வளரும் தொழில்நுட்பமும் ஆபத்துகளும்! தேவை முன்னெச்சரிக்கை!



எச்சரிக்கை

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் இன்டர்நெட் மயமாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் கணினி மயமாகிவிட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்று செல்லான் நிரப்பி அவர்கள் கணக்கில் பணம் செலுத்துவோம். ஆனால், இப்போது அதை நாம் இருந்த இடத்திலிருந்தே நம் மொபைல் போனிலேயே எளிதாகச் செய்ய முடிவது தொழில்நுட்ப வளர்ச்சியால்தான்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் சாதகங்களும் பாதகங்களும் பிரிக்க முடியாதைகளாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. பாதகங்கள் எவை என்பதை நாம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியம். நமது மொத்த வங்கி சேமிப்பும் ஒரு பாஸ்வேர்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, நமது போனில் நாம் பதிவிறக்கும் ஆப்களுக்கு, நமக்கே தெரியாமல் நமது தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். இந்தத் தகவல்களை ஹேக்கர்கள் கைப்பற்றும் பட்சத்தில், அவர்களால் நமது மொபைல் போன், கணினி மற்றும் வங்கிக் கணக்குகளில் எளிதாக நுழைய முடியும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்து சைபீக் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் (ZYBEAK TECHNOLOGIES Pvt Ltd) நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

‘‘தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை உள்ள அளவுக்குத் தீமையும் உள்ளதால் இன்றைக்குப் பலபேர் ஏராளமான நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றனர். இந்தத் தொழில்நுட்பம் பெரும் கம்பெனிகளின் கைகளில் உள்ளது. அந்தத் தொழில்நுட்பக் கம்பெனிகள் அரசாங்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன. பின்னர் அரசாங்கங்களின் உதவியுடன் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இதன் ஆபத்துகள் பயங்கரமானவை.

தொலைத்தொடர்புத் துறையில், 1970-களில் முக்கியமான திருப்பமொன்று ஏற்பட்டது. அலைபேசிகளின் அறிமுகம், கம்பிகளில்லாத தொலைபேசி உரையாடலைச் சாத்தியமாக்கியது. இது ‘1ஜி’ எனப்பட்டது. ‘ஜி’ என்பது, தலைமுறையைக் குறித்தது (G- Generation). தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தியது. ‘அனலொக்’ தொழில்நுட்பத்திலிருந்து, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கான மாற்றம் ‘2ஜி’ எனப்பட்டது. அதைத் தொடர்ந்து, திறன்பேசிகளின் வருகை, ‘3ஜி’யை நோக்கி நகர்த்தியது. வேகமான இணைய பாவனையைச் சாத்தியமாக்கிய தொழில்நுட்ப மாற்றம், ‘4ஜி’ எனப்பட்டது. இப்போது 5G தொழில்நுட்பம் வரை வந்துள்ளது. இத்தோடு நிற்கப்போவதில்லை, அடுத்தடுத்த ஜி-க்கள் வந்துகொண்டேதானிருக்கும்.’’ என்று தகவல் தொடர்புத்துறை வளர்ச்சி நிலையை விவரித்ததோடு அவற்றால் விளையும் ஆபத்துகளையும் சுட்டிக்காட்டினார் ராமச்சந்திரன்.

‘‘பல்வேறு கம்பெனிகள், செயற்கை நுண்ணறி தொழில்நுட்பத்தையும் தானியங்கி தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துவதன் மூலம், ஏராளமான வேலையிழப்புகளைத் தோற்றுவித்துள்ளன. இதன் விளைவால் ஏற்படக்கூடிய அமைதியின்மையையும் எழுச்சிகளையும் தடுப்பதற்கான வழிகளையும் தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே இந்தக் கம்பெனிகள் உருவாக்கியுள்ளன. அதில் ஒன்றே விர்ச்சுவல் வேர்ல்டு. 5G தொழில்நுட்பமானது, மக்களை மின் உணர்திறன்மிக்கவர்களாக (electro-hyper sensitive-EHS) மாற்றிவிடும். மின்காந்தப்புலத்தின் (Electromagnatic Field-EMF) தாக்கத்துக்கு உள்ளாகுபவர்கள் மின் உணர்திறன் மிக்கவர்களாக மாறுகிறார்கள். இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். முக்கியமாக மறதி, எதிலும் கவனம் செலுத்த இயலாமை, இதயத்துடிப்பு அதிகரித்தல், சோர்வும் களைப்பும், காது, கண் போன்றவற்றில் வலி ஏற்படுதல், வீங்குதல் உள்ளிட்டவை இதன் சில பாதிப்புகள் ஆகும்.

