பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களில் தேசிய ஒலிம்பியாட் தேர்வு!*வழிகாட்டல்

இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்வெளி இயல் மற்றும் இளம் அறிவியல் துறைகளுக்கு 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பன்னாட்டு ஒலிம்பியாட் மாநாட்டில் பங்கேற்பதற்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான தேசிய ஒலிம்பியாட் தேர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஒலிம்பியாட் திட்டம்

உலகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் துறையில் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ‘பன்னாட்டு ஒலிம்பியாட்’ (International Olympiad) போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் உயர்ந்த நிலைத் தேர்வாகக் கருதப்படும் இத்தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். பன்னாட்டு ஒலிம்பியாட் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்வெளி இயல் மற்றும் இளம் அறிவியல் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டுவருகின்றன. பன்னாட்டு ஒலிம்பியாட் தேர்வினை இந்திய இயற்பியல் ஆசிரியர் கழகம் (Indian Association of Physics Teachers IAPT) மற்றும் பாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Center for Science Education, TIFR (HBCSE)) ஆகியவை நடத்துகின்றன.

ஐந்து நிலைகள்

இந்திய அரசு, பன்னாட்டு ஒலிம்பியாட் மாநாட்டில் பங்கேற்பதற்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக ‘இந்தியத் தேசிய ஒலிம்பியாட் திட்டம்’ (Indian National Olympiad) எனும் பெயரிலான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மேற்காணும் அறிவியல் துறைகளில் பன்னாட்டு ஒலிம்பியாட் மாநாட்டில் பங்கேற்கத் தகுதியானவர்கள் ஐந்து நிலைகளில் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல் நிலைத் தேர்வாகத் தேசியத் தரத்தேர்வு (National Standard Examination) இருக்கிறது. இத்தேர்வு பாடங்கள் வழியாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. முதல்நிலைத் தேர்வில் மாநிலங்கள் வாரியாக, ஒவ்வொரு பாடத்திலும் உயர் மதிப்பெண் பெற்றவர்களில் மொத்தம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பாடவாரியாக இந்திய தேசிய ஒலிம்பியாட் தேர்வு நடத்தப்பெறும். மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதிகள் (State and UT) ஒவ்வொன்றிற்கும் குறைந்தது ஒரு மாணவராவது இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்நிலையில் தேர்வு பெற்றவர்களுக்கு, இந்திய தேசிய ஒலிம்பியாட் (Indian National Olympiad) எனப்படும் தேர்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இரண்டாம் நிலையில் தேர்வு பெற்றவர்களுக்கு அறிவியல் திசையமைவு மற்றும் தேர்வு முகாம் (Orientation - cum Selection Camp) எனப்படும் தேர்வு Homi Bhabha Center for Science Education, TIFR (HBCSE) மையத்தில் கருத்தியல் மற்றும் சோதனை வழி அமர்வுகள் (Theoretical & Experimental Sessions) மூலம் நடத்தப்படும். இத்தேர்வுக்குப் பின்னர், வானியல் (Astronomy), இயற்பியல் (Physics) பிரிவுகளில் தலா 5 மாணவர்களும், வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology) பிரிவுகளில் தலா 4 மாணவர்களும், இளம் அறிவியல் (Junior Science) பிரிவில் 6 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

மூன்றாம் நிலையில் தேர்வு பெற்ற மாணவர்களுக்குப் புறப்பாட்டுக்கு முந்தைய முகாம் (Pre Departure Camp) எனப்படும் பயிற்சி மற்றும் தேர்வு பாபா அறிவியல் கல்வி மையத்தில் (Homi Bhabha Center for Science Education, TIFR (HBCSE)) கருத்தியல் மற்றும் சோதனை வழி அமர்வுகள் (Theoretical & Experimental Sessions) வழியில் நடத்தப்படும் நான்காம் நிலையில் தேர்வு பெற்ற மாணவர்கள் ஐந்தாம் நிலையான பன்னாட்டு ஒலிம்பியாட் மாநாட்டிற்கு (International Olympiad) பாடங்கள் வாரியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு இவர்களுக்கு கருத்தியல் மற்றும் சோதனை வழிப் போட்டிகள் (Theory & Experiment Competition) நடத்தப்பெறும்.

