அன்று: தனியார் நிறுவன ஊழியர் இன்று: மினியேச்சர் பொம்மை தயாரிப்பு நிறுவன உரிமையாளர்



வெற்றிக்கதை

முன்னேற வேண்டும் என நினைக்கும் மனிதன் தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டுமானால் தான் கொண்டிருந்த கொள்கையில் பெரும் நம்பிக்கையும், துணிச்சலும் கொண்டிருக்க வேண்டும். அதற்கேற்ப தான் கொண்ட முயற்சியில் எத்தனை தடைகள் நேர்ந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து சென்று முன்னேற முற்பட வேண்டும்.

தன்னம்பிக்கையைச் செயலாக்கம் பெறச்செய்து பல தடைகளைக் கடந்து உழைப்பாலும், தனித்திறமையாலும் முன்னேறியவரைப் பற்றிப் பார்ப்போம். தனது கலைத் திறமையால் உங்கள் அன்பானவர்களுக்கு அவர்களையே நீங்கள் பரிசளிக்கும் வகையில் அவர்களை தன் கைவேலைப்பாடுகளால் ஒரு சிற்பமாக உருவாக்கிக் கொடுக்கும் மை கியூட் மினி (My Cute Mini) என்ற ஒரு கலைக்கூடத்தை ஆரம்பித்து இன்று உலக அளவில் தொழில் செய்யும் ஒரு நிறுவனமாக விரிவுபடுத்தியுள்ளார் ஸ்ரீ ஹரி சரண். அவரின் வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘தொழிலில் மிக முக்கியமான காலகட்டம் எது தெரியுமா? வேலையை விடுத்து, சொந்தத் தொழில் தொடங்கி நிலைபெறச் செய்து, இன்னொருவரை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளும் அளவிற்கு வளர்வது வரையிலான காலகட்டம்தான். இந்தக் காலகட்டத்தைக் கடந்து விட்டால், பாதித் தொலைவு தாண்டியது மாதிரிதான்.

சென்னை போரூர்தான் நான் பிறந்து வளர்ந்த இடம். சிறு வயதிலேயே என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு கலைத்திறமை இருந்திருக்கிறது. அதனால், படம் வரைவது, சிற்பம் வடிப்பது என ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டேயிருப்பேன். விநாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் கடைகளில் விற்கும் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் வாங்கிவந்தால், நான் மட்டும் எங்கள் வீட்டிற்கு களிமண்ணை எடுத்துவந்து விநாயகரை அழகாகச் செய்துவிடுவேன். பள்ளி படிக்கும் காலந்தொட்டு இக்கலையைச் சிறு சிறு பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொண்டே வந்தேன்.

இன்றைய காலகட்டத்தில் உலகமயமாக்கல் மற்றும் நாளுக்குநாள் வளர்ந்துவரும் தொழில்நுட்பம் போன்றவற்றால் கம்ப்யூட்டர் கல்வி கற்றால்தான் ஒரு நல்ல வேலைக்குச் செல்ல முடியும் என பரவலாக நினைக்கும் சூழல் காணப்படுகிறது. அதனால், நானும் கணினி எஞ்சினியரிங் படித்தேன். படித்துக்கொண்டிருக்கும் காலத்திலும் எனது சிற்பக்கலை பணியை விடவில்லை. அதற்கடுத்து ஒரு மிகப்பெரிய பன்னாட்டுத் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இரண்டரை ஆண்டுகள் வேலை செய்தேன். அவ்வேலையின்போதும் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலைப் பணியைச் செய்துகொண்டே வந்தேன். காரணம், நாம் என்னவாக வேண்டும் என நினைக்கிறோமோ அதுதான் நமக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்’’ என்று தத்துவார்த்தமாகப் பேசிய  ஹரி சரண் தனியாகத் தொழில் தொடங்கிய விதத்தை விவரித்தார். ‘‘தொடர்ந்து எனக்குப் பிடித்த கலையில் கால்பதிக்க வேண்டும் என முயற்சித்ததன் விளைவாக என்னுடைய நண்பர்கள் மற்றும் சகோதரர் சபரி சரண் ஆனந்துடன் இணைந்து 2013-ஆம் ஆண்டு ‘மை கியூட் மினி’ எனும் நிறுவனத்தை ஆரம்பித்து, மினியேச்சர் பொம்மைகள் தயாரிப்பதை முழுநேர வேலையாகச் செய்யத் தொடங்கினேன். அன்றைய காலகட்டத்தில் மினியேச்சர் பொம்மைகள் செய்யச் சரியான பொருளை தேடுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது.

ஆரம்பத்தில் கற்கள் மூலம் மினியேச்சர் பொம்மைகள் செய்ய ஆரம்பித்தேன். ஆனால், அதற்கு அதிக செலவானது. பொம்மைகளின் இறுதி வடிவமும் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை. அதன்பிறகு சிந்தெடிக் செராமிக் மூலம் மினியேச்சர் பொம்மைகளை செய்தேன். அதில், பொம்மைகள் நன்றாக வந்தன. வெளிநாடுகளில் 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் மூலம் இத்தகைய மினியேச்சர் பொம்மைகளைச் செய்து, அதன்பின் ஸ்கேன் செய்து பிரின்ட் எடுத்து முழுக்க தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே செய்வார்கள். ஆனால், நாங்கள் அப்படியில்லை. முற்றிலும் கைகளாலேயே பொம்மைகளைத் தயார் செய்கிறோம். இதன் மூலம், பொம்மைகளின் இறுதி வடிவம் சிறப்பானதாக இருக்கிறது.

