கேட்கப்பட்டது.

ஆய்வின் முடிவில் உடலுறுதி குறைவாக இருக்கும் குழந்தைகள் அறிவுத்திறனிலும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதோடு, அது அவர்களின் கல்வித்திறனையும் பெரிதும் பாதிப்பது உறுதி செய்யப்பட்டது.

குழந்தைகளின் உடல்திறன் சார்ந்த வேறுபாடுகள், முக்கிய மூளை கட்டமைப்பு வேறுபாடுகளோடு நேரடி தொடர்புடையதாகவும், அவர்களின் கல்வி செயல்திறனை பிரதிபலிப்பதாகவும் இருப்பதே இதன் காரணம் என்று அதற்கான விளக்கத்தையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

‘ஆதலால், குழந்தைகளை வெறுமனே படிக்கச் சொல்லி மட்டுமே கட்டாயப்படுத்தாமல் அவர்களின் உடல் உறுதிக்கான பயிற்சிகளையும், விளையாட்டுகளையும் மேற்கொள்ள வைக்க வேண்டும். அப்போதுதான் மூளையின் இயக்க அதிகரிப்பு, கற்றல் திறன், வாசித்தல் மற்றும் இயக்க செயல்பாடுகளும் மேம்படும்’ என்று Neuro Image இதழில் இந்த ஆய்வுக்கட்டுரை குறிப்பிட்டிருக்கிறது.

- கௌதம்