கல்வி மற்றும் வயது வரம்பு

இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்வெளி இயல் ஆகிய துறைகளிலான ஒலிம்பியாட் தேர்வுக்கு 30.11.2019 அன்று பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்குக் கீழுள்ள வகுப்புகளில் படித்துவரும் இந்திய மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ள முடியும். கலந்துகொள்பவர்கள் 1.7.2000 முதல் 30.6.2005 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். இளம் அறிவியல் ஒலிம்பியாட் தேர்வுக்கு 30.11.2019 அன்று பத்தாம் வகுப்பு அல்லது அதற்குக் கீழுள்ள வகுப்புகளில் படித்துவரும் இந்திய மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ள முடியும். கலந்துகொள்பவர்கள் 1.1.2005 முதல் 31.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பதிவு செய்தல்

இத்தேர்வில் பங்கேற்க பள்ளிகள் மூலமாக மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.150 பதிவுக் கட்டணத்தை அருகிலுள்ள தேர்வு மையத்தில் செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும். http://www.iapt.org.in அல்லது http://olympiads.hbcse.tifr.res.in எனும் இணையதளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு மையங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் அருகிலுள்ள மையத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். பதிவு செய்துகொள்ள கடைசி நாள்: 20.08.2019.

தேர்வுகள்

இளம் அறிவியல் பிரிவுக்கு (NSEJS) 17.11.2019 அன்றும், இயற்பியல் (NSEP), வேதியியல் (NSEC), உயிரியல் (NSEB), விண்வெளி இயல் (NSEA) பிரிவுகளுக்கு 24.11.2019 அன்றும் முதல் நிலைத் தேர்வான தேசியத் தரத் தேர்வு (National Standard Examination) நடத்தப்படும். இத்தேர்வு முடிவுகள் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படலாம். அதன் பின்னர், இரண்டாம் நிலையிலான இந்திய ஒலிம்பியாட் தேர்வு 01.02.2020, 02.02.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான முடிவுகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியாகும். அதன் பிறகு, அறிவியல் திசையமைவு மற்றும் தேர்வு முகாம் (Orientation - cum Selection Camp) 2020 ஆம் ஆண்டு மே முதல் ஜூன் வரையிலான காலத்தில் நடத்தப்பெறும்.

முந்தைய கேள்வித்தாள்கள்

இத்தேர்வின் முந்தைய ஐந்து ஆண்டு களுக்கான கேள்வித்தாள்களை இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்வெளி அறிவியல் பிரிவுகள் மற்றும் இளம் அறிவியல் பிரிவுகளுக்கு ரூ.50-ஐ ஆன்லைன் அல்லது IAPT ன் வங்கிக் கணக்கில் செலுத்தி பெற்றுகொள்ளலாம். ‘Account Name: Indian Association of Physics Teachers, Account Number: 20768203191, Bank: Allahabad Bank, Branch: Kakadeo Kanpur (UP), IFSC Code: ALLA0210490, Tele phone: 0512-2500075, 09935432990’ எனும் வங்கிக் கணக்கில் செலுத்தி முந்தைய கேள்வித்தாள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் தகவல்கள்

பன்னாட்டு அறிவியல் ஒலிம்பியாட் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைப் பெற மேற்காணும் இணையதளங்களைப் பார்க்கலாம் அல்லது www.iaptexam.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். அருகிலுள்ள ஒலிம்பியாட் தேர்வுகளுக்கான தேர்வு மையத்தையும் அணுகலாம். இந்த ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்கான தேசியத் தரத் தேர்வு (National Standard Examinations) எனப்படும் முதல்நிலைத் தேர்வு குறித்த தகவல்களுக்கு iapt.nse@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ, 080- 49087030 எனும் தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பெறலாம்.

- வெங்கட் குருசாமி