வானவில் சிகிச்சை



கலர் தெரபி

‘‘மாற்று மருத்துவத்தில் வானவில்லின் ஏழு வண்ணங்களைக் கொண்டு செய்யப்படும் ‘கலர் தெரபி’ கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். 2,500 வருடங்களுக்கு முன்பே கிரேக்க கணிதவியலாளர் பிதாகரஸ் பல வண்ண பந்துகளைக் கொண்டு நோய்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதன் பிறகு எகிப்து, சீனா மற்றும் இந்தியாவிலும் இந்த கலர் தெரபி பரவியது’’ என்று சொல்லும் அக்குபங்சர் சிகிச்சை நிபுணர் பரிமள செல்வி, ‘கலர் தெரபி’யின் முக்கியத்துவத்தை சுவாரஸ்யமாக விளக்குகிறார்.

‘‘வானவில்லின் ஏழு வண்ணங்களும் மனித உடலின் ஆற்றல் மையங்களான ஏழு சக்கரங்களுடன் தொடர்புடையவை. உடல் இயந்திரம் ஆரோக்கியத்துடன் இயங்க ஏழு சக்கரங்களின் ஆற்றலானது சமநிலைப்படுவது அவசியமாகிறது. உடலின் குறிப்பிட்ட உறுப்பின்ஆற்றல் அதிகரிப்பதாலோ அல்லது குறைவதாலோதான் நோய்கள் ஏற்படுகின்றன.

அப்படி பாதிக்கப்பட்ட சக்கரங்களின் ஆற்றலை அழுத்தப் புள்ளிகளின் மூலம் நிறங்களைக் கொண்டு சமநிலைப்படுத்தும்போது நோய் குணமடைந்துவிடும். இதையே கலர் தெரபி(Color therapy) என்கிறோம். காரணம், ஒவ்வொருவண்ணத்துக்கும் பிரத்யேகமான அலைநீளம் மற்றும் ஆற்றல் இருக்கிறது.

உடலின் ஏழு சக்கரங்களும் வயலட், இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று வானவில்லின் 7 நிறங்களை அதே வரிசையில கொண்டதாக இருக்கிறது. இந்த ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு மருத்துவ குணமும் உண்டு. மேற்சொன்ன நிறங்களை வைத்து உடல் முழுவதும் உள்ள சக்கரங்களின் அடிப்படையில் மசாஜ் செய்து சிகிச்சை அளிக்கலாம். இதேபோல் உடலின் ஒவ்வொரு பகுதியோடு தொடர்புடைய நரம்புகள் உள்ளங்கைகளில் இணைவதால் ரெஃப்ளக்ஸாலஜி முறையிலும் குறிப்பிட்ட புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து சிகிச்சை அளிக்கலாம்.

பாக்டீரியா கிருமிகளில் ஒவ்வொரு கிருமிக்கும் ஒவ்வொரு வண்ணங்கள் இருக்கிறதென்றும், குறிப்பிட்ட கிருமிக்கு எதிர்மறையான வண்ணங்களை பயன்படுத்தும்போது அந்தக் கிருமியை அழிக்க முடியும் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்’’ என்றவரிடம் நிறங்களை எப்படி சிகிச்சைக்குப் பயன்படுத்துவீர்கள் என்று கேட்டோம்...

‘‘கலர் தெரபியில் ஊசியை பயன்படுத்தாமல் அந்தந்த உறுப்புக்கான வண்ணத்தைக் கைகளில் தீட்டுவோம். உதாரணத்துக்கு, சிறுநீரகத்துக்கானது இண்டிகோ கலர் என்றால் அதற்கு எதிரான சிவப்பு வண்ணத்தைக் கைகளில் தீட்டி, சிறுநீரக சம்பந்தப்பட்ட நோயை சரி செய்வோம்.

பெருங்குடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் முகப்பருக்கள் தோன்றும். அப்போது பெருங்குடலுக்கான அழுத்தப்புள்ளியில் குறிப்பிட்ட நிறத்தை ஸ்கெட்ச்சால் தடவுவோம். இதுபோல் ஒவ்வொரு நோய்க்கும் அடிப்படை காரணத்தை கண்டறிந்து அதற்கான மையப்புள்ளிகளில் அதனுடன் தொடர்புடைய வண்ணத்தை தடவி சிகிச்சை அளிக்கலாம்.

குறைந்தபட்சம் 4 மணிநேரம் அந்த வண்ணமானது கையில் இருக்க வேண்டும். சில வண்ணங்களை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. இதுபோல் ஒவ்வொரு வண்ணத்தையும் எவ்வளவு நேரம் உபயோகிக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதால் முறைப்படி பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே கலர் தெரபி சிகிச்சையை செய்ய முடியும்.

வயதானவர்கள், சிறு குழந்தை கள் ஊசி மூலம் தரப்படும் அக்குபங்சர் சிகிச்சையை எடுத்துக்கொள்ள பயப்படுவார்கள். இவர்களுக்கு கலர் தெரபி சிகிச்சை நல்ல மாற்று என்று சொல்லலாம். ஒரு சில தீவிர பிரச்னைகளைத் தவிர்த்து சாதாரண காய்ச்சல், சளி, தலைவலி, வயிற்றுவலி போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்கு கலர் தெரபி சிகிச்சை சிறந்தது. சிறு குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றால் விளையாட்டாக அவர்களின் கைகளில் நீலநிற வண்ணத்தை தீட்டினா்லே காய்ச்சல் சரியாகிவிடும்”என்கிறார்.

- இந்துமதி