முதியோருக்கு வரும் பார்வைக் கோளாறுகள்!



விழியே கதை எழுது

வயதானால் பார்வை தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் வருவது இயல்புதான். அவற்றில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்னை Age related macular degeneration. சுருக்கமாக ஏ.எம்.டி. அது என்ன ஏ.எம்.டி? என்ன செய்ய வேண்டும்?

ஏஜ் ரிலேட்டட் மேகுலர் டீஜெனரேஷன் பொதுவாக வயோதிகத்தில் ஏற்படுகிற பிரச்னை. வயதானால் தலைமுடி நரைக்கிற மாதிரி விழித்திரையின் மத்தியப் பகுதியில் ஏற்படுகிற பாதிப்பின் விளைவால் பார்வை பறிபோகிற கோளாறு இது.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் 60 வயதுக்கு மேலானவர்களுக்கு இந்தப் பிரச்னை மிக அதிகமாக வருகிறது. இப்போது இந்தியாவிலும் ஏ.எம்.டியால் பாதிக்கப்படுகிறவர்கள் அதிகரித்து வருகிறார்கள். முதுமையே சீக்கிரம் வந்துவிடுவதால் ஏ.எம்.டியும் சீக்கிரமே வந்து விடுகிறது.

ஏ.எம்.டியின் தன்மை என்ன?

இந்தப் பிரச்னை வலியைத் தராது. இதில் Dry type, Wet type என 2 வகைகள் உள்ளன. புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிகக் கொழுப்புள்ள உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்றவற்றாலும் கூட ஏ.எம்.டிஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகலாம்.இந்த இரண்டு வகைகளுக்கும் என்று இன்னும் கொஞ்சம் நுட்பமான வித்தியாசங்களும், தன்மைகளும் உண்டு.

ட்ரை டைப்பில் முடிச்சு முடிச்சாக விழித்திரையில் சில படிவுகள் வரும். இதன் ஆரம்ப அறிகுறியாக பார்வை மங்கலாகும். அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் மட்டுமே படிக்க முடிகிற நிலையும், எதிரில் உள்ள நபர்களை மிக நெருக்கத்தில் பார்த்தால் மட்டுமே அடையாளம் காண்கிற நிலையும் ஏற்படும்.

Lipofuscin என்கிற புரதம் சேர்வதால் இந்த முடிச்சுகள் வரும். Lipofuscin அதிகரிக்கிறபோது மெட்டமாஃபாக்சியா (Metamorphopsia) என்கிற பிரச்னையும் சேர்ந்து வரும். இதன் பின்விளைவாக நேர்க்கோடுகள் வளைந்து தெரியும். பெரிய எழுத்துகள் குட்டியாகவும், குட்டி எழுத்துகள் பெரியதாகவும் தெரியும். அதாவது, உள்ளது உள்ளபடி தெரியாத குழப்பமான காட்சி தோன்றும்.

இதில் Geographic atrophy என்றொரு பிரச்னையும் உண்டு. இதற்குப் பெயர் ட்ரை ஏ.எம்.டி. இது அமெரிக்காவில் சகஜம். இந்தியாவைப் பொறுத்தவரை வெட் ஏ.எம்.டி பிரச்னைதான் அதிகம் பாதிக்கிறது. வெட் ஏ.எம்.டியில் ஒரு சவ்வு உருவாகி, அதில் ரத்தப்போக்கு, தண்ணீர் சேர்தல் அறிகுறிகள் எல்லாம் இருக்கும்.

இதற்கு சிகிச்சையாக ஃபோட்டோ டைனமிக் தெரபி என்கிற கோல்ட் லேசரில் ஒருவித டையைச் செலுத்தி அந்த சவ்வைச் சுருங்க வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர் ஒரு வாரத்துக்கு  சூரிய வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாது. இப்போதெல்லாம் ஆன்ட்டி வாஸ்குலர் என்டோதீரியல் க்ரோத் ஃபேக்டர் மருந்துகளும் இருக்கின்றன.

இதேபோல எவாஸ்டின், லூசென்டிஸ், ஐலியா என 3 விதமான ஊசிகள் இருக்கின்றன. விழித்திரைக்குள் சென்று ரத்த நாளங்களை மாற்றி ரத்தக் கசிவையும் தண்ணீர் கோர்த்திருப்பதையும் குறைக்கும். இது மிகவும் பாதுகாப்பான சிகிச்சை. இந்தப் பிரச்னை ஒரு கண்ணில் வந்தால் இன்னொரு கண்ணிலும் வர வாய்ப்புண்டு. குட்டிக்குட்டி கட்டம் போட்ட ஆம்ஸ்லர் சார்ட்டிங் என்கிற டெஸ்ட்டை சொல்லித் தருவோம். பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே பார்வையை சரி பார்த்துக் கொள்ளலாம்.

சத்துள்ள உணவுகள், அடர் நிற காய்கறிகள், பொன்னாங்கண்ணிக் கீரை, கேரட், மஞ்சள் குடமிளகாய், வெள்ளரிக்காய், பப்பாளி, பாதாம், வால்நட், குங்குமப்பூ போன்றவை எல்லாம் விழித்திரை ஆரோக்கியத்துக்கான உணவுகள் Lutein, Zeaxanthin என்கிற வைட்டமின்கள் இவற்றின் மூலம் கிடைக்கும்.

சவ்வை வளரவிட்டால் அது கண்ணுக்குள் வெடித்து விட்ரியஸ்ஹெமரேஜ் என்கிற பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு விட்ரக்ட்டமி அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இது கண்ணில் செய்யக்கூடிய மிகப்பெரிய அறுவை சிகிச்சை. இதெல்லாம் செய்தாலும்கூட மெம்ப்ரேன் வெடித்துத் தழும்பானகாரணத்தினால் பார்வை குறைவாகத்தான் இருக்கும்.

அதற்காகக் கவலை வேண்டாம். லோ விஷுவல் எய்ட்ஸ், பூதக்கண்ணாடி உள்ளிட்ட சில பிரத்யேக கருவிகளைக் கொடுத்துப் பார்வையில் முன்னேற்றம் ஏற்படுத்தச் செய்யலாம். இந்தத் தழும்பைத் தவிர்ப்பதற்கும் மருந்துகளும் ஊசிகளும் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

(காண்போம்!)

எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி

விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்