5G radiofrequency கதிர்வீச்சானது மூன்று வகையான கதிர்வீச்சுகளைப் பயன்படுத்துகிறது. முதலாவது, குறைந்த சக்தியுள்ள வானொலி அலைகள். இரண்டாவது, அதைவிட அதிக சக்தி யுள்ள நுண்ணலைக் கதிர்வீச்சு. மூன்றாவது, மிக அதிக அளவில் சக்தியைக் கொண்ட மில்லிமீட்டர் அலைகள். இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், மில்லிமீட்டர் அலைகள், 5ஜி-யிலேயே முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 4G-யானது 6 GHz வரையான அதிர்வெண்களைப் பயன்படுத்துகிறது. அதேவேளை, 5G-யானது 30 GHz முதல் 100 GHz வரையான அதிர்வெண் அளவில் செயல்படுகிறது. மனிதகுலம், இதுவரை இவ்வளவு அளவிலான அதிர்வெண்ணுக்கு உட்பட்டது கிடையாது. இதன் மிகப்பெரிய ஆபத்து யாதெனில், கதிர்வீச்சோ, மின்காந்தப்புலமோ, அதிர்வெண்ணோ நம் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே, எதையும் கட்டுப்படுத்தும் வலு நம்மிடம் இல்லை.’’ என்கிறார். மேலும் தொடர்ந்த ராமச்சந்திரன் ‘‘5Gயின் பெயரால் மனிதகுலத்துக்கு எதிரான சத்தமில்லாத போர் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க நாம் கண்ணைத் திறந்துகொண்டிருக்கும்போதே நம் வீட்டுக்குள் புகுந்து திருடுவதுபோல், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஹேக் செய்வது, நம் மெயில் ஐடியில் புகுந்து தகவல்களைப் வேவு பார்ப்பது, வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இந்த ஆபத்துகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள உங்கள் கணினியில் அப்டேட் செய்யப்பட்ட ஆன்டி-வைரஸைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் இணைய இணைப்புகளை என்கிரிப்ட் செய்யுங்கள். எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். பிறந்த தேதி, பெயர், இடம் உள்ளிட்ட தகவல்களைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். எண்கள், எழுத்துகள், குறியீடுகள் ஆகியவற்றைக் கடவுச்சொல்லில் பயன்படுத்துங்கள். வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு வித்தியாசமான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். ஒரு தளம் ஹேக் செய்யப்பட்டாலும், மற்றவற்றைப் பாதுகாக்கலாம். உங்கள் கடவுச்சொற்கள் மற்றும் முக்கியமான குறியீடு (PIN) நம்பர்களை எஸ்.எம்.எஸ். போன் அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டாம். ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, இடையில் தோன்றும் பாப்-அப் விளம்பரங்களைக் கிளிக் செய்யாதீர்கள். அதேபோல், எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சலில் வரும் விளம்பரங்களைத் தவிர்க்கவும்.

பலர் பயன்படுத்தும் கணினியில் பணப்பரிவர்த்தனை செய்வது ஆபத்தானது. சைபர் கபே, பொதுவான வைஃபை ஆகிய வற்றில் பணப்பரிவர்த்தனை செய்யவேண்டாம். உங்களின் ரகசிய தகவல்களைக் கேட்கும் மின்னஞ்சல்கள் குறித்து கவனமாக இருக்கவும். அதேபோல் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்க செல்போனை தூரத்தில் வைத்து ஸ்பீக்கரில் போட்டு பேசவும். முடியவில்லையென்றால், ஹெட்போன் மூலம் பேசவேண்டும். அதுவும் அதிக நேரம் அதனைப் பயன்படுத்துவது ஆபத்து. நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் ஓரளவேனும் குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொடுக்காமல் இருக்கலாம்’’ என்று முன்எச்சரிக்கை வழிகளைப் பட்டியலிட்டு முடித்தார் ராமச்சந்திரன். -

தோ.திருத்துவராஜ்