தொழில் ஆரம்பித்த காலகட்டத்தில், பூங்காக்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள், பெருநிறுவனங்களுக்குத் தேவைப்படும் சிற்பங்களை கல்லில் வடித்து கொடுத்துக் கொண்டிருந்தேன். சிறிய அளவில் வருமானம் வந்தாலும், மனம் என்னவோ பெரிய அளவில் இத்துறையில் சாதிக்கவேண்டும் எனச் சொல்லிக்கொண்டேயிருந்தது. அதனால், கணினியில் இக்கலை குறித்து தேடியபோது பல தகவல்கள் கிடைத்தன. இயற்கையாக எனக்குள் இருந்த கலையும், தேடலில் கிடைத்த பாடங்களும் என்னைப் புது முயற்சியில் செயல்பட வைத்தன. அதுதான் ஒரு மனிதரையோ அல்லது விலங்கையோ, பொருளையோ மிகச் சிறிய அளவில் வடிவமைப்பது, அதில் நவீனத்துவத்தைப் புகுத்துவது என்பதில் தொடர் பயிற்சியும் முயற்சியும் செய்தேன். ஒரு முழுமையான திறன் மேம்பாடு கிட்டியது’’ என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

‘‘நம் வாழ்வில் மறக்க முடியாத அன்புக்குரியவர்களின் அழகிய தருணங்களில், நினைவுகளில் அழியாத பரிசுகளையே கொடுக்க விரும்புகிறோம். திருமணம், பிறந்த நாள் விழா, காதலர் தினம் என எல்லா நிகழ்வுகளிலும், நாம் மிகவும் மெனக்கெடுவது இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் இருக்கும். என்ன பரிசுப்பொருள் வாங்கிக்கொடுப்பது என்பதை நிகழ்ச்சிக்குப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே யோசித்துக் கொண்டிருப்போம். பொதுவாக கிஃப்ட் என்றவுடனேயே காபி மக், சுவர்க்கடிகாரம், கைக்கடிகாரம், கப் அண்ட் சாசர் என வழக்கமாக நடைமுறையிலுள்ள பொருட்கள்தான் பெரும்பாலானோருக்கு நினைவில் வரும்.

ஆனால், நம் விருப்பமானவர்களுக்கு அவரையே பரிசாக அளித்தால் எப்படியிருக்கும்? ஆச்சரியமாக இருக்குதா? அதைத்தான் நான் செய்தேன். நாம் யாருக்குப் பரிசு கொடுக்கப்போகிறோமோ, அவர்களையே சிறிய அளவில் மினியேச்சர் பொம்மைகளாகச் செய்து தருகிறேன். இதில், அவர்கள் அன்பாக வளர்த்து வரும் நாய், பூனை உள்ளிட்ட மறக்கமுடியாதவற்றின் போட்டோக்களை எல்லாம் வடிவமைக்கக் கொடுத்தனர். ஏனெனில், கடைகளில் ஒரு பொம்மை வாங்குவதற்கும், நாம் வீட்டில் அன்பாக நேசித்து வளர்த்த மறக்க முடியாத ஒரு உருவத்தை வைத்துப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது அல்லவா?

எனது கலைப் படைப்புகளைச் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் உ்ள்ளிட்டவற்றில் பதிவிட்டேன். பாராட்டுகளுடன் நல்ல வரவேற்பும் கிடைத்தது. நிறைய ஆர்டர்கள் வரத்தொடங்கின. முழுநேரப் பணியாகச் செய்ய எனது உதவிக்கு ஆட்களை நியமித்தேன். ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதைவிட இன்றைக்கு பலருக்கு வேலை கொடுக்கும் ஒரு தொழில்முனைபவராக வளர்ந்திருக்கிறேன். இன்றைக்கு ஒரு மாதத்திற்கு எண்ணூறுக்கும் மேற்பட்ட மினியேச்சர் பொம்மைகள் வடிவமைக்கும் அளவுக்குப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

நம் நாடு மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார் சரண்.மினியேச்சர் உருவாக்கப்படும் விதம் பற்றி கூறும்போது, ‘‘ஒவ்வொருவரும் அவரவர் மனம் கவர்ந்தவர்களின் மினியேச்சர்களை அவர்களுக்குப் பரிசளிக்க விரும்பினால், எப்போது பரிசளிக்க வேண்டுமோ, அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவர்களின் புகைப்படத்தைக் கொடுத்து ஆர்டரை புக் செய்துவிட்டால் போதும். ஏனெனில், ஒரு மினியேச்சர் பொம்மை தயார் செய்ய 10 நாட்களாகும் என்றாலும், அதனை தத்ரூபமாக நேர்த்தியாக வடிவமைக்கவும் அது அவர்களின் கைகளில் போய்ச் சேரவும் அதிக நாட்கள் தேவைப்படுகிறது.

மார்பிள்ஸ் கொண்டு கைவேலைப்பாடுகளால் இந்த உருவங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால், சூழலியலுக்கு எந்தவிதப் பாதிப்பும் கிடையாது என்பது அதன் சிறப்பம்சம். கிட்டத்தட்ட ஒரு மினியேச்சரை அது எப்போதும் தானாகச் சேதமடையாது என்ற வாக்குறுதியுடன் வடிவமைத்துக் கொடுக்கப்படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது. மனிதர்கள் சிறிய பொம்மைகளாகி சிரித்துக்கொண்டிருப்பதை யார்தான் விரும்ப மாட்டார்கள். இனிமேல் என்ன பரிசுப்பொருள் வாங்கவேண்டும் என்பதை யாரும் யோசிக்கவே வேண்டாம். அவர்களை அவர்களுக்குப் பரிசளிக்கலாம். இக்கலையை வளர்ப்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது அடுத்தகட்ட முயற்சியாக உள்ளது’’ என்றார் இளம் தொழில்முனைவோரான  ஹரி சரண்.

- தோ.திருத்துவராஜ்.