சதுரங்க நாயகி கொனேரு ஹம்பி!



சாதனை

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக ரேபிட் செஸ் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 122 வீராங்கனைகள் கலந்துகொண்ட இப்போட்டியில் இந்தியா சார்பில் கொனேரு ஹம்பி பங்கு கொண்டார். பல்வேறு சுற்றுப் போட்டிகளைத் தாண்டி வந்த கொனேரு ஹம்பி, இறுதிப் போட்டியில் சீனாவின் லீ டிங்ஜியை எதிர்கொண்டார். இருவருமே புத்திசாலித்தனமாகக் காய் நகர்த்தலில் ஈடுபட்டதால் ஆட்டம் டிரா ஆனது. வெற்றியைத் தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 2-1 என்ற கணக்கில் வென்று உலக சாம்பியன் பட்டத்தை கொனேரு ஹம்பி தனதாக்கினார்.

பொதுவாகவே சதுரங்கம் என்றாலே டெஸ்ட் கிரிக்கெட்டைப் போன்றது என்பார்கள். நிதானமாக ஆடும் விளையாட்டு ‘கிளாசிக்கல்’ பிரிவு எனப்படும். ஆனால், ‘ரேபிட்’ பிரிவு என்பது விரைவாக ரன் சேர்க்கும் ஒரு நாள் ஆட்டத்தைப் போன்றது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நகர்த்தல்கள் மூலம் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதுதான் ‘ரேபிட்’ பிரிவு. இந்தப் பிரிவில் வெற்றிபெற்று 2017ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் ஆண்களுக்கான பிரிவில் பட்டம் பெற்றார். அவருக்கு அடுத்து பெண்களுக்கான பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த கொனேரு ஹம்பி பட்டம் வென்றுள்ளார்.

32 வயதான ஹம்பி, மகப்பேற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு காலம் ஓய்வில் இருந்தார். ஜார்ஜியாவில் நடந்த ஒலிம்பியாட் செஸ் பந்தயத்தில் காய்களை வேகமாக நகர்த்த முடியாமல் தடுமாறினார். தற்போது ‘ரேபிட்’ சுற்றில் கொனேரு ஹம்பி வெற்றிபெற்றது தனக்குத் தன்னம்பிக்கையைத் தருவதாகக் கூறுகிறார்.

சதுரங்கத்தில் கொனேரு ஹம்பி ‘கிளாசிக்கல்’ வீராங்கனை. தற்போது ‘ரேபிட்’ பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றதோடு, அடுத்த ‘பிளிட்ஸ்’ பிரிவிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். கடந்த 1997-ம் ஆண்டு சிறுமியாக இருந்தபோது சதுரங்கப் பயணத்தைத் தொடங்கிய கொனேரு ஹம்பி, கடந்த 22 ஆண்டுகளில் மேடு பள்ளங்களைக் கடந்து இந்தியாவின் சதுரங்க நாயகியாக வளர்ந்திருக்கிறார். செஸ் விளையாட்டை கண்டுபிடித்த இந்தியாவில் முதல் முறையாகப் பெண்கள் பிரிவிலும் பட்டம் வென்று மகுடம் சூடியிருக்கிறார் கொனேரு ஹம்பி.

- துருவா