குழந்தைகளை மரியாதையுடன் நடத்துங்கள்!



ஓ பாப்பா லாலி

‘‘ஒருவர் தன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென்று நினைக்கிறாரோ, அதேபோல் தானும் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம். அதேபோல் குழந்தைகள் மற்றவர்களிடம் மரியாதையுடன் பழக வேண்டுமென்றால், அந்த குழந்தையை முதலில் நாம் மரியாதையுடன் நடத்த வேண்டியது அவசியம்’’ என்கிறார் மனநல மருத்துவர் அசோகன். குழந்தைகளை மரியாதையோடு நடத்த வேண்டியதற்கான அவசியம் பற்றித் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘நம் குழந்தைதானே என்று அலட்சியமாகவோ, சின்ன வயதுதானே என்ற எண்ணத்திலோ குழந்தைகளை மரியாதைக் குறைவாகவோ  கையாளக் கூடாது. பெரிய மனிதர்களைப் போலவே குழந்தைகளையும் மரியாதையோடு நடத்த வேண்டும். அப்போதுதான்  அவர்களுடைய சுயமதிப்பீடு மற்றவர்கள்மத்தியில் அதிகரிக்கும். அந்த குழந்தை உற்சாகத்தோடும் செயல்பட உறுதுணையாக அமையும்.

இதனால் அந்த குழந்தை மற்றவர்களை மதித்து, மரியாதையுடன் பழக கற்றுக் கொள்வதுடன் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியேறி தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள உதவியாக அமையும். குழந்தைக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள உறவு நிலை சுமூகமாக அமையவும் இது உதவும்.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்கிற புறநானூற்று பாடல் வரிக்கு ஏற்ப குழந்தைகளிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளும் பெற்றோரின் நடவடிக்கைகளே, அவர்களுடைய பிரச்னைகளுக்குப் பெரும்பாலும் காரணமாக அமைகிறது. அது மட்டுமல்ல; ஒரு குழந்தையின் குழந்தைப் பருவ அனுபவங்கள்தான் அந்த குழந்தையின் பிற்கால வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமைகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் நற்பண்புகளை வளர்த்துக்கொள்வது, தன்னம்பிக்கையோடு சுயமாக ஒரு முடிவினை எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வது போன்றவற்றுக்கான சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.நமக்கு ஏற்படும் பிரச்னையை, உண்மையான நண்பனிடம் பகிர்ந்து கொள்ளும்போது நம்மால் மனம்விட்டு பேச முடியும். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் ஓர் நண்பனைப் போல பழக வேண்டும்.

கண்டிக்கிறோம் என்று நினைத்து, அவர்களை சுதந்திரமாக எந்த ஒரு முடிவும் பெற்றோர் எடுக்க விடுவதில்லை. இது தவறு. இந்நிலையை மாற்றி, அவர்களுக்கு ஆரோக்கியமான அணுகுமுறையோடு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் தன்னம்பிக்கையோடும், உற்சாகத்துடனும் செயல்பட முடியும். 

ஒரு புதிய சூழ்நிலையில் அல்லது ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, தனது பெற்றோர் எப்படி முடிவெடுத்தார்கள் என்று யோசித்துப் பார்த்து, அதேபோல் குழந்தைகள் முடிவெடுக்கிறார்கள் என்பதையும் பெற்றோர் மனதில் கொண்டு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்’’ என்கிறார்.

- க.கதிரவன்