தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்!*சர்ச்சை

தமிழகத்தில் பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை எனவும், இந்த ஆண்டு (2019) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரண்டு லட்சம் குறைந்துள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது எனவும் கல்வி அமைச்சர் சமீபத்தில் தெரிவித்தார். மாணவ - மாணவிகள் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் நிலை மாறி, அரசுப் பள்ளியைத் தேடி வரும் நிலையை உருவாக்கி உள்ளோம் எனவும் நகைச்சுவை ததும்பப் பேசியுள்ளார். உண்மைநிலை என்ன? என்பது குறித்து கல்வியாளர் கண.குறிஞ்சியிடம் பேசினோம். நம்முடன் அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…

‘‘இன்றும் பல மேனிலைப் பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பெரும் இழப்பிற்கு உள்ளாகிவருகின்றனர். அடிப்படை வசதிகளில் முக்கியமானதான கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள் இன்றும்கூட உள்ளன. கழிப்பறை உள்ள பள்ளிகளில் அதைத் தூய்மைப்படுத்தப் பணியாளர்கள் இல்லை என்ற நிலையும் உள்ளது. இவ்வளவு தடைகளுக்கும் இடையே எப்படியோ கடும் சிரமப்பட்டு, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் மாணாக்கர்களை 25% ஒதுக்கீட்டில் அப்படியே தனியார் பள்ளிகளுக்கு அரசு தாரைவார்க்கும் மிகக் கேவலமான நிலைதான் நீடித்து வருகிறது.

திறமையான மாணாக்கர்கள் தனியார் பள்ளி

களுக்கு மடைமாற்றப்படும்போது, அவர்களுக்கான கட்டணத்தையும் அரசே தனியார் பள்ளிகளுக்குத் தவறாமல் செலுத்திவிடுகின்றது. இது மிகப் பெரிய மோசடி. சிறந்த மாணாக்கர்களுக்குத் தனியார் பள்ளிகள் இலவசமாகக் கல்வி கற்றுத்தர வேண்டும் என அரசு வலியுறுத்துவதில்லை. மாறாக, அறிவுக்கூர்மை மிக்க மாணவர்களையும், அவர்களுக்காகும் கல்விக் கட்டண தொகையையும் தனியாருக்கு வழங்குகின்றது அரசு. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இவ்வாறு அள்ளித்தரும் தொகையைக் கொண்டு, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தலாம் எனும் சிந்தனையே அரசுக்கு வருவதில்லை. இந்த லட்சணத்தில் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்திவிட்டதாக வாய்ச்சவடால் வேறு. இப்படிப்பட்ட காரணங் களால் மாணவர்கள் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் குறைந்துவிடுகின்றது. அதையே காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூடும் வேலையும் நடக்கிறது’’ என்கிறார் கல்வியாளர் கண.குறிஞ்சி.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘இந்த அவலம் போதாது என்று எல்கேஜி, யூகேஜி நிலையிலேயே ஆங்கிலவழியில் அரசே வகுப்புகளை நடத்துகிறது. மழலையர் நிலையிலேயே தாய்மொழியைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கிலத்தை இளந்தளிர்களின் உள்ளத்தில் திணிக்கும் இந்தக் கேடுகெட்ட செயலை இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யவில்லை என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். தாய்மொழியில்தான் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும் எனக் கல்வியாளர்களும், உளவியலாளர்களும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். குறைந்தபட்சம் மழலையர் மற்றும் தொடக்க நிலை வகுப்புகள் கட்டாயம் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக உள்ளது.

‘ஒரு குழந்தைக்குப் பயிற்றுமொழியாகத் தாய்மொழிதான் இருக்கமுடியும் என்பது வெளிப்படையான உண்மையாகும். உளவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், புரிந்துகொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும், அறிவு இயல்பாகச் செயல்படுவதற்குரிய பொருள் மிக்க சமிக்ஞைகளைக்கொண்ட கட்டமைப்பாகத் தாய்மொழிதான் உள்ளது. சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், தாம் சார்ந்துள்ள சமூகத்தில் உறுப்பினர்களிடையேயான அடையாளத்தை அறியும் வழியாகத் தாய்மொழிதான் உள்ளது. கல்வியியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், அறிமுகமில்லாத மொழிவழியாகக் கற்பதைக் காட்டிலும், தாய்மொழிவழியாக மிகவும் விரைவாகக் கற்றுக்கொள்ள முடியும். எனவே, தாய்மொழியைக் கல்வியில் எந்த அளவிற்கு நீட்டிக்க முடியுமோ, அந்த அளவிற்கு நீட்டித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ எனப் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ளது.

அடுத்து, பள்ளிக் கல்வியில் மிகப் பெரும் சிக்கலாக இருப்பது நீட் நுழைவுத் தேர்வாகும். ‘தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை இல்லை’ எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட பிறகு, அதற்காக உருப்படியான எந்த முயற்சியும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தது தமிழக அரசு. சட்டமன்றத் தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டதைக்கூட மறைத்துவிட்டு, இப்போது மக்களை ஏமாற்றச் சொற்சிலம்பம் ஆடிக்கொண்டிருக்கிறது. இடைக்கால ஏற்பாடாக நீட் தேர்வுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது குறித்துத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் கல்வி அமைச்சர். ஆனால், சென்ற ஆண்டு நீட் தேர்வில் பயிற்சிபெற்ற பல்லாயிரக்கணக்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கர்களில் வெறும் 8 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வாகியுள்ளனர் என்பது கவலைதரக்கூடிய புள்ளி விவரமாகும்.

அதேபோல் இவ்வாண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து திருச்சியைச் சார்ந்த கீர்த்தனா எனும் ஒரே ஒரு மாணவி மட்டும் மருத்துவக் கல்லூரிக்கு அரசு ஒதுக்கீட்டில் தேர்வு பெற்றுள்ளார். அதுவும் சுயநிதி மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டில்தான் அவர் சேர்ந்துள்ளார் என்பது அரசுக்குப் பெருமை சேர்க்கும் செய்தி அல்ல. அது மட்டுமல்ல. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளில் எத்தனை பேருக்கு மருத் துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது என்ற அதிகாரப்பூர்வமான பட்டியல் வெளியிடப்படவே இல்லை. அதேபோல் அரசு சார்பாக நடத்தப்பட்ட நீட் பயிற்சி வகுப்புகளில் பயின்றவர்களில் எத்தனை பேருக்கு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது என்ற விவரமும் ரகசியமாகவே உள்ளது. இவற்றில் எல்லாம் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இப்படிக் குழப்பங்களின் கேந்திரமாகப் பள்ளிக் கல்வித்துறை அல்லாடிக்கொண்டிருப்பதால், அதிகம் பாதிக்கப்படுவது மாணவ சமுதாயம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும்தான்’’ என்றார் கண.குறிஞ்சி.


- தோ.திருத்துவராஜ்.
படம் : ஏ.டி.தமிழ்வாணன்