கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட சூரியன் பதிப்பக நூல்!



‘சூரியன் பதிப்பகம்’ வெளியிட்ட எழுத்தாளர் காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கலக்கலாம் தமிழில் என்ற நூல் நெல்லை சதக்கத்துல்லா கல்லூரில் பி.ஏ. கணினி தமிழ் 3-ம் ஆண்டு மாணவர்களுக்குப் பிரதான பாடமாக நடப்புக் கல்வியாண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. தினகரன் குழுமத்தின் கீழ் இயங்கிவரும் சூரியன் பதிப்பகம் வாயிலாகக் கல்வி, கலை, இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுவருகின்றது.

இதில் சென்னையில் இயங்கிவரும் ‘காம்கேர்’ கணினி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய ‘கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற புத்தகம் மிகவும் பிரபலமாகிவருகிறது. இந்தப் புத்தகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட நெல்லை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா தன்னாட்சிக் கல்லூரியின் நிர்வாகம் பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவுசெய்தது. இதனையடுத்து நிர்வாக மற்றும் பாடத்திட்டக் குழு அனுமதியுடன் கல்லூரி முதல்வர் முகம்மது சாதிக், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சவுந்திர மகாதேவன் ஆகியோர் இந்தப் புத்தகத்தைப் பாடத்திட்டத்தில் சேர்க்க ஒப்புதல் அளித்தனர்.

இந்த உயரிய அங்கீகாரத்தை ஏற்கனவே தொலைபேசி வாயிலாக காம்கேர் கே.புவனேஸ்வரிக்கு தெரிவித்த கல்லூரி நிர்வாகம், அதனை உறுதி செய்யும் விதமாக அவருக்கு வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளது. இதையடுத்து நடப்புக் கல்வியாண்டிலேயே பி.ஏ., தமிழ் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு 5-வது பருவத்திற்கான பாடத்தில் இந்தக் கல்வி ஆண்டு முதல் சேர்த்துள்ளனர். இதற்கான 3 நூல்களை பார்வையிட்ட பாடத்திட்டக்குழு சூரியன் பதிப்பகத்தின் வெளியீட்டைப் பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் 5-ம் பருவ மாணவர்களுக்கு முதன்மைப் பாடங்களில் ஒன்றாகச் சூரியன் பதிப்பகத்தின் புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சவுந்திர மகாதேவன் கூறும்போது, ‘‘காம்கேர் கணினி நிறுவன தலைமைச் செயல் அலுவலர் காம்கேர் கே. புவனேஸ்வரி இணையம், அலைபேசி தொடர்பாக சுமார் 100 புத்தகங்களைத் தயாரித்துள்ளார். நாங்கள் பாடத்திட்டமாக சேர்த்துள்ள இந்தப் புத்தகம் மூலம் கைபேசியில் தமிழ் எழுத்துரு (ஃபாண்ட்) பயன்படுத்துவது எப்படி? கணினி யூனிக்கோடு (ஒருங்குறியில் தட்டச்சு செய்வது) பயன்பாடு எப்படி? இணையம், ஊடகம் மூலம் தரமான இணைய கட்டுரைகள் வெளியிடும் முறை, இக்கல்வி மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும்’’ என்றார். இதுகுறித்து பேசிய நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி, ‘‘நான் எழுதி, சூரியன் பதிப்பகம் வெளியிட்ட நூல் கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன. பல நூல்கள் பரிசீலிக்கப்பட்டதில் நான் எழுதிய ‘கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற நூல் தேர்வு செய்யப்பட்டிருப்பது என் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன்’’ என்றார்.