கண்களே உண்மையை சொல்லும்!



ஆராய்ச்சி

‘ஒருவருடைய கண்களைப் பார்த்துப் பேசினாலே உண்மை தெரிந்துவிடும்’ என்று நம்மவர்கள் சொல்வதுண்டு. நெதர்லாந்து விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

Cuddle chemical என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இருவர் பேசிக்கொள்ளும்போது அங்கு மொழியைக்காட்டிலும் கண்களே ஒருவருடைய உள்ளுணர்வுகளை எதிராளிக்கு படம்போட்டு காண்பித்துவிடும். விழிகளில் வெளிப்படும் ‘ஆக்ஸிடோஸின்’ சுரப்பே இதற்குக் காரணம். ஒருவரை நம்பலாமா. கூடாதா என்பதை வெளிப்படுத்தும் இதற்கு Pupil mimicry என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.

‘ஒருவர் பேசும்போது எதிராளியின் விழிகள் விரிவடைந்தால், அவரை அதிகமாக நம்பலாம். அதுவே, அவரின் விழிகள் சுருங்கினால் அவரை சந்தேகப்பட வேண்டும்' என்று டிப்ஸ் கொடுக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன் பின்னணியில் இருப்பது ஆக்ஸிடோஸின் ஹார்மோனே என்கிறார்கள்.

ஆக்ஸிடோஸின்தான் இருவருக்கிடையே அன்பு உருவாகும்போது அதிகமாக சுரக்கும் ஹார்மோன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுவாரஸ்யமான ஆய்வை மேற்கொண்ட லீடென்(Lieden) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், ‘‘உண்மையானவர்களைக் கண்டுகொள்ளும் திறமையை இயற்கை மனிதனுக்கு அளித்துள்ளது.

ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரப்பு நிபந்தனையற்ற நம்பிக்கையையும், அன்பையும் மட்டும் அதிகரிக்கச் செய்வதில்லை. பொய்யானவர்களைக் கண்டுகொள்ளும் விழிப்புணர்வையும் தருகிறது’’ என்று கூறியிருக்கிறார்கள்.

- விஜயகுமார்